நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடித்திருக்கிறார் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 9-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அது ஒத்திவைத்துவிட்டு ஆகஸ்ட் 16-ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணைய விதிகளின்படி அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியானது ஆண்டுக்கு இரண்டு முறை செயற்குழு நடத்த வேண்டும். அதன்படி செயற்குழுவை முதலில் நடத்திவிட்டு, அதில் விவாதிக்கப்பட்ட விவகாரத்தோடு, தேர்தல் தொடர்பாகவும் மா.செ.க்கள் கூட்டம் நடத்தலாம். முதலில் மா.செ.க்கள் கூட்டம் நடத்தினால், செயற்குழுவிற்கு பிறகும் மா.செ.க்கள் கூட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஆகிவிடும்’ என்று சீனியர்கள் சிலர் அட்வைஸ் செய்து இருக்கிறார்கள். அதன்படிதான், மா.செ.க்கள் கூட்டம் ஒத்திவைத்துவிட்டு, ஆகஸ்ட் 16ல் செயற்குழுவை கூட்டியிருக்கிறார் எடப்பாடி.
இதனிடையே, செயற்குழுவில் எடப்பாடியின் தலைமைக்கு எதிராக அதிமுக-வினர் கிளர்ந்து எழுந்து கலகம் செய்யவிருக்கிறார்கள். எடப்பாடிக்கு எதிராக செயற்குழு கொந்தளிக்க போகிறது’ என்று ஓ.பி.எஸ்., சசிகலா அனுதாபிகள் கிளப்பி விட்டனர். ஆனால், எவ்வித குழப்பமும் இல்லாமல் சுமூகமாக நடந்து முடிந்திருக்கிறது அ.தி.மு.க-வின் செயற்குழு கூட்டம்.
கூட்டத்தில், மீனவர் நலனில் அக்கறை இல்லாத மத்திய, மாநில அரசுக்கு சேர்த்து கண்டனம் தெரிவித்ததோடு, பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்காத மத்திய பா.ஜ.க அரசுக்கு செயற்குழுவில் கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இத்தோடு திமுக அரசுக்கு எதிராக தீர்மானங்களோடு 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி உள்பட சீனியர்கள் பேசியது தொடர்பாக முன்னாள் அமைச்சர்களிடம் பேசினோம்.
“இந்த செயற்குழுவில் ஏதோ பூகம்பம் வெடிக்கும்… அது நடக்க போகிறது… இது நடக்க போகிறது என்று ஓ.பி.எஸ் மற்றும் சசிகலாவின் ஆதரவாளர்கள் கிளப்பி விட்ட கதையினால், ஒரு இறுகிய மனங்களோடுதான் இந்த செயற்குழு தொடங்கியது. ஆனால், முதலில் பேசத் தொடங்கிய துணை பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன், ‘இவர்தான் (எடப்பாடியை நோக்கி) நம் பொது செயலாளர்… இவர்தான் நம் முதல்வர்…’ என்று பேசத்தொடங்கி, கூட்டத்தின் நிசப்தத்தை நீக்கிவிட்டார்.
தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் பேசி அமர்ந்த பிறகு, திண்டுக்கல் சீனிவாசன் பேசத்தொடங்கினார். ’2026 தேர்தல் தொடர்பாக முதற்கட்ட ஆலோசனை செய்ய தான் இங்கு நாம் கூடியிருக்கிறோம். 2026-ஐ விட்டால் நமக்கு கஞ்சி கிடைக்காது என்பதை மனதில் வைத்து வேலை பார்க்க வேண்டும். பா.ஜ.க-வுடன் கூட்டணியை முறித்த பிறகும், நமக்கு சிறுபான்மையினர் வாக்கு கிடைக்கவில்லை. இப்படி பேசுகிறேன் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் வருத்தப்படக்கூடாது. ஆனால், அதுதான் உண்மை. இஸ்லாமியர்களின் வாக்கும், கிறிஸ்தவர்களின் வாக்கும் நமக்கு வரவே இல்லை. அதை நாம் சரி செய்ய வேண்டும்.
இணைப்பு குறித்தோ… கூட்டணி குறித்தோ யோசிக்காமல், அடிப்படையை சரி செய்ய வேண்டும்.’ என்றார். தொடர்ந்து பேசிய தமிழ்மகன் உசேன், ‘ நாம் பாஜகவுடன் மீண்டும் இணைந்து விட்டோம் என்று சிறுபான்மையின தலைவர்கள் மூலமாக தி.மு.க பிரசாரம் செய்துவிட்டது. உலாமார்களிடம் நேரடியாக தி.மு.க பேசியதால், இஸ்லாமிய மக்கள் நம்பி ஏமாந்து விட்டார்கள். இனி திமுகவை நம்ப அவர்கள் தயாராக இல்லை. வரும் தேர்தலில் நமக்கு வாக்கு கிடைக்கும்’ என்றார்.
தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி, ‘ இணைப்புக்கு இங்கு அவசியம் ஏற்படவில்லை. துரோகம் செய்தவர்களை மீண்டும் கொண்டு வர என்ன அவசியம் இருக்கிறது. அதுகுறித்து பேசாமல், கட்சி வேலையை ஒழுங்காக பார்த்தாலே வெற்றி நமக்குதான்’ என்று பேசினார்.
அடுத்து பேசிய வேலுமணி, ‘ நம்முடைய பொதுச்செயலாளர் தான் அ.தி.மு.க. நமது வேலையை சிறப்பாக, உயிரை கொடுத்து செய்தால், 2026-ல் அவர்தான் முதல்வர். தேர்தல் வேலையை இன்று முதல் தொடங்கினால்தான், வெற்றியை அடைய முடியும். எடப்பாடியாரின் கைகளை வலுப்படுத்தி, ஆட்சியில் அ.தி.மு.க-வை மீண்டும் அமர வைக்க இந்த செயற்குழுவில் சூளுரைப்போம்.’ என்றார்.
இறுதியாக பேசிய எடப்பாடி, ‘ நமது செயற்குழு நடத்தும் அதேநாளில் மா.செ.க்கள் கூட்டத்தை தி.மு.க நடத்துகிறது. அந்த அளவுக்கு நம் மீது தி.மு.க பயத்தில் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நம்மை அங்கிகரிக்கவில்லை என்று சோர்ந்துவிடாதீர்கள். எம்.ஜி.ஆர்., அம்மா காலத்திலும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்திருக்கிறது. கட்சிக்கு துரோகம் செய்த சிலரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது யாரின் தனிப்பட்ட முடிவும் இல்லை; அது கட்சி எடுத்த முடிவு. அதேபோலதான், பா.ஜ.க-வுடன் கூட்டணி வேண்டாம் என்பது தொண்டர்கள் எடுத்த முடிவு. அதுகுறித்து பேசி எந்த பயனும் இல்லை. சுயமரியாதை இழந்து யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. அப்படி நாம் நிற்க போவதும் இல்லை.
இனி நமக்கு வேலை நிறைய இருக்கிறது. அதை செய்வதில் உறுதியாக இருப்போம். தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து தலைமை கழக நிர்வாகிகள் நல்ல முடிவு எடுப்போம். நீங்கள் கட்சி வேலையை செய்வதில் முதலில் ஆர்வம் காட்டுங்கள்.’ என்றார். கூட்டம் நிறைவடையும் முன்பாக, மண்டலம் வாரியாக மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாகவும், எடப்பாடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் பேசப்பட்டது. அதுகுறித்த அறிவிப்பை, தயார் செய்து தலைமைக் கழகம் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல, எம்.ஜி.ஆர் மனைவியான ஜானகிதான், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இடம் கொடுத்தார். அதன் நினைவாக, அ.தி.மு.க சார்பில் அவருக்கு நூற்றாண்டு விழா எடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.” என்றனர் விரிவாக.
இந்த செயற்குழு கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம், கே.சி.வீரமணி ஆகியோர் தனிப்பட்ட பிரச்னையின் காரணமாக செயற்குழுவில் பங்கேற்கவில்லை. மேலும், நிலமோசடியில் வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே இருக்கும், கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் செயற்குழுவில் பங்கேற்கவில்லை.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88