Doctors Protest: `போராடும் மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்!’ – உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி மருத்துவக் கல்லூரி முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் 31 வயது பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார். இப்படுகொலை வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. ஆனால் கொலைசெய்யப்பட்ட பெண் டாக்டருக்கு நீதி வேண்டியும், டாக்டர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று கோரியும் நாடு முழுவதும் டாக்டர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்படுகொலையால் நாடு முழுவதும் டாக்டர்கள் கொந்தளித்துப் போயிருக்கின்றனர். இப்போராட்டத்தால் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டு ஏழைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. கடந்த முறை இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மருத்துவமனைக்கு மத்திய படை பாதுகாப்பு வழங்கவும், மருத்துவமனைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்ய கமிட்டி அமைத்தும் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டு இருந்தது.

இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நாக்பூர் எய்ம்ஸ் மருத்துமனை பயிற்சி டாக்டர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், போராட்டத்தில் ஈடுபடுவதால் டாக்டர்களுக்கு ஆப்சென்ட் போடுவதாக குறிப்பிட்டார். உடனே அதற்கு பதிலளித்த நீதிபதிகள், “நீங்கள் பணியில் இருக்கும் போது ஆப்செண்ட் போடமாட்டார்கள். நீங்கள் பணியில் இல்லாத போது சட்டப்படித்தான் செயல்படுவார்கள். நீங்கள்(டாக்டர்கள்) உடனே போராட்டத்தை கைவிட்டு பணியை தொடருங்கள். உங்கள் மீது யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். அப்படி நடவடிக்கை எடுத்து சிரமத்தை சந்தித்தால், அப்போது எங்களிடம் வாருங்கள்” என்று தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், “சில இடங்களில் டாக்டர்களை சந்திக்க நோயாளிகள் இரண்டு ஆண்டு வரை காத்திருக்கின்றனர். ஏழை மக்களை அப்படி விட முடியாது” என்று தெரிவித்தனர். உடனே சண்டிகர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “டாக்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், “முதலில் டாக்டர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். நீங்கள் பணிக்கு திரும்பிய பிறகு, அதிகாரிகள் உங்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். டாக்டர்கள் வேலை செய்யாவிட்டால் சுகாதாரத்துறை எப்படி இயங்கும். கோர்ட் உத்தரவாதம் டாக்டர்களை திருப்திபடுத்தும்.

உச்ச நீதிமன்றம்

டாக்டர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய பணிக்குழு அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும். டாக்டர்கள், செவிலியர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் இக்குழு கேட்கும்” என்று டாக்டர்களின் பிரதிநிதிகளிடம் நீதிமன்றம் உத்தரவாதம் அளித்திருக்கிறது. மேலும், “கடந்த 30 ஆண்டுகளில் நாங்கள் இது போன்ற ஒரு வழக்கை பார்த்ததில்லை. மேற்கு வங்க அரசு கிரிமினல் நடைமுறைச் சட்டத்தை பின்பற்றவில்லை” என்று மேற்கு வங்க அரசை நீதிபதிகள் சாடினர்.

சிபிஐ

கூட்டுப் பாலியல் தொல்லை கிடையாது! – சிபிஐ

பெண் டாக்டர் படுகொலை தொடர்பாக விசாரித்து வரும் சி.பி.ஐ, விசாரணையில் பெண் டாக்டர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவில்லை என்றும், சஞ்ஜய் ராய் என்பவரால் மட்டுமே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. தடயவியல் சோதனை முடிவுகளும் அதனையே தெரிவிப்பதாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு டி.என்.ஏ சோதனை முடிவுகளும் ஒருவர் மட்டுமே இக்குற்றத்தில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகளிலும் சஞ்ஜய் ராய் மட்டுமே கொலை நடந்த செமினார் அரங்கிற்குள் செல்வதை காட்டுகிறது என்று சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.