தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் தி.மு.க-வின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி எழுதிய நூல்கள் நூலுரிமைத் தொகை எதுவுமின்றி நாட்டுடைமையாக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், கருணாநிதி குறித்து தி.மு.க அமைச்சர் எ.வ.வேலு எழுதியிருக்கும் `கலைஞர் எனும் தாய்’ என்ற நூல், நாளை வெளியிடப்படவிருக்கிறது.
எ.வ.வேலு இந்த நூலை எழுதியமைக்காக, “குறளோவியம் தீட்டிய முத்தமிழறிஞர் கலைஞருக்கு எழுத்தோவியம் தீட்டியிருக்கிறார் அருமைச் சகோதரர் எ.வ.வேலு. கலைஞரால் `எதிலும் வல்லவர்’ எனப் போற்றப்பட்டவர் எ.வ.வேலு. எழுத்திலும் வல்லவர் என்பதை மெய்ப்பித்துக் காட்டும் வகையில், இந்நூலை எழுதியிருக்கிறார்” என ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார்.
சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் நாளை மாலை 6 மணியளவில் நூல் வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில், ஸ்டாலின் நூலை வெளியிட நடிகர் ரஜினிகாந்த் அதைப் பெற்றுக்கொள்ளவிருக்கிறார். மேலும், தி இந்து குழுமத்தின் இயக்குநர் மற்றும் மூத்த பத்திரிகையாளரான என்.ராம் உட்பட பல முக்கிய நபர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.