“விஜய் மாநாட்டில் நான் பங்கேற்பது சரியாக இருக்காது..!” – சொல்கிறார் சீமான்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நாம் தமிழர் கட்சியின் தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருச்சி எஸ்.பி. வருண்குமாரிடம் நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். எங்களைப் பார்த்தால் மன்னிப்பு கேட்பவர்கள் போல தெரிகிறதா? செல்போன் ஆடியோவை வெளியிட்ட அவர்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். இடைத்தேர்தலில் பல கோடியை கொட்டி, அனைத்து எம்.எல்.ஏ-க்கள் எம்.பிக்கள் எல்லோரையும் ஒரு இடத்தில் கொண்டு வந்த போதும், நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம். நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை. நாங்கள் விலக்கியுள்ளோம்.

சீமான்

பா.ஜ.க மீனவர்கள் விவகாரத்தில் பலவற்றை சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் ஊழல், லஞ்சத்தை ஒழிப்போம் என சொல்லி இருக்கிறார்கள். தேர்தல் பத்திரத்தில் 6,650 கோடி ரூபாய் பணம் வாங்கி உள்ளார்கள். பாகிஸ்தான் நிறுவனத்திடம் இருந்து கூட பணம் வாங்கியுள்ளார்கள். மகாராஷ்டிராவில் ஒரு எம்.எல்.ஏ-க்கு ரூ.32 கோடி வீதம் 132 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு மலைசாமி என்ற மீனவர் கொல்லப்பட்டார். அவர் என்ன தற்கொலை செய்துக்கொண்டாரா? இலங்கை ராணுவத்திற்கும் அவரின் மரணத்திற்கும் சம்மந்தம் இல்லையா?. வாரத்திற்கு தமிழக மீனவர்கள் 4 பேர் சிறைபிடிக்கப்படுகிறார்கள். இலங்கை சிறையில் எத்தனை மீனவர்கள் உள்ளார்கள் என்ற கணக்கு இருக்கிறதா? எல்லை தாண்டி மீன்பிடிப்பதற்கான பிரச்னைக்கு கச்சத்தீவை நாம் எடுத்துக்கொண்டால் நமது எல்லை அதிகமாகி விடும்.

தமிழக மீனவர்கள் சாவதால் மத்திய அரசு இலங்கைக்கு எந்த வித நெருக்கடியும் கொடுக்காமல் சகித்துக்கொள்ளுகிறது. குஜராத் மீனவர் சுட்டுக்கொன்ற போது, போர் வரை தயாராகினார்கள். இந்தி பேசுபவன் தான் இந்தியன், தமிழ் பேசும் நாங்கள் இந்தியன் இல்லையா? பா.ஜ.க ஆளும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கொள்கை வைத்துள்ளது. கர்நாடகாவில் இருந்து தண்ணீர் தர மறுத்து விட்டு ஒரே நாடு, தேசப்பற்று, இறையாண்மை எல்லாம் எதற்காக பா.ஜ.க-வினர் பேசுகின்றனர். சமாதி, கார் பந்தயம், சதுரங்க போட்டி, பஸ் ஸ்டாண்ட் கட்டுவது என கோடிக்கணக்கில் செலவு செய்தார்கள். ஆனால், ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. பெண்கள், கல்லுாரிக்கு செல்லும் பெண்கள், இளைஞர்கள் யாராவது ஆயிரம் ரூபாய் கேட்டார்களா?

சீமான்

மத்திய அரசு நிதியை ஒதுக்கவில்லை என தி.மு.க கூறுகிறது. பா.ஜ.க-வுடன் கொஞ்சி குழாவுகிறது. நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என கோபித்துக்கொண்டு நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகவில்லை. அப்புறம் ஏன் ரூ.100 நாணயம் வெளியிட கொஞ்சி குழாவினீர்கள். அதுக்கும் கொஞ்சிக்கொண்டு இருக்க வேண்டியது தானே? நிதி தரவில்லை என பா.ஜ.க-வுடன் கோபித்துக்கொண்டு இருக்கும் தி.மு.க., கர்நாடகாவில் இருந்து நீர் தரவில்லை என காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வேண்டாம் என ஏன் கோபித்துக்கொண்டு வரவில்லை. நிதியை கேட்டு பெறமுடியாத நிலையில், எதற்கு 40 எம்.பி.,க்கள். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த போதுதான் காவிரி, முல்லைப் பெரியாறு, கட்சத்தீவு பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை. கல்வி, மருத்துவம் மின் உற்பத்தி எல்லாம் பொதுப்பட்டியிலுக்கு போய்விட்டது. தமிழக அரசு என்ன வைத்துள்ளது. ஆனால் தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது என கூறுகிறார்கள்.

எம்.ஜி.ஆர், ஜெயலிலதா-விற்கு அப்பலோ மருத்துமனை, கருணாநிதிக்கு காவிரி மருத்துவமனை என்ற போது அரசு மருத்துவமனை எதற்கு?. பூட்டு போட்டு விட வேண்டியது தானே. முன்னேறிய சாதியினர் முன்னேற்றம் அடைந்த பிறகு அவர்களுக்கு எதற்காக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். படிக்கக் கூடாது, தெருவில் நடக்கக்கூடாது போன்ற கொடுமைகளுக்கு உள்ளானவர்களுக்குதான் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.

விஜய், சீமான்

மதுபானம், சாராயம், கஞ்சா போன்றவற்றால்தான் பாலியல் குற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலைமை நாடு முழுவதும் அதிகமாக உள்ளது. இதனால் கொல்கத்தா பாலியல் வன்கொடுமை, பட்டுக்கோட்டை பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே, நாடு முழுவதும் போதைப்பொருட்கள் கலாசாரத்தை முற்றிலுமாக ஒழித்தால்தான் வருங்கால சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும் . மதுகடையை மூடினால், கள்ளச்சாராயம் வந்து விடும் என தி.மு.க.,வுக்கு கூறுவது பதில் அல்ல. விஜய் மாநாட்டில் நான் பங்கேற்பது சரியாக இருக்காது. அந்த மாநாட்டில் அவர் கோட்பாட்டை பேசுவதற்க்குத்தான் நேரம் சரியாக இருக்கும். தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் உழைக்க நிறைய அரசியல் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88