கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலை விவகாரம்: `அரசியல்’ கடந்து நீதி கிடைக்குமா?!

கொல்கத்தா மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்த, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. குறிப்பாக, இந்தக் கொடூரமான சம்பவத்துக்கு நீதிகேட்டு இன்று அனைத்து மாநிலங்களிலும் மருத்துவர்கள் ஒருநாள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலை – மருத்துவர்கள் போராட்டம்

கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி அதிகாலை கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துக்கல்லூரி மருத்துவமனையின் செமினார் அறையில் முதுகலை பயிற்சி மருத்துவராக பணியாற்றிவந்த பெண் மருத்துவரின் உடல் அரைநிர்வாண கோலத்தில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் உயிரிந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும், கழுத்து, கால்கள் முறிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதும் தெரிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் குற்றம் நடந்த 6 மணி நேரத்தில சஞ்சய் ராய் எனும் நபர் கைது செய்யப்பட்டார். ஆனால், உயிரிழந்த பெண் மருத்துவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த சுபர்னா கோஸ்வாமி, `பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் 150 மி.லி அளவுக்கு விந்து இருக்கிறது. ஒருவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருந்தால் இந்த அளவுக்கு விந்து இருப்பதற்கு சாத்தியமில்லை. நிச்சயம் இது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்க வேண்டும்!” எனக்கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த விவகாரம் மேற்கு வங்கத்தை உளுக்கியெடுக்க, மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. குறிப்பாக, சம்மந்தப்பட்ட மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, உயிரிழந்த பெண் மருத்துவரின் பெற்றோரும் உண்மையானக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தனர். அடுத்தடுத்து நீதி விசாரணை கோரி பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தன. இதையடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், ஹிரன்மே பட்டாச்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இருப்பினும் இந்தப் போராட்டம் மேற்குவங்க மாநிலம் கடந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பரவி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், சம்பவம் நடந்த ஆர்.ஜி. கர் மருத்துவமனை வளாகத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கியதோடு, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும் தாக்கினர். இந்த சம்பவமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 19 பேரை கைது செய்திருக்கிறது மேற்கு வங்க காவல்துறை.

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலை – மருத்துவர்கள் போராட்டம்

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என பா.ஜ.கவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மம்தா பானர்ஜியின் மேற்கு வங்க மாநிலத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியிருப்பதால் இந்தியா கூட்டணி தலைவர்கள் மௌனம் காப்பதாகவும் பா.ஜ.க தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் அதற்கு மாறாக மருத்துவர்கள் போராட்டத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டிவருகின்றனர். குறிப்பாக, மேற்குவங்கத்தை ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலேயே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கண்டன பேரணி நடைபெற்றிருக்கிறது.

மம்தா பானர்ஜி பேரணி

அதேபோல, இந்தியா கூட்டணியின் அங்கம் என்றாலும்கூட மூத்த தலைவர் ராகுல் காந்தி, “கொல்கத்தாவில் ஜூனியர் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக அடுக்கடுக்கான கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல்கள் அம்பலமாகி வருவதால், மருத்துவர்கள் சமூகம் மற்றும் பெண்கள் மத்தியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவமனையும் மாநில நிர்வாகவும் ஈடுபடுகிறதா என்ற கேள்வி எழுகிறது. நிர்பயா வழக்குக்குப் பிறகு இயற்றப்பட்ட கடுமையான சட்டங்கள் கூட இதுபோன்ற குற்றங்களைத் தடுக்காமல் ஏன் தோல்வியடைந்தன? ஹத்ராஸ் முதல் உன்னாவ் வரையிலும், கதுவா முதல் கொல்கத்தா வரையிலும் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சம்பவங்கள் குறித்து, ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு பிரிவினரும் தீவிரமாக விவாதித்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த தாங்க முடியாத துன்பத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் நான் நிற்கிறேன். ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்!” என கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

அதேசமயம், `தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் நடந்த கோர சம்பவத்தைக் கண்டித்து மம்தா பேரணி நடத்துவது வேடிக்கை’ எனவும் எதிர்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. அதேசமயம், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் கொலையில், மருத்துவமனையின் இதர டாக்டர்களுக்கும், உடன் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் அவர்களை விசாரிக்கவேண்டும் என பெண்ணின் பெற்றோர்களும் மருத்துவ சங்கத்தினரும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இந்த நிலையில், மற்ற மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ சம்மன் அனுப்பியிருக்கிறது.

இந்தநிலையில், இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர்(IMA) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர நாடுதழுவிய பணி புறக்கணிப்பு போராட்டத்தை இன்று(17-08-2024) தொடங்கியிருக்கின்றனர். குறிப்பாக, எந்தவித சமரசத்துக்கும் இடமின்றி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த வழக்கை விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும், ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும், மகளை இழந்த குடும்பத்துக்கு நியாயமான இழப்பீட்டை வழங்கவேண்டும், மருத்துவமனை வளாகத்திலேயே தங்கி வேலைசெய்யும் ரெசிடென்ட் டாக்டர்களின் வாழ்விடங்களை மிகுந்த பாதுகாப்புடன் மேம்படுத்தவேண்டும், விமான நிலையங்களில் இருப்பதைப்போல முக்கியமான மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும், சுகாதாரப் பணியாளர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க நாடு தழுவிய அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் முன்வைத்திருக்கின்றனர்.

இத்தனை போராட்டங்கள், அரசியல் குற்றச்சட்டுகள் எல்லாம் கடந்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவரின் குடும்பத்தினருக்கு உரிய நீதியை பெற்று தர வேண்டும், இனியும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88