பத்து பைசா பார்க்-கின் பரிதாபகர நிலை; சிறுவர்கள் பயன்பெறும் வகையில் பராமரிக்கக் கோரும் மக்கள்!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், தியாகராய புது வீதியில் அமைந்துள்ளது, அண்ணா பூங்கா. கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான இந்தப் பூங்கா “பத்து பைசா பார்க்” என்றே பல ஆண்டுகளாக, செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது.

11,999 சதுர அடியில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் விளையாட்டுத்திடல், நடைப்பயிற்சிக்கான இடம், செயற்கை நீருற்று முதலியவை உள்ளது. மாலை நேரங்களில் குடும்பமாகவும், நடைப்பயிற்சிக்காகவும் மக்கள் குவிந்த இந்த பூங்கா, தற்போது முறையான பராமரிப்பின்றி கிடக்கிறது.

விளையாட்டுத்திடலில் ஊஞ்சல் உடைந்துள்ளதால், வெறும் சங்கிலியை பிடித்து குழந்தைகள் விளையாடுகின்றனர். செடிகளுக்குப் போடப்பட்ட வேலிகள் அறுந்து, நடப்பவர்களின் மேல் பட்டு காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. நடைப்பயிற்சிக்கான நடைபாதையும் சரியாக இல்லாமல் மேடு பள்ளமாக உள்ளது. “ஓடி விளையாடு பாப்பா” என்ற மகாகவி பாரதியின் வரிகள் எழுதப்பட்ட சுவரே விளையாடும் குழந்தைகளுக்கு ஆபத்தாய் இடிந்துதான் உள்ளது. செயற்கை நீருற்று செயலிழந்து உள்ளது.

பூங்காவின் பராமரிப்பிற்கான பொறுப்பு ஒப்பந்த அடிப்படையில் கடந்த ஆண்டு ஏப்ரல்-1 முதல் இந்தாண்டு மார்ச் 31 வரை (1/4/23 – 31/3/24) அதாவது சரியாக ஓர் ஆண்டு காலம் ஜெயலட்சுமி பில்டர்ஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஒப்பந்தக் காலம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில், தற்போது பூங்கா முறையான பராமரிப்பின்றி கிடக்கிறது.

“ஒரு முப்பதுல இருந்து முப்பத்தி அஞ்சு வருஷம் முன்னாடி இந்த இடம் குப்பைக்கிடங்கா இருந்துச்சு. இந்தப் பகுதி மக்கள் எல்லாம் பல நாள் முயற்சி செஞ்சு, போராடி, அப்ப இருந்த கவர்ன்மென்ட் இத பார்க்காக மாத்துனாங்க. முன்னாடி எல்லாம் பார்க் நல்லா இருக்கும், நிறைய பேர் வருவாங்க.

இப்போ சில மாசமா பார்க் பராமரிப்பு இல்லாம இருக்கு. அதனாலயோ என்னமோ, வாக்கிங் போறவங்கள தவிர வேற யாரும் அவ்ளோ வரது இல்ல. சிலர் இங்க வந்து குடிச்சுட்டு பாட்டில் எல்லாம் அங்கங்க போட்டுட்டு போயிடுறாங்க. ஒரு பார்க்ல முக்கியமான விஷயமே குழந்தைங்க விளையாடுற இடம்தான். விளையாடுற இடம் கட்டாயம் சரி செஞ்சாகணும். தூரி எல்லாம் அறுந்து இருக்கு, குழந்தைங்க வெறும் சங்கிலிய புடிச்சு விளையாடுறாங்க. எந்த வகையிலயும் பராமரிப்பு இல்லாம இருக்கு. சீக்கிரம் மாத்துனா நல்லா இருக்கும்” என்று அந்தப் பகுதி மக்கள் அவர்களது கருத்தை தெரிவித்தனர்.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகியிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்டவங்கள கூப்பிட்டு பேசணும், விவரங்கள் அனுப்புங்க, என்னனு பாக்குறோம்” என்றார்.

தங்கள் பகுதியின் அடையாளமாக விளங்கும், `பத்து பைசா பார்க்’, விரைவில் சீரமைக்கப்பட்டு, புதுப் பொலிவுடன் இயங்குமா என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.