`உள் இட ஒதுக்கீடு தீர்ப்பு; பட்டியல் சமூகத்தை பல்வேறு குழுக்களாக பிரிக்கும்’ – திருமாவளவன் விளக்கம்!

பட்டியல் சமூக பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரம், மாநிலங்களுக்கு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் இத்தகைய தீர்ப்பை வரவேற்று வரும் சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி அத்தீர்ப்பைக் கண்டித்து ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னை வள்ளூவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது, பேசுபொருளாகியுள்ளது.

உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரம் மாநிலங்களுக்கு இருக்கிறது என தீர்ப்பு வழங்கியதோடு எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்துவது அவசியம் என்ற கருத்தையும் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். நீதிபதி பி.ஆர்.கவாய், ‘எஸ்.சி., எஸ்.டி பிரிவில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்த புதிய கொள்கையை வரையறுக்க வேண்டும். இது தொடர்பாகச் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்றும் கூறியிருக்கிறார்.

விசிக ஆர்ப்பாட்டம்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூகநீதியை நிலைநாட்டும் நமது பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது” என வரவேற்றார்.

அதேபோல் அ.தி.மு.க-வும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டனர். ஆனால் இத்தீர்ப்பையும் கிரீமிலேயர் கருத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக எதிர்த்ததோடு, ஆர்ப்பாட்டமும் நடத்தியிருக்கிறது.

உச்ச நீதிமன்றம்

ஆர்ப்பாட்ட நிகழ்வில் பேசிய வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், “உள் ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் மாநில அரசுகளுக்கான உள் ஒதுக்கீடு உரிமையும், கிரிமிலேயர் ஆகிய இரண்டும்தான் இங்கே மிக முக்கியமான பிரச்சனைக்குரியவை என்பதை நாம் உணர வேண்டும். தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கும் ஆந்திராவில் வழங்கப்படும் உள் ஒதுக்கீட்டிற்கும் வேறுபாடுகள் உண்டு. தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு வழங்கப்படுவது sub quota அதாவது… பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை. ஆனால் ஆந்திராவில் வழங்கப்படுவது sub class. இது பட்டியல் சமூகத்தை தனி அங்கமாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்குவது. எனவே பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையையே நசுக்கும் விதமாக இத்தீர்ப்பு அமைகிறது” என்றார்.

ஆர்ப்பாட்டம் நடத்திய வி.சி.க

தொடர்ந்து பேசியவர், “பட்டியல் சமூகத்தினரைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து இட ஒதுக்கீட்டைப் பங்கீடு செய்வதற்கு மாநில அரசுகளிடம் அதிகாரம் அளிப்பதையும்; வருமான வரம்பு அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு கிரீமிலேயர் முறையைத் திணிக்க முயல்வதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு செய்வதற்கு இந்திய ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்றார்.

இத்தீர்ப்பை எதிர்ப்பதனால், பல தரப்பினர் வி.சி.க-வை எதிர்த்து வருகின்றனர். அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய திருமாவளவன், “சமூகநீதி குறித்தும் ஜனநாயகம் குறித்தும் வி.சி.க-வுக்கு யாரும் பாடமெடுக்க வேண்டிய அவசியமில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பதினால் சாதி அமைப்புகள் உள்ளிட்ட பலர் விமர்சிக்கின்றனர். இதனால் தமிழ்நாட்டில் உள்ள அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் வராது. மாநில அரசுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் வழங்குவதைத்தான் கடுமையாக எதிர்க்கிறோம். சாதி இந்துகளின் அரசுதான் இந்தியா முழுவதும் பல்வேறும் மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இந்த அதிகாரத்தை கொண்டு உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தலித் மக்கள் சிதறடிக்கப்படுவார்கள்” என்றார்.

ஆர்ப்பாட்ட நிகழ்வில் வி.சி.க பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனைசெல்வன், துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.