நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றிவைத்து, கோட்டை கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ‘பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர் பேசிய கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றன.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘நாட்டில் பலமுறை தேர்தல்கள் நடைபெறுவது வ ளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன. எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் யோசனையை தேசம் ஏற்க வேண்டியது அவசியம். நாட்டின் வளர்ச்சிக்காக இந்த யோசனையை ஏற்க முன்வர வேண்டும்’ என்றார்.
மேலும், ‘நம் நாட்டில் பொது சிவில் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் பலமுறை பேசியிருக்கிறது. தற்போது இருக்கும் சிவில் சட்டங்கள் மதவாதம் கொண்டவை என்று பெரும்பான்மையான மக்கள் நம்புகிறார்கள். ‘மதவாத’ சிவில் சட்டங்களுடன் நம் நாடு 75 ஆண்டுகளாகப் பயணித்திருக்கிறது. இந்தச் சட்டங்கள், நாட்டை மத ரீதியாகப் பிளவுபடுத்தும். மேலும், மக்களிடம் அது பாகுபாட்டை ஊக்குவிக்கும்.
எனவே, சிவில் சட்டத்திலிருந்து ‘மதச்சார்பற்ற’ சிவில் சட்டத்தை நோக்கி நாம் நகர வேண்டும். ‘மதச்சார்பற்ற’ சிவில் சட்டம் காலத்தின் தேவை. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் கனவை நனவாக்குவது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு’ என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையை பா.ஜ.க தலைவர்கள் வரவேற்றிருக்கிறார்கள். ‘மதச்சார்பற்ற சிவில் சட்டம் வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். மதவாதக் கட்சி என்று பா.ஜ.க-வை விமர்சித்துவரும் எதிர்க்கட்சிகளால், இன்றைக்கு ‘மதச்சார்பற்ற சிவில் சட்டம்’ குறித்து பிரதமர் பேசியதும் வாயடைத்துப்போயிருக்கிறார்கள். மதச்சார்பற்ற சிவில் சட்டம் கூடாது என்று எதிர்க்கட்சிகளால் சொல்ல முடியுமா?’ என்று கேட்கிறார்கள் பா.ஜ.க-வினர்.
இந்த நிலையில், ‘பத்தாண்டு காலம் பிரதமராக இருந்து, மூன்றாவது முறையாகவும் பிரதமர் பதவியை ஏற்ற நரேந்திர மோடி, பத்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளைப் பற்றி பேசாமல், நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களைப் பேசியிருக்கிறார்’ என்ற விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
மேலும், ‘நாடாளுமன்றத் தேர்தல் முடிந்துவிட்டது என்றாலும், பிரதமர் மோடி இன்னும் தேர்தல் பிரசார மனநிலையில் இருந்து வெளியே வரவில்லை என்பதை அவரது சுதந்திர தின உரை உணர்த்துகிறது. பா.ஜ.க-வின் பொதுக்கூட்டத்தில் பேசுவதைப்போல பிரதமர் பேசியிருக்கிறார்’ என்று எதிர்க்கட்சியினர் விமர்சிக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘மனிதப் பிறவி அல்ல என்று தன்னைப் பற்றி கூறிக்கொள்ளும் ஒரு பிரதமரின் தீய எண்ணத்துக்கும், அவதூறு கருத்துகளுக்கும் எல்லையே கிடையாது. இது செங்கோட்டையில் அவர் ஆற்றிய உரை மூலம் வெளிப்பட்டிருக்கிறது’ என்று சாடியிருக்கிறார்.
மேலும், ‘நாட்டில் மதவாத சிவில் சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன என்று பிரதமர் மோடி கூறியிருக்கும் கருத்து, சட்டமேதை அம்பேத்கருக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பாகும். பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதை நோக்கி பெரும்பாலான நாடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. பன்முக வேறுபாடுகள் பாகுபாட்டை குறிக்கவில்லை. மாறாக, வலுவான ஜனநாயகத்தின் அடையாளமாக இருக்கின்றன’ என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.
ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் மனோஜ் ஜா, ‘இந்தியாவில் ஒரே ஒரு பிரதமர் தான் இருக்கிறார்… எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கு தனி பிரதமர் கிடையாது என்பதை மோடி உணர வேண்டும். மோடியிடம் ஒவ்வொரு முறையும் பரந்த மனதை எதிர்பார்க்கிறோம். ஆனால், நமக்கு ஏமாற்றம்தான் கிடைக்கிறது. அவர் ஆற்றியிருப்பது ஓர் அரசியல் உரை’ என்று விமர்சித்திருக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, ‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரிவினைவாத அஜெண்டாவின் அடிப்படையில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்’ என்று விமர்சித்திருக்கிறார். ‘ஒரு நாடு ஒரு தேர்தல் பற்றி பிரதமர் பேசுகிறார். முதலில் அவர் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்‘ என்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து குரல் எழுந்திருக்கிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88