கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடிகர் விஜய்யின் செயல்பாடுகள் தீவிர அரசியலை நோக்கி நகரும் வகையிலிருந்தது. அப்போதுதான் விஜய் ரசிகர் மன்றம் விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. இயக்கத்திற்கென தனிக் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலமாக ரத்த தானம், அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. 2013-ம் ஆண்டு வெளியான ‘தலைவா’ படத்திலிருந்து அரசியல் ரீதியிலான கருத்துக்களை அழுத்தமாகப் பதிவு செய்ய ஆரம்பித்தார். அப்போது ‘டைம் டு லீட்’ என்கிற டேக் லைனுடன் ‘தலைவா’ பட வெளியீட்டுக்கான அறிவிப்பு வந்ததாதல் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. பிறகு ‘டைம் டு லீட்’ என்கிற வாசகம் நீக்கப்பட்டது. தொடர்ந்து வெளியான ‘பிகில்’ படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழாவில் பேசிய விஜய், ”யாரை, எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவரை அங்கே கரெக்டா உட்காரவைத்தீர்கள் என்றால், இந்த கோல்டு மெடல் தானாக வந்து சேரும்” எனப் பேசியிருந்தார்.
அதற்கு அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த நிகழ்ச்சிக்கு வந்த விஜய் ரசிகர்கள் மீதும் போலீஸார் தாக்குதல்கள் நடத்தப்பட்டது, சர்ச்சையாக வெடித்தது. அதன்பிறகு விஜய் ரசிகர்களைத் தொடர்ந்து சந்தித்து வந்தார். கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி இருப்பதாக அறிவித்து, தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். அப்போது அவர், ‘நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. யாருக்கும் ஆதரவும் இல்லை.’ எனத் தெரிவித்திருந்தார். அதன்பிறகு தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கினார். இந்த சூழலில்தான் வரும் 22.8.2024 அன்று கட்சிக் கொடியை விஜய் அறிமுகம் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அப்போது விஜய், “சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நாம் காலை 7.30 மணிக்கெல்லாம் பனையூரில் இருக்கும் அவரின் இல்லத்துக்குச் சென்றோம். வழிநெடுகிலும் விஜய்யை வரவேற்று பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், வீட்டின் முன்பு திரண்டிருந்தார்கள். நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குக் காலை 9 மணியளவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா வருகை தந்தனர். அவர்கள் அங்கு அமர்ந்திருந்த நிர்வாகிகளை வரவேற்றார்கள். பிறகு அவர்களுடனேயே அமர்ந்திருந்தார்கள். காலை 9.15 மணிக்கு விழா மேடைக்கு விஜய் வருகை தந்தார். அவர் கட்சி தொண்டர்களையும், பெற்றோரையும் வரவேற்றார். பிறகு தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.
அப்போது, “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணிலிருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக் காக்கின்ற பொறுப்பு உள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பேரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” என்ற உறுதிமொழியை அவர் வாசிக்க அவரது கட்சித் தொண்டர்கள் அதை உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர். பிறகு கட்சி, கொடியையும் பாடலையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதில் சிவப்பு, மஞ்சள் என இரண்டு நிறங்கள் உள்ளன. நடுவில் இரண்டு ஆண் யானைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் சிவப்பு நிற வட்டத்தில் வாகை மலரும் அதைச் சுற்றி நட்சத்திரங்களும் உள்ளன. அதில் 28 நட்சத்திரங்கள் உள்ளன.
அதில் 5 நட்சத்திரங்கள் நீல நிறத்திலும், இதர நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும் உள்ளன. பிறகு கட்சியின் பாடலை ரசிகர்களுடன் அமர்ந்து விஜய் பார்த்தார். உற்சாகத்தில் தலைவா, தலைவா எனத் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். பிறகு மீண்டும் கட்சியின் பாடலை ஒளிபரப்ப வேண்டும் எனக் கூச்சலிட்டனர். அதன்படி மீண்டும் பாடல் ஒளிபரப்பப்பட்டது. பிறகு மைக் பிடித்த விஜய், “இன்றைக்கு நமக்கு எல்லாருக்குமே ரொம்ப சந்தோஷமான ஒரு நாள். நான் என்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கித் தொடக்கப் புள்ளியா கட்சியின் பெயரைப் பிப்ரவரி மாதம் அறிவித்தேன். அன்றிலிருந்து குறிப்பிட்ட ஒரு நாளுக்காக நீங்கள் அனைவரும் காத்திருந்தீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரிந்தது.
ஆம் நம் முதல் மாநில மாநாடு. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. சீக்கிரமே மாநாடு என்றைக்கு நடக்கிறது.. எப்போது என்பதெல்லாம் நான் அறிவித்து விடுவேன். அதற்கு முன் நீங்கள் எல்லாருமே கொண்டாடி மகிழ்வதற்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நான் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களாகிய உங்கள் முன்பும் சரி என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் முன்பும் சரி கொடியை அறிமுகப்படுத்துவதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இதுவரைக்கும் நாம் நமக்காக உழைத்தோம், இனி வரப்போகும் காலத்தில் நம் கட்சி ரீதியாக நம்மை தயார்ப்படுத்தி தமிழகத்துக்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் நாம் எல்லாரும் சேர்ந்து உழைப்போம்.
புயலுக்குப் பின் அமைதி, ஆர்ப்பரிப்பு, ஆரவாரம் இருப்பது போல் நம் கொடிக்குப் பின்னாலும் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. நீங்கள் அனைவரும் ஒரு நாளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னேன் அல்லவா அன்றைக்கு நம்முடைய கொள்கைகள் என்ன? நம்முடைய செயல் திட்டங்கள் என்ன? எனச் சொல்வேன். அன்றைக்கு இந்த கொடிக்கான விளக்கத்தையும் சொல்கிறேன். அதுவரைக்கும் இந்த கொடியை ஒரு சந்தோஷமா, ஒரு கெத்தா, நாம் ஏற்றிக் கொண்டாடுவோம். இதைக் கட்சிக் கொடியாக நான் பார்க்கவில்லை.
தமிழகத்தின் வருங்கால தலைமுறைக்கான ஒரு வெற்றிக்கான கொடியாகவே பார்க்கிறேன். இதனை உங்கள் உள்ளத்திலும் உங்கள் இல்லத்திலும் நான் சொல்லாமலேயே ஏற்றி விடுவீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அதற்கான முறையான அனுமதியைப் பெற்று விதிகளை கடைப்பிடித்து அனைவரிடமும் தோழமை பாராட்டி கொடியை ஏற்றுக் கொண்டாடுவோம். அதுவரைக்கும் தன்னம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்றார். இறுதியாக அனைவருக்கும் நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார் விஜய்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88