ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, முதன்முறையாக அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. வரும் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
காங்கிரஸ் கட்சி, பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக அறிவித்திருக்கின்றன. அதே நேரம், ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்து நிற்கிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள ஐந்து மக்களவைத் தொகுதிகளில், இரண்டில் மட்டுமே பா.ஜ.க போட்டியிட்டது. ஜம்மு பகுதியிலுள்ள இரண்டு தொகுதிகளிலும், காங்கிரஸை பா.ஜ.க வீழ்த்தியது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள இரண்டு தொகுதிகளில் வென்றது. மற்றொரு தொகுதியில், சிறையிலிருந்தவாறு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான ஷேக் ரஷீத் வெற்றிபெற்றார்.
`இந்தியா’ கூட்டணியில் தேசிய அளவில் அங்கம் வகிக்கும் மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி தொகுதி உடன்பாட்டில் குழப்பம் ஏற்பட்டதால், தனித்துப் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட அந்தக் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.
சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, சி.பி.எம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப்போவதாக தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூப் அப்துல்லா ஆகஸ்ட் 22-ம் தேதி அறிவித்திருக்கிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஸ்ரீநகருக்குச் சென்று தேசிய மாநாடு கட்சியின் தலைவர்கள் பரூப் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோருடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து, ஸ்ரீநகரிலுள்ள தனது இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, ‘ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் தொகுதிப்பங்கீடு செய்துகொள்வதென்று மூன்று கட்சிகளும் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றன. இந்தியாவில் மிகப்பெரிய துயரத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரிவினைவாத சக்திகளைத் தோற்கடிப்பதற்காக, ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி போட்டியிடும்’ என்றார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகப் பிரித்துப் பார்த்தால், 34 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சியும், 29 இடங்களில் பா.ஜ.க-வும், ஏழு இடங்களில் காங்கிரஸும், ஐந்து இடங்களில் மக்கள் ஜனநாயகக் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன. மீதமுள்ள 15 இடங்களில், 14-ல் சுயேச்சைகளும், ஓரிடத்தில் மக்கள் மாநாட்டுக் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன. இதன்படி பார்த்தால், ஒட்டுமொத்தமாக `இந்தியா’ கூட்டணியே முதல் இடத்தைப் பிடிக்கிறது. அதே நேரம், மெகபூபா முஃப்தியை இந்தக் கூட்டணிக்குள் கொண்டுவராவிட்டால், இஸ்லாமியர்களின் வாக்குகள் சிதறும் வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
காஷ்மீர் பகுதியில் சுயேச்சை வேட்பாளர்களாகக் களமிறங்குபவர்கள் வாக்குகளைப் பிரிப்பார்கள். அது `இந்தியா’ கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்கு சவாலை கொடுக்கும். இன்னொரு புறம், ஜம்மு பகுதியில் இந்துக்களின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு எளிதாகக் கிடைத்துவிடும் என்பதால், ஜம்மு பகுதியில் அதிக இடங்களில் பா.ஜ.க வெல்லும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
கடந்த மக்களவைத் தேர்தலில், காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள மூன்று தொகுதிகளிலும் பா.ஜ.க போட்டியிடவில்லை. அதே நேரம், காங்கிரஸிலிருந்து பிரிந்துசென்ற குலாம் நபி ஆசாத், காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள சில தொகுதிகளில் வாக்குகளைப் பிரிப்பார் என்பதால், அதைவைத்து சில தொகுதிகளைக் கைப்பற்ற பா.ஜ.க முயற்சி செய்யக்கூடும். மேலும் பள்ளத்தாக்கில் தங்கள் சார்பாக போட்டியிட சில சுயேட்சைகளிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
“ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாடு கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றன. சட்டமன்றத் தேர்தலையொட்டி அதை அழுத்தமாக இந்தக் கட்சிகள் பேசிவருகின்றன. மேலும், ஜம்மு காஷ்மீர் மக்களின் விருப்பங்களை இந்தக் கட்சிகள் தொடர்ந்து பேசிவருவதால், ‘இந்தியா’ கூட்டணிக்கான ஆதரவு ஒப்பீட்டளவில் அதிகமாகவே இருக்கிறது என்கிறார்கள். அதே நேரம், இந்துக்களின் வாக்குகளை முழுமையாக பாஜக குறிவைப்பதும், இஸ்லாமிய வாக்குகள் பிரியும் சூழல் உள்ளதும் இந்தியா கூட்டணிக்கு சவாலான விஷயங்களாக இருக்கும்” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88