தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், தி.மு.க முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு, பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு பரிந்துரைத்து கேட்டுக் கொண்டதை ஏற்று, மத்திய அரசு `கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்’ வெளியிடுகிறது. இந்த நாணய வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நாணயத்தை வெளியிடுகிறார். இந்த விழாவில், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
இந்த விழாவுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில், “கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணய வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் புகழ்மிக்க தலைவர்களில் ஒருவரான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி, மிகவும் முக்கியமானது. இந்திய அரசியல், இலக்கியம், சமுதாய வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றிய தலைவர்களில் ஒருவர் கலைஞர் கருணாநிதி.
தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் எப்போதும் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். அரசியல் தலைவராக, முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி நாட்டின் வரலாற்றில் அழியாத சுவடுகளை விட்டுச்சென்றுள்ளார். மக்களால் முதலமைச்சராக பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி மக்கள், கொள்கை, அரசியலை மிகவும் நன்றாக புரிந்து வைத்திருந்தார்.
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட உள்ள நிலையில் அவரின் நினைவுகளையும், அவரின் கொள்கைகளையும் நினைவுகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நாளில் கலைஞர் கருணாநிதிக்கு எனது இயதப்பூர்வமான மரியாதையை செலுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா, மாபெரும் வெற்றியடைய பிரதமர் மோடியின் அன்பான வாழ்த்துகளுக்கும், ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.