Israel: மனித கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட பாலஸ்தீன இளைஞர் உயிரிழப்பு; இஸ்ரேலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

இஸ்ரேலால் துப்பாக்கிச்சூட்டுக்குள்ளாகி மனித கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட பாலஸ்தீனிய இளைஞர் உயிரிழந்திருப்பதாகப் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு கூறியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து, பலஸ்தீனிய விடுதலை அமைப்பின் ஒரு பகுதியான கைதிகள் மற்றும் முன்னாள் கைதிகள் விவகார ஆணையம் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையின்படி, உயிரிழந்த இளைஞர் வடமேற்கு கரையிலுள்ள துல்கர்ம் பகுதியின் சைடா நகரை சேர்ந்த ஜாஹிர் ரடாத் (Zaher Raddad) (19).

ஜாஹிர் ரடாத் (Zaher Raddad)

இவரைக் கடந்த ஜூலை 23-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் அஸ்பத் அல்-ஜரப் என்ற பகுதியிலுள்ள வீடுகளை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின்போது இஸ்ரேல் ராணுவம் ஜாஹிரை சுட்டு, ராணுவ வாகனத்தின் முன்புறத்தில் அவரை வைத்து மனித கேடயமாகப் பயன்படுத்திக் கைதுசெய்தது. இவரோடு இன்னும் இரண்டு இளைஞர்களும் இஸ்ரேல் படையால் சுட்டுப் பிடிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய மீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாஹிர் அன்றுமுதல் கவலைக்கிடமான நிலையிலே இருந்துவந்தார். மற்ற இருவர் ஓரளவு லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இத்தகைய சூழலில்தான், ஜாஹிர் இறந்துவிட்டதாக பாலஸ்தீனிய அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. மேலும், ஜாஹிர் மோசமான நிலையில் இருந்தபோதிலும், இஸ்ரேலிய அதிகாரிகள் அவர் சாகும் வரை காவலில் வைத்திருந்தாக பாலஸ்தீனிய அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.

இஸ்ரேல்

ஜாஹிரின் மரணத்துடன் இஸ்ரேலால் சிறைபிடிக்கப்பட்டவர்களில் பாலஸ்தீனியர்களின் பலி எண்ணிக்கை 23-ஆக உயர்ந்திருப்பதாக அவை கூறுகின்றன. இதற்கு பாலஸ்தீன தரப்பிலிருந்து கடும் கண்டனங்களும் வந்துகொண்டிருக்கின்றன. இருப்பினும், இந்த விஷயத்தில் இஸ்ரேல் மௌனமாக இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் நடந்துவரும் இந்த போரில் இஸ்ரேலின் தாக்குதலால் 40,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.