கனவு – 150 |நீர்வழித் தடங்களில் படகு சவாரி… அலங்காரப் படகு விடுதிகள் | சென்னை – வளமும் வாய்ப்பும்!

ஜப்பான் நாட்டின் டோக்கியோ மாநகரை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க அவர்கள் Tokyo’s Metropolitan Outer Area Underground Discharge Channel என்ற வெள்ள நீர் வடிகால் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதே மாடலைப் பின்பற்றி சென்னையிலும் டோக்கியோ மாடலில் வெள்ளநீர் வடிகால் மேலாண்மை திட்டத்தை அமல்படுத்தலாம்.

டோக்கியோவை வெள்ளத்திலிருந்து பாதுக்காக்க புறநகர் பகுதியில் ஒரு Discharge Channel (வடிகால்) அமைத்து, நகர் பகுதிக்கு வரும் நீர்வரத்தைக் குறைத்து புறநகரிலேயே வெளியேற்றுகின்றனர். கூடுதலாக ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர் வழித் தடங்களை ஆழப்படுத்தி, அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளகின்றனர்.

டோக்கியோ வெள்ள நீர் வடிகால் திட்டம் கிட்டத்தட்ட 230 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கிறது. இதனால் டோக்கியோ 70 சதவிகித வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதையே முன்மாதிரியாகக் கொண்டு, சென்னை மாநகருக்கான வெள்ளத் தடுப்பு முறையை உருவாக்கலாம்.

சென்னையை பொறுத்தவரை பெரிய Discharge Channel போன்ற கட்டமைப்புகளை அமைக்க வேண்டிய தேவைகள் இல்லை. ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர் வழித் தடங்களை ஆழப்படுத்தி, சீரமைத்தாலே போதும். குறிப்பாக, சென்னையின் புறநகர் பகுதிகளில் இருக்கும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், உப்பேரி உள்ளிட்ட ஏரிகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதை இன்னும் துரிதப்படுத்த வேண்டியது அவசியம்.

அதோடு, கொசஸ்தலை, அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆற்றின் கிளைகள் மற்றும் பக்கிங்காம் உள்ளிட்ட கால்வாய்கள் வழியாக, மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வெள்ள நீரை விரைவாகக் கடலுக்கு எடுத்துச் செல்ல முடியும். இன்னும் கூடுதலாகப் பல நீர் வழித்தடங்கள் சென்னை மாநகரில் இருக்கின்றன. உதாரணமாக பள்ளிக்காரணை சதுப்பு நிலம், வேளச்சேரி, புழல், பூண்டி… என சென்னையே ஏரிகளால் நிரம்பியதுதான். அவற்றின் நீர்வழித் தடங்களை அடையாளம் கண்டு, தேவையான இடங்களில் அவற்றை மீட்டுருவாக்கம் செய்யலாம். அவ்வாறு செய்யும்போது, சென்னை மாநகரைப் பெரும் வெள்ளங்களிலிருந்து தற்காத்து கொள்ளலாம்.

முக்கியமாக அதிக கனமழை, பெரும் சூறாவளி புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும்பொழுது, நகரின் குடியிருப்புகளுக்குள்ளும் சாலைகளுக்குள்ளும் ரயில்வே பாதைகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்து, பாதிப்புகளை ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக வெளியேற்ற முடியும். அது மட்டுமன்றி, ஏரி, ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் மூலமாக, நிலத்தடி நீர் மட்டமும் உயரும். குறிப்பாக அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டி, தண்ணீரைச் சேமிக்கலாம். அதில் படகு சவாரி, அலங்காரப் படகு குழாம், விடுதிகளை அமைத்தால் அதன் வழியே பொருளாதார வளத்தையும் சென்னை மாநகரம் பெறும்.

அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் நீர்வழித் தடங்களில் படகு சவாரி சேவையைத் தொடங்கலாம். அடையாற்றில் அலங்காரப் படகு விடுதிகளை அமைக்கலாம்.

ஐரோப்பிய யூனியனில் புகழ்பெற்ற ஆறுகளில் ஒன்றான தேம்ஸ் நதி, லண்டன் நகருக்கு உள்ளேயும் வெளியேயும் பாய்கிறது. இந்த நதியில் பல ஆண்டுகளாக படகு சேவை இயங்கிவருகிறது. நகரின் உள்பகுதியில் மென்விசைப் படகுகளையும் நகரின் முக்கிய இடங்களிலும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட மெட்ரோ படகுகளையும் (Metro Boat) இயக்குகிறார்கள். அதோடு, தேம்ஸ் ஆற்றின் கரையோரங்களில் அலங்காரப் படகு விடுதிகளையும் நிர்வகித்து வருகிறார்கள். ஒவ்வொன்றிலும் அதற்கேற்ப கட்டணங்கள் நிர்ணயித்து, வசூலிக்கப்படுகிறது.

லண்டனின் தேம்ஸ் நதியைப் போலவே தமிழ்நாட்டின் அடையாறு, கூவம் நதிகளும் பழமையானவை. அடையாற்றில் முன்பு சுத்தமான நீர் ஓடிக்கொண்டிருந்ததும் அதில் படகு சவாரி நடைபெற்றதும் வரலாறு. அதன் காரணமாக இன்றும் சில குறிப்பிட்ட இடங்களில் ‘போட் கிளப்’ என்ற அடையாளம் எஞ்சியிருக்கிறது.

இன்றைய தேதியில், அடையாறு, கூவம் நதிகளில் கழிவுநீர் கலப்பது அதிகரித்து, அதன் தன்மை முழுக்க மாறிப் போய்விட்டது. இந்த நதிகளைச் சீரமைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அடையாறு, கூவம் நதிகளின் கரைகளை வலுப்படுத்தி, ஆங்காங்கே பூங்காக்களை அமைக்கிறார்கள். நீர்வழித்தடங்களை ஆழப்படுத்தி, தூர் வாருவதோடு, நெகிழி குப்பைகள் சேராவண்ணம் தடுக்கவும் செய்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக அடையாற்றில் ஒருவர் அல்லது இருவர் அமர்ந்து பயணிக்கும் வகையில் படகு சவாரி மற்றும் இரவு நேரங்களை அலங்கரிக்கும் அலங்கார படகு விடுதிகளை அமைக்கலாம்.

சென்னை அடையாறு பாலத்தில் தொடங்கி கோட்டூர்புரம் பாலம் வரை அலங்காரப் படகு விடுதிகளை அமைக்கலாம். இங்கு மென்விசைப் படகுகளை இயங்கச் செய்வதோடு, படகிலேயே அமர்ந்து உணவு வகைகளை அருந்துவிதமாக சேவைகளை ஏற்படுத்தலாம். ஒரு மணி நேரத்திலிருந்து அதிகபட்சமாக மூன்று மணி நேரம் வரை இந்தச் சேவையை அளிக்கலாம். மாலை நேரங்களில் தொடங்கி நள்ளிரவு 11 மணி வரை இந்த அலங்காரப் படகு விடுதிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும். இந்தச் சேவைக்காக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் கட்டணம் நிர்ணயித்து, அதற்கேற்றவாறு வசூல் செய்யலாம். இவ்வாறு செய்யும்போது சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்த்து, வருமானத்தைப் பெருக்கலாம்.

தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக உயர்த்தும் உயரிய நோக்கில், கனவு தமிழ்நாடு இயக்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளில் ஒன்றான `கனவு’ பொருளாதாரத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது.

2022 ஜனவரி மாதம் தொடங்கி, 2024 ஆகஸ்ட் வரையில் சுமார் 32 மாதங்கள் (கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக) உங்களோடு உரையாடி வந்திருக்கிறேன். தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களை நிறைவு செய்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வளங்களைக் கண்டறிந்து அவற்றை வாய்ப்புகளாக மாற்றி, சுமார் 400-க்கும் மேற்பட்ட ‘கனவு’ ஐடியாக்களைப் பரிந்துரை செய்துள்ளேன்.

சுரேஷ் சம்பந்தம்

இந்தப் பயணத்தில் ஏறக்குறைய எனது குழு 10,000 மணி நேரமும், நான் தனிப்பட்ட முறையில் 1,000 மணி நேரமும் செலவிட்டிருக்கிறோம். இந்தத் தொடரின் வழியே நிறைய தொழில்முனைவோர்களையும் பிராண்டுகளையும் உருவாக்கியிருக்கிறேன். தற்போது அந்த பிராண்டுகள் மார்க்கெட்டில் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே 150 பிராண்டுகள் உள்ளன. இந்தத் தொடரின் வழியே அவை இன்னும் பல நூறு பிராண்டுகளாக அதிகரிக்க வேண்டும் என்பதே என் பெருங்கனவு. அதை இப்போது உங்கள் கைகளிலும் ஒப்படைக்கிறேன். ‘ஊர் கூடி தேர் இழுத்தல் போல…’ இது நாம் கூட்டு சேர்ந்து சாதிக்க வேண்டிய அரும்பணி. அந்தப் பணி என்னளவில் தொடரும். நீங்களும் உங்கள் பங்களிப்பை செய்து, இந்தத் தொடர் வாயிலாக இன்னும் நிறைய பிராண்டுகளை உருவாக்க வேண்டும். அதற்கு என்னுடைய ஆலோசனை, உதவி தேவைப்படின் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்பு ([email protected]) கொள்ளலாம்.

இந்தத் தொடர் சிறப்பாக வெளிவர உதவிய மாவட்ட ஆட்சியர்கள், தமிழ்நாடு அரசின் தாலுகா அலுவலர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், வணிகர் சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சி.ஐ.ஐ (CII – Confederation of Indian Industries), சிட்கோ (SIDCO), சிறுகுறு தொழில் நிறுவனர்கள் (MSME), சுய உதவி குழுக்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களின் ஒத்துழைப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களின் பங்களிப்பாலும்தான் இந்த வெற்றியும் நிறைவும் சாத்தியமாகின. இதற்காகப் பல தளங்களில் இருந்து உதவிய அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.

இனி ‘கனவு’ உங்கள் கைகளில்…

பின்குறிப்பு : கனவு தொடரை `விகடன்.காம்’ (Vikatan.com) இணையதளத்தில் தொடர்ந்து படிக்குமாறு கோருகிறேன். எப்போதும்போல யு-டியூப்பில் விகடன் டிவி (Vikatan TV) சேனலில் வீடியோ வடிவத்திலும் வெளியாகும்!