திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகா, கோட்டூர் ஒன்றியத்தில் அமைந்திருக்கிறது `களப்பால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.’ 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் மார்ச் 2022-ம் ஆண்டு போதிய அடிப்படை வசதிகளுடன் அப்போதைய மாவட்ட ஆட்சியர் அவர்களால் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் இந்தச் சுகாதார நிலையத்தில் நிரந்தர மருத்துவரும், செவிலியர் பற்றாக்குறையும், மருந்துத் தட்டுப்பாடும் இருப்பதால் இங்கு வரும் பொதுமக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றனர்.
இது குறித்து அங்கு வரும் மக்கள் நம்மிடம் பேசியபோது, “எங்களுக்குச் சொந்த ஊரு ரங்கநாதபுரம். அங்கே இருந்து இந்த தரும ஆஸ்பத்திரிக்குத்தான் வரணும். இங்கே இருக்குற நர்ஸ் அம்மா எல்லாம் ஏதேதோ டெஸ்ட் எடுத்து, அதுக்கப்புறம் டாக்டர் அம்மாவைப் பாக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது… கடைசியா ஊசி ஒண்ணு போட்டு விடுங்கனு சொன்னா, அதை இதைச் சொல்லி தட்டிக்கழிச்சிடுறாங்க. இன்னும் சொல்லப்போனா இங்க வேலை பாக்குற சிலபேரு ஒரு மாதிரியா எங்களை நடத்துறாங்க. நாங்கல்லாம் இங்க விவசாயக் கூலி வேலை பார்த்துக்கிட்டுதான் இருக்கோம். ஒரு ஆத்திர அவசரத்துக்கு ஒடியாரணும்னாக்கூட இந்த தர்ம ஆஸ்பத்திரிக்குதான் வரணும்.
அப்போ இங்க இருக்கறவங்க, ரெண்டு மாத்திரையைக் குடுத்து, ஊசி போட்டு பக்கத்துல இருக்குற திருத்துறைப்பூண்டிக்கும், மன்னார்குடிக்கும் போகச் சொல்லி எழுதிக் கொடுத்துடுறாங்க. ‘நைட்டு நேரத்துல எங்க கெதி, அதோகெதிதான்.’ எங்களால காசு கொடுத்துப் பார்க்க முடியாமதான் இங்க வர்றோம். ஆனா, இங்கே ஒருசில மருந்துகளை மெடிக்கல்ல வாங்கச் சொல்றாங்க. எப்படியோ இந்த அரசாங்கம் எங்க நிலைமையைக் கருத்துலவெச்சு நல்லது நடந்தா சரி ” என்று மக்கள் தங்கள் வேதனையைத் தெரிவித்தனர்.
அங்கிருக்கும் செவிலியர்களிடம் கேட்டபோது, “இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒரு நாளைக்கு தோராயமா 150 பேர் வருவாங்க. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரங்கநாதபுரம், பைங்காட்டூர், வாட்டார், கருப்புகிளார், ஒரத்தூர், நல்லூர், அக்கரைக்கோட்டகம், திருக்களார், வெங்கத்தான்குடி, குறிச்சிமலை, தெற்குநாணலூர், களப்பால் ஆகிய ஊராட்சிகள் தவிர, சித்தமல்லி, எடையூர் விளக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட குலமாணிக்கம், அகரம் களப்பால், நருவளி களப்பால், மருதவனம்,எழிலூர் மக்களெல்லாம் இங்கதான் வர்றாங்க. அதனாலதான் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படுது. அதோட மட்டுமில்லாம இங்கே செவிலியர், ஸ்வீப்பர், RCH (Reproductive Child Health) பற்றாக்குறையும் இருக்கு” என்றனர்.
அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் பேசியபோது, “இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு மருத்துவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். எனினும், இந்தப் பதவி நிரப்பப்படாமலேயே இருக்கிறது. மருத்துவர்களில் சிலர் தேர்ந்தெடுத்த பணி வேறாக இருக்கும். ஆனால், இங்கு டெபுடேஷனில் பணி செய்வார்கள். சிலர் நடமாடும் மருத்துவப் பிரிவு (Mobile Medical Unit)-க்கு தேர்வுசெய்யப்படுவார்கள். ஆனால் தற்போது இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் டெபுடேஷனில் பணியமர்த்தப்படுகிறார்கள். மருந்துத் தட்டுட்பாட்டுக்குக் காரணம் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட 12 பஞ்சாயத்துகளைத் தவிர, பிற பகுதிகளிலிருந்தும் நோயாளிகள் வருகிறார்கள். இவர்களின் வருகைக்குக் காரணம், இந்த மருத்துவமனை அவர்களின் வசிப்பிடத்துக்கு அருகில் இருப்பதுதாதான்” என்று கூறினார்.
இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் ஹேமந்த் காந்தியிடம் கேட்டபோது, “அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பொறுத்தவரை, அங்கு நிரந்தரமாக மருத்துவர்களைப் பணியமர்த்துவதில் சிரமம் இருக்கிறது. காரணம், மருத்துவர்கள் தங்களது உயர்கல்விப் படிப்புக்காக கிராமப்புறங்களுக்குப் பணியாற்ற வருகின்றனர். அவர்களின் மேற்படிப்பு உறுதியாகும்பட்சத்தில் சென்றுவிடுகின்றனர். மருந்துத் தட்டுப்பாடு இந்த மாவட்டத்தில் இல்லை. இருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட மருத்துவமனையில் இருக்கிறது என்று கூறுகிறீர்கள். அது சம்பந்தமாக விசாரிக்கிறேன்” என்று பதிலளித்தார்.
இங்கிருக்கும் விவசாயக் கூலி மக்களுக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சையளிக்க இந்த அரசு செவிசாய்க்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88