மாகாரஷ்டிரா மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தில் நிகோஜ் கிராமத்தை சேர்ந்தவர் ஷ்ரத்தா தவான். இவர் தனது 24 வயதிலேயே தன்னுடைய திறமை, உழைப்பு முதலியவற்றை முதலீடாகக் கொண்டு பலருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். ‘ சிறிய வயதில் பால் வியாபாரத்தின் மூலம் ஒரு வெள்ளை புரட்சியை நடத்தியுள்ளார்’ என இவரைப்பற்றி விஷயம் தெரிந்தவர்கள் பெருமையாக தெரிவிக்கின்றனர்.
தனது 11 வயதில் எருமை பாலை கறந்து விற்க தொடங்கிய ஷ்ரத்தா இன்று ‘ஷ்ரத்தா ஃபார்ம்ஸ்’ என்று ஒரு தனி நிறுவனத்தை நிறுவி ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தொழிலை நடத்தி வருகிறார். இவருடைய தந்தை ஒரு மாற்றுத்திறனாளி. தந்தைக்கு உதவி செய்ய எருமை பாலை கறந்து விற்கத் தொடங்கிய இவர் தனது 13 வயதிலேயே தொழில் நுணுக்கங்களையும், வியாபார யுக்திகளைக் கற்றுக்கொண்டார். இவர் ஒரு இயற்பியல் முதுகலை பட்டதாரி.
2017-ஆம் ஆண்டு 45 எருமைகளை கொண்டு வியாபாரம் செய்து வந்த இவர். தற்போது 80 எருமைகளை கொண்ட 2 அடுக்கு தொழுவம் அமைத்து அதை பராமரித்து வருகிறார். பண்ணையை விரிவுபடுத்திய ஷ்ரத்தா பிறகு பாலின் தரத்தை உயர்த்த திட்டமிட்டு பின்பு அதில் தன் கவனத்தை செலுத்தினார். அதன் விளைவாக லாபம் அதிகரித்தது.
இவர் பண்ணையின் மற்றுமொரு சிறப்பு Zero waste policy என்ற கொள்கை. அதாவது தன் பண்ணையில் எருமைகளிடம் இருந்து கிடைக்கும் கழிவுகளை முறையாக பயன்படுத்துகிறார். எருமைகளிடம் இருந்து கிடைக்கும் கழிவுகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கிறார்.இதற்காக ஒரு பயோகேஸ் ஆலையை நிறுவி உள்ளார்.
இதைத் தவிர இந்தக் கழிவுகளைக் கொண்டு மண்புழு உரமும் உற்பத்தி செய்து வருகிறார். மாதம் சுமார் 30,000 கிலோ மண்புழு உரத்தை உற்பத்தி செய்து வருகிறார். இவர் தனது உரத்தை சி.எஸ் அக்ரோ ஆர்கானிக்ஸ் என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார். ஷ்ரத்தா தன்னுடைய 60% லாபத்தை மட்டுமே பால் வியாபாரத்தின் மூலம் பெருகிறார். மீதம் 40% வருமானம் இந்த மண்புழு உரத்தின் வாயிலாகத்தான் பெறுகிறார்.
தன் பண்ணையில் உற்பத்தியாகும் கழிவுகள் மூலமாக உற்பத்தி செய்து லாபம் ஈட்டுவது மட்டுமல்லாமல் தன் பண்ணையை கழிவுகள் இல்லா பண்ணையாகவும் மாற்றியுள்ளார். இன்று இவருடைய பண்ணையை வெளிநாடுகளில் உள்ள விவசாயிகளும் பார்வையிட வருகிறார்கள். ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும் மற்றும் நேரடி வகுப்பு மூலமாகவும் பலருக்கு இந்தத் துறை பற்றி பயிற்சி அளித்து வருகிறார். இரண்டு நாள்கள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.3,499.
தன் திறமை, உழைப்பு முதலியவற்றை மூலதனமாகக் கொண்டு இளம் வயதில் தன் கிராமத்தில் பல பெண்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் ஷ்ரத்தாவுக்கு உலகமெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.