“உங்களின் அருமை, பெருமையெல்லாம் எனக்குத் தெரியும்..!” – பொதுக்கூட்டத்தில் காட்டமான அண்ணாமலை

தமிழக பா.ஜ.க சார்பில் சென்னையில் ‘தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, நாராயணன் திருப்பதி, மாநில செயலாளர்கள் சுமதி வெங்கடேசன், கராத்தே தியாகராஜன், பிரமிளா சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி, நடிகை குஷ்பு, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அண்ணாமலை

இந்த மாநாட்டில் பேசிய அண்ணாமலை, “காமராஜர், எம்.ஜி.ஆர் ஆட்சிக்குப் பிறகு எப்படிப்பட்ட தமிழகத்தை எங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை பார்க்கிறோம். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தமிழ்நாட்டை முந்திக்கொண்டு வளர்ந்து வருகிறது. இந்தியாவின் பெரிய பொருளாதாரமாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு என 40 ஆண்டுகாலமாக இருந்ததை, தற்போது மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு என மாற்றியிருக்கிறார்கள். 2036-ல் தமிழ்நாடு பொருளாதாரத்தில் 6-வது இடத்துக்குச் சென்றுவிடும்.

ஹரியானா அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் மக்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும்தான் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தி.மு.க நிகழ்வில் ரஜினிகாந்த் ‘அரியணை உதயநிதி ஸ்டாலின் கரத்துக்குப் போகும் போது கலவரம் வெடிக்கும்’ என பூசி, மெழுகி, சர்க்கரை தடவி பேசியிருக்கிறார். அப்படித்தான் அவரின் பேச்சை புரிந்துகொள்கிறேன். உதயநிதி கரத்துக்கு ஆட்சி சென்றால், தன் வாரிசுகள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதால்தான் ஒவ்வொரு அமைச்சரும் உதயநிதிக்கு ஜால்ரா போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அண்ணாமலை – உதயநிதி ஸ்டாலின்

தற்போது பழனி முருகனுக்கு தி.மு.க மாநாடு நடத்துகிறது. பழனிக்கோயில் மீது அரசியலுக்காக கை வைத்தவர்கள் மண்ணோடு மண்ணாகிப் போனார்கள் என்பதுதான் வரலாறு. சனாதானம் வேரறுப்போம் எனப் பேசியவர்கள் இன்று பழனியில் முருகனை வைத்து அரசியல் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் பெரியார் ஆட்சி எனக் கூறுகிறார்கள். பெரியார் தமிழ் பண்பாடு குறித்து என்னக் கூறினார்… திருவள்ளுவரை ‘திருவள்ளுவர் காலத்துக்கு ஏற்ற வகையில், ஆரியத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவுப் பற்றி கவலைப்படாமல், நீதி கூறும் முறையில், மத உணர்ச்சியோடு எதையோ கூறிச் சென்றார்’ எனக் கூறியிருக்கிறார்.

தொல்காப்பியன் குறித்து, ‘தொல்காப்பியன் ஆரியக் கூலி, ஆரிய தர்மத்தை தமிழ் இலக்கணமாக செய்துவிட்ட தமிழின துரோகி’ என்றும், கம்பனைக் குறித்து, `கம்பன் இன்றைய அரசியல்வாதியை போன்றவர். முழுப் பொய்யன், முழுப் பித்தலாட்டக்காரன்’ எனவும் தமிழ்ப் புலவர்கள் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். எனவே, முருகனின் தண்டனை நிச்சயம் தி.மு.க-வுக்கு வரும். பா.ஜ.க தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும். பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டுமென்றால், அதன் முதல் தகுதி சொந்த பலத்தில் நிற்க வேண்டும்.

அண்ணாமலை

பா.ஜ.க-வுக்கு இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒரே மாதிரியான எதிரிதான். தி.மு.க என்பது தீய சக்தி. ”யாரையோ பிடித்து, உழைக்காமல், பதவிக்கு வந்த அண்ணாமலைக்கு என்னத் தெரியும்… அண்ணாமலை மைக்கைப் பார்த்தாலே பொய்ப் பேசுவார். வாய் மட்டும்தான் அவருக்கு இருக்கிறது” என எடப்பாடி விமர்சித்துப் பேசியிருக்கிறார். எடப்பாடி அவர்களே…. சிலுவம்பாளையத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அது தொடர்பான வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் மேற்கு தொடர்ச்சி மலையில் ஒளிந்திருந்தார்.

இப்போது தி.மு.க-வில் இருக்கும் ஒரு அமைச்சர், அப்போது அ.தி.மு.க-வின் மூத்த அமைச்சர். அவருடைய கைக் காலைப் பிடித்து அந்த வழக்கிலிருந்து வெளியே வந்து, சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்ற மனிதர் நீங்கள்…. எனவே, தயவு செய்து எனக்கு நேர்மையைப் பற்றி பாடம் எடுக்க வேண்டாம். அதே கொங்கு பகுதியின் உங்கள் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்தவன் நான். உங்களின் அருமை, பெருமை எல்லாம் எனக்குத் தெரியும். கூவத்தூரில் நடந்தது கட்சிப் பொதுச் செயலாளரை தேர்வு செய்த நிகழ்வா… அது ஒரு அலங்கோலம்.

எடப்பாடி பழனிசாமி

கூவத்தூரில், எந்த எம்.எல்.ஏ-வுக்கு மாதம் மாதம் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக நடந்த பெட்டிங் முறை. அதன்பிறகு தவழ்ந்து, காலில் விழுந்து, பதவியைப் பெற்ற எடப்பாடி, 10 ஆண்டு காலமாக 10 பைசா கூட வாங்காமல் பச்சை இங்கில் கையெழுத்துப் போட்ட இந்த அண்ணாமலையை பற்றிப் பேச, எடப்பாடி எனும் தற்குறிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அகந்தையில் பேசுகிறார் எடப்பாடி. 2026-ல் தூக்கி எறியப்படுவீர்கள். எனக்கும் அ.தி.மு.க-வுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு சண்டையா… அ.தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டும் எனக் கூறும் தலைவர்கள் இங்கு இருக்கிறார்கள்.

2019-ல் நாடாளுமன்றத் தேர்தலின் போது, நம்முடன் கூட்டணியில் இருக்கும் தலைவர், எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, ‘பிரதமர் வாரணாசியில் வேட்பு மனுத்தாக்கல் செய்யுச் செல்லும் நிகழ்வில், பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கும் முதல்வர்கள் கலந்துக்கொள்கிறார்கள். அதில் கலந்துக்கொள்ளலாம்’ என அழைப்பு கொடுத்தார். அப்போது எடப்பாடி, ‘தோற்கப்போகும் மோடிக்காக நான் ஏன் வாரணாசி வரவேண்டும்’ எனக் கூறினார். அன்றிலிருந்து மானமுள்ள இந்த அண்ணாமலை கூட்டணிக்காகக் கூட எடப்பாடி பழனிசாமியை எப்போதும் ஏற்றுக்கொண்டது கிடையாது.

அண்ணாமலை

நான் இந்தக் கட்சியில் கிளைத்தலைவராக, ஒன்றியத் தலைவராக பணியாற்றவில்லைதான்… ஆனால், நான் இந்தக் கட்சியில் சேர்ந்தது, இரண்டு திராவிடக் கட்சிகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகதான். பெண்களுக்கு முதல் மரியாதை கொடுக்கும் கட்சி, ஊழல் இல்லாத கட்சி, வலிமையான கட்சி, சாதாரண மனிதரை அதிகாரத்துக்கு கொண்டுவரும் கட்சி என இந்தக் கட்சி மீது ஒவ்வொருவருக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கும். எனவே, நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என நினைத்தால், இரண்டு திராவிட கட்சிகளையும் ஒழித்துக் கட்ட வேண்டும். இரண்டும் நமக்கு பரம எதிர்கள்தான். அதில் தெளிவாக இருக்க வேண்டும்.

பிரதமர் மோடி அரசியலையும், தனிமனித வாழ்க்கையையும் வேறுபடுத்தி பார்க்கக் கூடியவர். 2017-ல் கலைஞர் இல்லம் சென்ற பிரதமர் மோடி, கலைஞரிடம் ‘டெல்லி பிரதமர் இல்லத்தில் என்னுடன் 15 நாள்கள் மட்டும் தங்குங்கள்’ எனக் கேட்டுக்கொண்டார். அதன்படிதான் 100 ஆண்டுகளை கடந்த, தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராக இருந்த ஒருவருக்கு மரியாதை செய்யும் விதமாகதான் கலைஞர் நாணய வெளியீட்டு விழாவுக்குச் சென்றோம். கலைஞர் நம்பர் ஒன் ஊழல்வாதி என்பதிலும், தமிழ்நாட்டுக்கு மாற்று அரசியல் வேண்டும் என்பதிலும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா

அதே நேரம் கலைஞர் தமிழ்நாட்டுக்கென சேவைகளையும் செய்திருக்கிறார். இது இரண்டையும் பிரித்து பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. நன்றாக சிந்தித்து, நிதானமாக சொல்கிறேன்… எப்போதும் தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் தமிழ்நாட்டில் உறவு இருக்காது. அதற்கான வாய்ப்பும் இல்லை. இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் கிடையாது. அங்கு இருப்பவர்கள் எல்லோரும் அடிமைகள்.

உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க எல்லா இடத்திலும் போட்டியிடும். அதற்காக தயாராக வேண்டும். பாதி தூரத்தை தாண்டி விட்டோம். புலியை பார்த்து பூனை சூடுபோட்டது போல பிரதமரைப் பார்த்து முதல்வர் ஸ்டாலினும் அமெரிக்கா பயணம் போகிறார். பிரதமருக்கு உலக நாடுகள் விருது கொடுத்தது போல நமக்கும் யாராவது விருது கொடுப்பார்களா என முதல்வர் எதிர்ப்பார்க்கிறார்.” என ஆக்ரோஷமாக பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88