`ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியதற்கு ரூ.1,000 அபராதம்’ – இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த உ.பி போலீஸ்!

உத்தரப்பிரதேசத்தில் ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியதற்காக நொய்டா போக்குவரத்து போலீஸார் ரூ.1,000 அபராதம் விதித்த சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில், நொய்டாவிலிருந்து 200 கி.மீ தொலைவிலுள்ள ராம்பூர் மாவட்டத்தில் வசிக்கும் கார் உரிமையாளர் துஷார் சக்சேனா என்பவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது பற்றி குறுஞ்செய்தி வந்திருக்கிறது. ஆனால், இது தவறுதலாக வந்திருக்கும் குறுஞ்செய்தி என அவர் புறக்கணித்திருக்கிறார்.

கார்

அதன் பின்னர், அவருடைய மின்னஞ்சல் முகவரிக்கு அபராதம் குறித்து செய்தி வந்திருக்கிறது. இது தொடர்பாக, போக்குவரத்து போலீஸாரை அவர் தொடர்புகொண்டபோது, ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து பேசிய துஷார் சக்சேனா, “இந்த அபராத சலான் கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி அனுப்பப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படுவதென்பது பொதுவானதுதான். ஆனால், தற்போது அது என் பிரச்னை அல்ல. ஏனெனில், என்.சி.ஆர் பகுதிக்கு நான் எனது காரை ஓட்டியதேயில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம்தான் கார் வாங்கினேன். அதோடு, காஜியாபாத்திலிருந்து ராம்பூருக்கு வாகனத்தின் பதிவை மாற்றினேன். மேலும், காருக்குள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஏதேனும் விதி இருந்தால், அதிகாரிகள் அதை எழுத்துப்பூர்வமாகக் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். இதனால், விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரத்துசெய்யுமாறு நொய்டா போக்குவரத்து போலீஸாரிடம் அவர் முறையிட்டிருக்கிறார்.

ஹெல்மெட்

இவ்வாறு நடப்பது இது முதன்முறையுமல்ல. ஏற்கெனவே, இதே மாநிலத்தில் ஜான்சி பகுதியைச் சேர்ந்த பகதூர் சிங் பரிஹார் என்பவருக்கு, கார் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாமல் சென்றதாக ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இதை அவர் கேட்டபோது, மக்களவைத் தேர்தல் முடிந்தபிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதுவரையில், அபராதம் விதிக்கப்படக் கூடாது என்பதற்காக காரில் செல்லும்போதெல்லாம் பகதூர் சிங் ஹெல்மெட் போட்டுச் சென்றிருக்கிறார்.