“அத்திக்கடவு – அவிநாசி திட்டம்… 90% நாங்களே முடித்துவிட்டோம்; ஆனால் திமுக..!” – எடப்பாடி காட்டம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள நாதேகவுண்டம்பாளையத்தில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ-வும், விவசாயிகள் சங்கத் தலைவருமான என்.எஸ்.பழனிசாமியின் மணிமண்டபத்தை சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி கலந்துகொண்டு திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “அதிமுக ஆட்சிதான் விவசாயிகளுக்கு பொற்கால ஆட்சியாக இருந்தது. நானும் ஒரு விவசாயி. விவசாயிகள் படும் துன்பம், துயரம் எனக்கும் தெரியும். எந்த தொழிலையும் செய்யலாம். ஆனால், விவசாயம் செய்வது கடினம். ஆகவே தான் அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி, 60 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் போராடி வந்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார். ஜெயலலிதாவின் வாக்குறுதியை நான் முதல்வரான பின்பு நிறைவேற்றினேன். மாநில நிதியில் ரூ. 1,653 கோடி ஒதுக்கப்பட்டு, அனைத்து பணிகளும் துவங்கப்பட்டன. அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் 2021-ஆம் ஆண்டின் முடிவில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டன. அதன்பின்பு வந்த திமுக அரசு எஞ்சிய 10 சதவீத பணிகளை 6 மாதத்தில் முடித்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் கிடப்பில் போட்டுவிட்டனர்.

திறப்பு விழா

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற திமுகவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்தோம். அதனால், வேறுவழியில்லாமல் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இரண்டரை ஆண்டுகாலம் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை திமுக அரசு தாமதப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் முழுக்க அதிமுக அரசு கொண்டுவந்தது. ஆனால், திமுக உரிமை கொண்டாடுகிறது.

திறப்பு விழா

காவிரி – குண்டாறு திட்டத்துக்காக புதுக்கோட்டையில் அடிக்கல் நாட்டு பணியைத் துவக்கினோம். அதையும் திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. அதிமுக ஆட்சியில் ரூ. 9,300 கோடி விவசாயிகளுக்கு இழப்பீட்டை பெற்று தந்தோம். தொடக்க வேளாண் வங்கியில் ரூ. 12 ஆயிரத்து 110 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்தோம். ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கேரளத்துக்கு நேரில் சென்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினோம். 3 கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துவிட்டது. ஆனால், அதற்குப் பின்பு வந்த திமுக அரசு இந்த திட்டம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி வரும் அதில் ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88