நெல்லை: பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை; தாய், மகன்கள் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள புதூரைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர், களக்காட்டில் எலக்ட்ரிக்கல் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று பகலில்  இவரும் இவரின் மனைவி ஜோதி லெட்சுமியும் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு வீட்டை பூட்டி விட்டு கடைக்குச் சென்றனர். மதியம் வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டு போடப்பட்டு இருந்தது. இதனால் பின் வாசலுக்குச் சென்று பார்த்தபோது சமையலறை ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு அதன் வழியாக உள்ளே புகுந்து பீரோவின் மீது இருந்த சாவியை எடுத்து, பீரோவைத் திறந்து ரூ.3.15 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

கொள்ளை

இது குறித்து களக்காடு காவல் நிலைய போலீஸாரிடம் புகார் அளித்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பெண் ஒருவர் இரண்டு பேருடன் அசோக்குமார் வீட்டின் மெயின் கதவை திறந்து வீட்டினுள் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸாரின் விசாரணையில் களக்காடு அருகேயுள்ள ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த மாரியம்மாள், அவரது மகன்கள் காளிமுத்து மற்றும் மற்றொரு 15 வயது மகன் ஆகியோர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

மூன்று பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். இது குறித்து போலீஸாரிடம் பேசினோம், “கைதுசெய்யப்பட்ட மூவரும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள். இங்குள்ள ஜெ.ஜெ.நகரில் 2 மாதங்களாக தங்கியிருந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பின் வாசல் கதவை உடைத்தோ அல்லது ஜன்னல் கம்பிகளை அறுத்தோ வீட்டிற்குள் சென்று முன்பக்க கதவை உள்புறமாக தாழிட்டு கொள்ளைடியடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். பெரும்பாலும் இவர்கள் பீரோவை உடைப்பதில்லை.

கொள்ளை

சாவியை பொறுமையாகத் தேடி எடுத்து பீரோ கதவைத் திறந்து கொள்ளையடித்துச் செல்கின்றார்கள். கதவை உடைப்பதையும், ஜன்னல் கம்பியை அறுப்பதையும் மகன்களே செய்கின்றனர். மகன்களுடன் செல்வதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. கடந்த 2 நாள்களுக்கு முன்பு இதே களக்காட்டில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் இதே பாணியில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. அந்த கொள்ளைச் சம்பவத்தையும் இவர்களே செய்திருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.