மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சரான பா.ஜ.க மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு நாணயத்தை வெளியிட்டார். இதில், தி.மு.க-வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைமையிலிருந்து யாரையும் அழைக்காமல், பா.ஜ.க அமைச்சரை ஸ்டாலின் அழைத்திருப்பது பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
இது தெடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பிய போது, “அரசியல் அறிவு, அல்லது நடைமுறை அறிவு என எதாவது ஒன்றாவது இருக்க வேண்டும். இது ஒன்றிய அரசு நடத்திய நிகழ்ச்சி. அந்த அடிப்படையில்தான் நிகழ்ச்சி நடந்தது. இதில் பழனிசாமிக்கு எங்கே வலிக்கிறது. எம்.ஜி.ஆருக்கு எடப்பாடி பழனிசாமி நாணயம் வெளியிட்டபோது, ஒன்றிய அரசு அவரை முதல்வராகவோ, மனிதனாகவோகூட நினைக்கவில்லை. மத்திய அமைச்சரை அழைத்ததால், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கிறோம் எனப் பரப்புகிறார்கள். ரகசிய உறவு வைத்திருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், ஸ்டாலினின் இத்தகைய விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “ ‘Go Back Modi’ என்று, 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்று மேடைக்கு மேடை பேசினாரோ, அந்த பொம்மை முதலமைச்சர், மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், தன் ஆட்சியைக் காப்பாற்ற பா.ஜ.க-வின் மூத்த மத்திய அமைச்சர் ஒருவரை அழைத்து விழாவை நடத்தியுள்ளார். இது குறித்தும், காங்கிரஸ் தலைவர்களை ஏன் அழைக்கவில்லை என்றும் நான் கேட்டதற்கு ஸ்டாலின் ஏன் இவ்வளவு எரிச்சல்பட வேண்டும்?
இது தி.மு.க நிகழ்ச்சி அல்ல, மத்திய அரசின் நிகழ்ச்சி என்றும், மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதால் ராகுல் காந்தியை அழைக்க அவசியமில்லை என்றும், பா.ஜ.க-வுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றும் பயத்தில் உளறியிருக்கிறார். இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு நடத்திய அரசு விழா. அழைப்பிதழில் எந்த இடத்திலும் மத்திய அரசுத் துறையின் பெயர் இடம்பெறவில்லை. கலைஞர் 100 என்ற இலச்சினையுடன், தமிழ்நாடு அரசு இலட்சினைதான் இடம் பெற்றுள்ளது. அனைத்துக்கும் மேலாக, அழைப்பிதழில் அனைவரையும் அழைத்தவர் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்.
இந்தி தெரியாது போடா என்றெல்லாம் மத்திய அரசைப் பார்த்து வறட்டு சவால்களை விட்டவர், இனி கூட்டணிக் கட்சியினரின் தயவு தேவையில்லை, குடும்ப நலன் முக்கியம் என்று தனது சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் கலந்து கொண்டு தேவையான நிதியைப் பெற வக்கில்லாமல், தன் அப்பாவின் நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழாவுக்கு, மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. தலைவர்களை வருந்தி வருந்தி அழைத்து, நிகழ்ச்சி நடத்திவிட்டு, அதை நாகரீகமாக சுட்டிக்காட்டிய என் மீது பாய்ந்து குதறியிருக்கிறார்.
சர்வதேச போதை மருந்து கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய தன் மகன், மருமகளைக் காப்பாற்றவும்; புகார்களில் சிக்கியுள்ள தன் மருமகன் மற்றும் சில மந்திரிகளைக் காப்பாற்றவும் திரு. ஸ்டாலின் யார் காலை பிடித்தாலும் அ.தி.மு.க-வுக்கு எந்த கவலையும் இல்லை. தன்னுடைய கபட நாடகம் என் மூலம் வெளிப்பட்டுவிட்டதே என்ற கோபத்தில் வானத்திற்கும், பூமிக்கும் தாவி குதித்திருக்கிறார். புரட்சித் தலைவர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவுக்கு மத்திய அரசில் உள்ளவர்களை நான் அழைத்ததாகவும், ஆனால், மத்திய அரசு என்னை மதிக்கவில்லை என்றும் தார்பாயில் வடிகட்டிய பொய் மூட்டை ஒன்றை ‘நா நயம் மிக்கவரின் மகன்’ அவிழ்த்து விட்டிருக்கிறார்.
அன்று எங்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நாணயம் வெளியிட்டது, விழாவை நாங்களே நடத்தினோம். என் தலைமையிலான தமிழ்நாடு அரசு நடத்தியது. மத்தியில் பதவி சுகம் அனுபவிக்க வேண்டும், அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக நம்பிய கட்சிகளுக்கு துரோகம் செய்வதே தி.மு.க-வின் வாடிக்கை என்பது மக்களுக்கு நன்கு தெரியும். 2004 முதல் 2013 வரை மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து ஆட்சி சுகத்தை அனுபவித்தவர்கள் தி.மு.க-வினர். தமிழ்நாட்டில் 2006 முதல் 2011 வரை காங்கிரஸ் கட்சியின் தயவால் தி.மு.க ஆட்சி நடத்தியது. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியை தற்போது மறந்தவர் ஸ்டாலின் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.
பா.ஜ.க-வுடன் கள்ள உறவு என எங்களைப் பார்த்து, மீண்டும் மீண்டும் முதலமைச்சர் சொன்னபோது அவருக்கு இனித்தது. இப்போது, அவர்களைப் பார்த்து மீண்டும் மீண்டும் அல்ல, ஒரு முறை சொன்னதற்கே மூளை இருக்கிறதா எனக் கேட்கிறார். அப்படி என்றால், நாங்கள் எத்தனை முறை விடியா தி.மு.க. முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா? என்று கேட்க வேண்டும். டெல்லிக்கு காவடி எடுத்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி பழனிசாமி சாடியிருக்கிறார்.