`தோஷம் கழிச்சாத்தான் குடும்பம் நல்லா இருக்கும்’ – மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியை திருடிய இருவர் கைது

நெல்லை மாவட்டம், தச்சநல்லூரைச் சேர்ந்தவர் சிவனியம்மாள். 90 வயதான இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்கு அருகிலேயே இவரது மகனின் வீடும் உள்ளது. இந்த நிலையில், மதிய நேரத்தில் சிவனியம்மாள் வீட்டில் இருந்தபோது நாங்கள் ஜோதிடர்கள் எனக்கூறி, 2 பேர் அங்கு வந்துள்ளனர். “பாட்டி.. உங்க குடும்பத்துல தோஷம் இருக்கு. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்தால்தான் குடும்பம் நன்றாக இருக்கும்” எனக் கூறியுள்ளனர்.

தச்சநல்லூர் காவல் நிலையம்

அதைஉண்மை என நம்பிய அவர் தோஷம் கழிக்க சம்மதித்துள்ளார். ”தோஷம் கழிக்கும் போது கழுத்துல தங்கநகை போடக்கூடாது” எனச் சொல்லி, கழுத்தில்  அணிந்திருந்த 12 கிராம் தங்கச் சங்கிலியை கழட்டி ஒரு பாத்திரத்திற்குள் போடச் சொல்லியுள்ளனர். அந்த நேரத்தில் எதேச்சையாக வந்த அவரது பேத்தி, “தோஷம் எதுவும் கழிக்க வேண்டாம். நீங்க வீட்டை விட்டுக் கிளம்புங்க” எனச் சொல்லியுள்ளார். ஆனாலும், பேத்தியின் பேச்சைக் கேட்காத சிவனியம்மாள், தங்கச்சங்கிலியை கழற்றி பாத்திரத்திற்குள் போட்டுள்ளார்.  அப்போது குடிப்பதற்கும், தோஷம் கழிப்பதற்கும் தண்ணீர் வேண்டும் எனச் சொல்லியுள்ளனர் அந்த நபர்கள்.

சிவனியம்மாளும், பேத்தியும் தண்ணீர் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றுள்ளனர். தண்ணீரைக் கொண்டு வந்து பார்த்தபோது அந்த இரண்டு நபர்களுமே அங்கு இல்லை. பாத்திரத்தில் போட்ட தங்கச்சங்கிலியையும் காணவில்லை. தன்னை ஏமாற்றியதை அறிந்த சிவனியம்மாள், தன் நடந்ததை தன் மகனிடம் கூறியுள்ளார். அவர், தச்சநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

தச்சநல்லூர் காவல் நிலையம்

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், சிவனியம்மாளின் வீட்டிற்குள் இருவர் செல்வதும் பின்னர் சிறிது நேரத்தில் வேகமாக வெளியேறிச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான சரவணன் மற்றும் அவரது நண்பரான 17 வயது சிறுவன் ஆகியோர்தான் நூதன முறையில் திருடிச் சென்றது தெரிய வந்தது. சரவணின் தந்தை ஜோதிடராக இருப்பதால் ஜோதிடர் போல பேசி தங்கச்சங்கிலியை திருடியதை ஒப்புக் கொண்டார். இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து தங்கச்சங்கிலியை மீட்டு சிவனியம்மாளிடம் ஒப்படைத்தனர்.    

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88