சுய சான்றிதழ் கட்டட அனுமதி… இனி இ-சேவை மையங்களில் பெறலாம்!

சுய சான்றிதழ் கட்டட அனுமதியை இனி இ-சேவை மையங்களில் வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்தி, சுய சான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இ-சேவை மையம்

அதன்படி, அதிகாரிகளுக்கு பணம் கொடுக்காமல் பொதுமக்கள் எளிதாகக் கட்டட அனுமதி பெறுவதற்காக சுய சான்றிதழ் கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2,500 சதுரடி கொண்ட மனையில், 3,500 சதுரடி வரையிலான தரைதளம் அல்லது தரைதளம் மற்றும் முதல் தளம் கொண்ட 2 குடியிருப்புக் கட்டடங்களுக்கு சுய சான்றிதழ் முறையில் உடனடி கட்டட அனுமதி வழங்கப்படும்.

இத்திட்டத்தில், பொதுமக்களே நேரிடையாக https://onlineppa.tn.gov.in/SWP-web/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல், கூடுதல் கட்டணம் யாருக்கும் செலுத்தாமல் பொதுமக்களே விண்ணப்பித்து, கட்டிட அனுமதி பெற முடியும்.

தற்போதைய சூழலில் கட்டட அனுமதிக்கு விண்ணப்பம் செய்பவர்களில் சுமார் 72 சதவிகிதம் பேர் வீட்டை 3,500 சதுர அடிக்குள் கட்டுபவர்கள் என்பதால் இணையதளத்தில் பொதுமக்கள் எளிதாக விண்ணப்பம் செய்து அனுமதி பெற முடியும். ஆனால், பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால், பொறியாளர்கள் மூலமே விண்ணப்பம் செய்வதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, “கட்டட அனுமதியை மக்கள் எளிதாகப் பெற வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்ததுதான் சுய சான்றிதழ் கட்டட அனுமதி வழங்கும் திட்டம்.

கட்டட அனுமதி

கட்டட அனுமதிக்கு விண்ணப்பம் செய்வோரில் பெரும்பாலானோர் 3,500 சதுரடிக்குள் கட்டி வருபவர்கள்தான். அதனால்தான் அந்த அளவைத் தேர்வு செய்து சுய சான்றிதழ் முறையில் அனுமதி தரப்படுகிறது.

எனினும், இது போன்ற விழிப்புணர்வு இல்லாததால் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக 20,000 ரூபாயில் இருந்து ரூ.50,000 வரை கேட்பதாக புகார்கள் எழுகின்றன. இது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது. எனவேதான் இ-சேவை மையங்கள் மூலம் கட்டட அனுமதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது தொடர்பான முறையாக அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.