10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை; கைதான இளைஞர் தப்பி ஓடியபோது கால் எலும்பு முறிவு – நடந்தது என்ன?

திருச்சி, தென்னூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தனது மகள் இறந்துவிட்ட நிலையில், 10 வயது பேத்தியை தனது பராமரிப்பில் வளர்த்து படிக்க வைத்து வருகிறார். அந்தச் சிறுமி தென்னூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வருகிறார். இந்த நிலையில், தாத்தாவிடம் வெளியே சென்று விட்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர், இரவு வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், இது குறித்து அந்த முதியவர், தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிறுமியைத் தேடி வந்தனர். இந்த நிலையில், தென்னூர் வாமடம் சாலையில் அந்தச் சிறுமி நடந்து வந்து கொண்டிருந்துள்ளார். அதனைப் பார்த்த ஒருவர் அவரை மீட்டு, அவரின் தாத்தாவிடம் ஒப்படைத்தார். சிறுமி உடையில் ரத்தக் கறை இருந்ததைப் பார்த்த சிறுமியின் தாத்தா, உடனடியாக தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் தில்லை நகர் போலீஸார் அந்தச் சிறுமியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குற்றவாளி

தொடர்ந்து, அந்தச் சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்தச் சிறுமியை ஒரு நபர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் திருச்சி மாவட்டம், உய்யக்கொண்டான் திருமலையைச் சேர்ந்த சின்ன ராஜா (வயது:25) என்பது தெரியவந்தது. செல்போன் சிக்னலை ஆராய்ந்தபோது அவர் சிதம்பரத்தில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, சிதம்பரம் சென்ற போலீஸார் தலைமறைவாக இருந்த சின்ன ராஜாவைக் கைதுசெய்து திருச்சி அழைத்து வந்தனர். அப்போது அவர் போலீஸாரிடமிருந்து தப்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்ன ராஜா மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க வேண்டும், அந்த இளைஞர்மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையோடு, அந்தச் சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.