ஸ்டாலின், அண்ணாமலையால் `டார்கெட்’ செய்யப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி?!

தொடங்கிய சர்ச்சை!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிடவேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. மத்திய அரசும் நாணயத்தை வெளியிட அனுமதி வழங்கியிருந்தது. அதன்படியே நாணயத்தின் வடிவமைப்பு எல்லாம் முடிந்து நாணயமும் அச்சிடப்பட்டது. இந்த நாணயம் வெளியீடும் விழாவுக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று தமிழக அரசும் கடந்த 18-ம் தேதி வெளியிட முடிவு செய்தது.

கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா

இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைக்கப்பட்டு அவர் நாணயத்தை வெளியிட்டார். திமுக அரசும் மத்திய பாஜக அரசும் கருத்தியல் ரீதியாக மாறிமாறி சண்டை போட்டுக்கொண்டிருந்த சூழலில், திமுக அரசு நாணய வெளியிட்டு விழாவுக்கு பாஜக அமைச்சர் ஒருவரை அழைத்தது பேசுபொருளானது. திமுக, பாஜகவுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தார். அதற்கு திமுக தலைவரும் கடுமையாகச் சாடியிருந்தார். இந்த விவகாரத்தில் நடப்பதென்ன..?

`எடப்பாடி VS ஸ்டாலின்!’

நாணய வெளியீட்டு விழா குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக நாங்களும் நாணயம் வெளியிட்டோம். அப்போது பாஜக-வுடன் கூட்டணியிலிருந்தும், நாங்கள் அவர்களை அழைக்கவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதும், நாணயம் வெளியிடுவதும் அவர்களின் விருப்பம். அதேநேரத்தில் அதை யார் வெளியிடுவது என்பதுதான் கேள்வி. ராகுல் காந்தியை அழைத்து ஏன் வெளியிடவில்லை. இதிலிருந்து திமுக, பாஜக ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது. திமுக-வுக்கும், கருணாநிதி குடும்பத்துக்கும் தமிழ்நாட்டைப் பற்றி எப்போதும் கவலை இல்லை” என்று காட்டமாகப் பேசியிருந்தார்.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

எடப்பாடியின் கேள்விக்குப் பதில் சொல்லும்விதமாக ஸ்டாலின், “ஒன்று அரசியல் தெரிந்திருக்க வேண்டும், இல்லையெனில் நாட்டு நடப்பு புரிந்திருக்க வேண்டும், அல்லது மூளையாவது இருக்க வேண்டும். மத்திய அரசு அனுமதி கொடுத்து மத்திய அரசின் மூலமாக நடந்த நிகழ்ச்சி அது. இதைக்கூடப் புரிந்துகொள்ளாத எதிர்க்கட்சி தலைவர் நமக்குக் கிடைத்துள்ளார். நாணயம் வெளியீட்டு விழா திமுக நடத்திய நிகழ்ச்சி அல்ல. இது மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவர்கள் அவருக்காக ஓர் இரங்கல் கூட்டமாவது நடத்தியிருக்கிறார்களா… நாங்கள் எந்தவிதமான ரகசிய உறவும் வைத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை” என்று கடுமையாகப் பதிலடி கொடுத்திருந்தார்.

`எடப்பாடி பதிலடி!’

முதல்வரின் பேச்சைத் தொடர்ந்து அடுத்ததாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்று மேடைக்கு மேடை பேசினாரோ, அந்த பொம்மை முதலமைச்சர், மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், தன் ஆட்சியைக் காப்பாற்ற பா.ஜ.க-வின் மூத்த மத்திய அமைச்சர் ஒருவரை அழைத்து விழாவை நடத்தியுள்ளார். இது குறித்தும், காங்கிரஸ் தலைவர்களை ஏன் அழைக்கவில்லை என்றும் நான் கேட்டதற்கு ஸ்டாலின் ஏன் இவ்வளவு எரிச்சல்பட வேண்டும். இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு நடத்திய அரசு விழா. அழைப்பிதழில் எந்த இடத்திலும் மத்திய அரசுத் துறையின் பெயர் இடம்பெறவில்லை. கலைஞர் 100 என்ற இலச்சினையுடன், தமிழ்நாடு அரசு இலச்சினைதான் இடம் பெற்றுள்ளது. அனைத்துக்கும் மேலாக, அழைப்பிதழில் அனைவரையும் அழைத்தவர் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு தேவையான நிதியைப் பெற வக்கில்லாமல், தன் அப்பாவின் நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழாவுக்கு, மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. தலைவர்களை வருந்தி வருந்தி அழைத்து, நிகழ்ச்சி நடத்திவிட்டு, அதை நாகரீகமாகச் சுட்டிக்காட்டிய என் மீது பாய்ந்து குதறியிருக்கிறார். தன்னுடைய கபட நாடகம் என் மூலம் வெளிப்பட்டுவிட்டதே என்ற கோபத்தில் வானத்திற்கும், பூமிக்கும் தாவிக் குதித்திருக்கிறார். பா.ஜ.க-வுடன் கள்ள உறவு என எங்களைப் பார்த்து, மீண்டும் மீண்டும் முதலமைச்சர் சொன்னபோது அவருக்கு இனித்தது. இப்போது, அவர்களைப் பார்த்து மீண்டும் மீண்டும் அல்ல, ஒரு முறை சொன்னதற்கே மூளை இருக்கிறதா எனக் கேட்கிறார். அப்படி என்றால், நாங்கள் எத்தனை முறை விடியா தி.மு.க. முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா? என்று கேட்க வேண்டும். டெல்லிக்குக் காவடி எடுத்துத் தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று முதல்வரின் பேச்சுக்குப் பதிலடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

`இணைந்த அண்ணாமலை..!’

நாணயம் வெளியீட்டு விழா குறித்து முன்னாள், இன்னாள் முதல்வர் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், “நாணயம் வெளியீட்டு விழா குறித்து அதிமுக அரசியல் பேசுவது வேதனையாக இருக்கிறது. தமிழகத்தில் என்ன செய்தலும் அரசியலாகவே பார்க்கப்படுகிறது. எதிரும், புதிருமாக இருந்தாலும் ஒரு அரசியல் தலைவரை மதிப்பதுதான் அரசியல் நாகரிகம். கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தாலும் நான் தொண்டன்தான். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கட்சியிடம் சொல்லமுடியாது. ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என்று மத்திய அரசு முடிவு செய்தபிறகு மாநில பாஜக முழு ஒத்துழைப்பு வழங்குவது கடமை.

அண்ணாமலை

கடந்த 2017-ம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு ஆட்சியிலிருந்தபோது பாஜகவுடன் அவர்கள் கூட்டணியில் இல்லை. அந்த சமயத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சிறப்பு நாணயம் வெளியிட மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அனுமதி வழங்கி நாணயம் வெளியிட்டது. மத்திய அரசு எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பதில்லை. அரசியல் லாபத்துக்காக பாஜகவை எடப்பாடி குறை சொல்கிறார். நாணயத்தை அதிமுகவே வெளியிட்டுக் கொண்டது பெருமையா… குடியரசுத் தலைவர் வெளியிட்டு அதனைப் பிரதமர் பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். அதுதான் அவருக்குப் பெருமை… திமுக அதைச் சரியாகப் பயன்படுத்தி கொண்டது. கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிட்டதுபோல, ஜெயலலிதாவுக்கும் மரியாதையைச் செலுத்த விரும்பினாலும் அனுமதி வழங்கப்படும். அரசியல் புரிதலில் எடப்பாடி பழனிசாமி பேசுவது கிணற்றுத் தவளையாக உள்ளதைக் காட்டுகிறது.” என்றார் தன் பங்குக்கு.!

`இரண்டும் வெவ்வேறு!’

முதல்வர் ஒரு பக்கம் எடப்பாடியை விமர்சனம் செய்துகொண்டிருக்கும் நிலையில் அண்ணாமலை மறுபக்கம் எடப்பாடியைக் கடுமையாகச் சாடுகிறார். ஏற்கனவே திமுக பாஜக உறவு கொண்டாடுகிறது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், அரசியல் களத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம். “ஒரு பிரதான எதிர்க்கட்சியாக நாணயம் வெளியீட்டு விழா குறித்து எடப்பாடி ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை என்று பேசியது சிறப்பான ஒன்று. அதனைக் கேட்டும், படிக்கும் சாதாரண மக்களுக்கு ‘ஆம் ஏன் ராகுலை அழைக்கவில்லை…. திமுக பாஜகவுடன் உறவு கொண்டாடுகிறதோ’ என்ற கேள்வி எழுந்திருக்கும். எடப்பாடி சரியாக ஒரு காய் நகர்த்திவிட்டார்.

ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

அதற்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் முதல்வர் இது மத்திய அரசு நிகழ்ச்சி அது, இதுவென்று எடப்பாடி பேசியதற்கு எதிர்வினையாற்றினார். அதோடு, அண்ணா மீது ஆணையாகப் பாதை மாறமாட்டோம் என்று கூட்டணிக் கட்சிகளுக்கும் தகவல் சொல்லிவிட்டார். இவர்கள் இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டிருக்க, நாம டைம்லையனிலேயே இல்லையே என்று அண்ணாமலையும் இதுகுறித்து பேசி நாங்களும் இருக்கிறோம் என்று தன்னை காட்டிக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டி உள்ளது. இதனைத்தாண்டி, இதில் அரசியல் இருக்கிறது. அதே நேரத்தில் இருவரும் சேர்ந்து எடப்பாடியை கட்டம் காட்டுகிறார்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. முதல்வர் எடப்பாடியை விமர்சனம் செய்து பேசுவது வேறு அரசியல். அண்ணாமலை செய்யும் விமர்சனத்தின் காரணம் வேறு. இரண்டையும் ஒன்றாகப் பார்க்கவே முடியாது” என்றார்கள் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88