`யாராக இருந்தாலும் விடக் கூடாது; பெண்களுக்கெதிரான குற்றத்தை மன்னிக்கவே முடியாது’ – மோடி எச்சரிக்கை!

மகாராஷ்டிராவில் ஏழை பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் கொடுக்கும் திட்டம் சமீபத்தில் மாநில அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களின் வங்கிக்கணக்கில் இரண்டு மாத தொகையாக 3 ஆயிரம் கடந்த சில நாள்களுக்கு முன்பு வரவு வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. புதிதாக லட்சாதிபதி சகோதரி(லக்பதி திதி) சம்மேளனை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா மாநிலம், ஜல்காவ் வந்திருந்தார். இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய நரேந்திர மோடி,”பெண்களுக்கு பாதுகாப்பு மிகவும் முக்கியம். பெண்களுக்கு எதிரான குற்றத்தை மன்னிக்கவே முடியாது. குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களை விடக்கூடாது. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர்களுகு தண்டனை கொடுக்க சட்டத்தை வலுப்படுத்தி வருகிறோம்.

பிரதமர் நரேந்திர மோடி

சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் சம்பாதிக்க முடியும். விவசாயம், தொழில் மூலம் பெண்களால் மாதம் 10 ஆயிரம் சம்பாதிக்க முடியும். கடந்த 10 ஆண்டுகள் மத்திய அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. 10 ஆண்டுகளில் பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு 9 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு மகாராஷ்டிரா ஒளிரும் நட்சத்திரமாக இருக்கிறது. மகாராஷ்டிராவின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு பா.ஜ.க கூட்டணி அரசை மக்கள் வலுப்படுத்தவேண்டும்” என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித் பவார் மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஜல்காவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே இன்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பா.ஜ.க.வில் சேருவதாக இருந்தது. ஆனால் அவர் சேரவில்லை. உள்ளூர் பா.ஜ.க தலைவர்கள் ஏக்நாத் கட்சே வரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.