`எடப்பாடி பழனிசாமி பாராட்ட வேண்டும் என்பதற்காக நாங்கள் செயல்படவில்லை..’ – சொல்கிறார் கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்மண்டல அளவிலான பயிற்சி பட்டறை மற்றும் கருத்தரங்க கூட்டம் விருதுநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். முன்னதாக அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகள், அதை ஆதரிக்கும் பெற்றோர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இதை தடுப்பதற்கு ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் எனும் பெயரில் சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்றவேண்டும்.

தமிழகத்தில், இட ஒதுக்கீடு விஷயத்தில் அருந்ததியர் இன மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்திருந்தது. இதேபோல சில மாநிலங்களில் இட ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தன. ஏறத்தாழ 10 வருடங்கள் நடைபெற்ற இந்த வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் இன மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது சரிதான் என தீர்ப்பளித்துள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனதார வரவேற்கிறது. அதேசமயம் இந்த தீர்ப்பின் கடைசியில், சில நீதிபதிகள் உள் ஒதுக்கீட்டிற்கு பொருளாதார வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என கூறியிருக்கின்றனர். இது ஏற்புடையதல்ல. இருப்பினும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தீர்ப்பை வரவேற்கும் விதமாக வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநாடு நடத்தப்பட உள்ளது.

கே.பாலகிருஷ்ணன்

கலைஞர் நூற்றாண்டு தினத்தையொட்டி நடைபெற்ற நாணயம் வெளியீட்டு விழாவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதை வைத்து தி.மு.க.வும்-பா.ஜ.க.வும் கூட்டு சேர்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து அனைத்து விஷயங்களிலும் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது. ரயில்வே திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், பட்ஜெட் அறிவிப்பு, நிதி ஒதுக்கீடு, ஜி.எஸ்.டி. பங்குத்தொகை என அனைத்திலுமே மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்து வரும் நிலையில் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகள் ஒன்று சேர்ந்து மதச்சார்பற்ற கூட்டணியில் இணைந்திருக்கிறோம். ஆகவே, எடப்பாடி பழனிசாமி பேசியதை நாங்கள் நம்பவில்லை. தமிழக அரசில் அநேக காலி பணியிடங்கள் உள்ளன. அந்த காலி பணியிடங்கள் அனைத்துக்கும் அவுட்சோர்சிங் முறையில் பணியாட்களை ரசு நிரப்பி வருகிறது. இது ஏற்புடையதன்று.

பாலகிருஷ்ணன்

அதேபோல அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் பணியிடங்களிலும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெற்று ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழக அரசு நேரடியாக ஆட்களை நியமனம் செய்ய வேண்டும். தமிழக பொதுத்துறை நிறுவனங்களான ஆலங்குளம் அரசு சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் மதுரையில் உள்ள சர்க்கரை ஆலை ஆகியவை மெல்ல மெல்ல மூடு விழா கண்டுவருகின்றன. இவற்றை தடுத்து மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் மீண்டும் செயல்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க‌ ஆட்சியில் குறைகளை அள்ளி வீசிய எதிர்க்கட்சியினர் தற்போது ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பதால் தவறுகளை சுட்டிக்காட்ட தயங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். இது உண்மையில்லை. எடப்பாடி பழனிசாமி பாராட்ட வேண்டும் என்பதற்காக நாங்கள் செயல்படவில்லை.

பேட்டி

அதேபோல தமிழக அரசு செய்கின்ற அநேக நல்ல விஷயங்களை பாராட்டும் வேளையில், மக்களை பாதிக்கின்ற விஷயங்களுக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. கேரளாவில் முல்லை பெரியாறு பிரச்சனையை பொறுத்தவரை அணை வலுவாக உள்ளது, அணையின் நீர்மட்டத்தை 148 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அதை நாம் செயல்படுத்த வேண்டும். ஆனால் முல்லைப்பெரியாறு அணை வலுவிழந்து விட்டது. அதனால் புதிய அணை கட்ட வேண்டும் என சுரேஷ் கோபி எம்.பி. சொல்வதை ஏற்க முடியாது. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பேரிடரை சந்தித்திருக்கும் இந்நிலையில் பொதுவாக ஏற்பட்டிருக்கும் அச்ச உணர்வை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சுரேஷ் கோபி எம்.பி. இதுபோன்று பேசி வருவது தவறானது.

கல்விப்பணியில் கூடுதல் செலவு ஏற்படுகிறது என்பதற்காக பாடநூல் விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்பதில்லை. அதேபோல கூட்டணியில் இருக்கிறோம் என்ற ஒரு காரணத்திற்காக தமிழக அரசு செய்யும் எல்லா விஷயங்களுக்கும் நாங்கள் பொறுப்பாக முடியாது. தமிழக மக்களுக்கு, தமிழக அரசுக்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக கம்யூனிஸ்ட் கட்சி ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்திருந்தது. அதன்படி, நாங்கள் நடந்து வருகிறோம். இந்தநிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்றார்.