TVK விக்கிரவாண்டி மாநாடு: `18 தீர்மானங்கள்?!’ – விஜய் கட்சியின் `தடதட’ ப்ளான் என்ன?

தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, தனது புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்ட விஜய், கட்சியின் முதல் மாநாட்டை வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தார். மாநாட்டுக்கான இடத்தைத் தேர்வு செய்யும் பொறுப்பு, கட்சியின் பொதுச்செயலாளரான பாண்டிச்சேரி ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முதலில், ஈரோடு மாவட்டத்தில்தான் மாநாடு நடத்துவதற்கு இடம் பார்க்கப்பட்டது. ‘பெரியார் பிறந்த மண்’ என்கிற அடிப்படையில், கட்சியின் தொடக்க விழாவை அங்கிருந்து தொடங்கவும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், “தென்மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு போதிய போக்குவரத்து வசதிகள் கிடைக்காது. தவிர, நாம் எதிர்பார்க்கும் அளவில் ஈரோட்டில் இடமும் கிடைக்கவில்லை” எனக் கட்சியிலுள்ள சில சீனியர்கள் ஆலோசனைச் சொல்லவும், மதுரையிலும் திருச்சியிலும் இடம் பார்க்கச் சொல்லியிருக்கிறார் விஜய். அதற்காக, கடந்த ஒரு மாதமாக திருச்சி, மதுரையில் சுற்றிவந்தார் பாண்டிச்சேரி ஆனந்த். திருச்சி பொன்மலையிலுள்ள ரயில்வே மைதானத்தை வாடகைக்கு எடுக்கவும் பேசப்பட்டது. இந்தச் சூழலில்தான், விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் த.வெ.க-வின் முதல் மாநாடு நடைபெறுமென தகவல் வெளியாகியுள்ளது.

விஜய், பாண்டிச்சேரி ஆனந்த்

இது தொடர்பாக நம்மிடையே பேசிய த.வெ.க-வின் சீனியர் நிர்வாகிகள் சிலர், “செப்டம்பர் மாதம் முழுவதுமே மழை மாதம் என்பதால், மண்ணோடு மழைநீரும் சேர்ந்து சகதிக் காடாக ஆகிவிடும். அதற்காக, களிமண் இல்லாத பூமியாகத்தான் மாநாட்டுக்கு இடமும் பார்க்கப்பட்டது. திருச்சி பொன்மலையில் பார்க்கப்பட்ட ரயில்வே மைதான இடம், மழை நீர் சேர்ந்தாலும் சகதி சேராத கட்டாந்தரை பூமி. தவிர, தென்மாவட்டங்களுக்கும் வடமாவட்டங்களுக்கும் மையமாக இருப்பதால், போக்குவரத்திலும் சிரமம் இருக்காது. அதனால், அந்த இடத்தையே தேர்வு செய்தார் ஆனந்த். அதிலிலும் ஒரு சிக்கல் முளைத்தது. விஜய்யின் முதல் மாநாடு என்பதால், குறைந்தது மூன்று லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். ரயில்வே மைதானத்தில் ஒரு லட்சம் பேருக்கு மேல் கூடவே முடியாது. அதற்காக, மைதானத்தின் பின்புறமுள்ள 50 ஏக்கர் ரயில்வே இடத்தையும் வாடகைக்குக் கேட்டுப்பார்த்தார் ஆனந்த். ரயில்வே நிர்வாகம் தரப்பில் எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. வேறு வழியில்லாமல்தான், வடமாவட்டத்தில் இடத்தைப் பார்க்கத் தொடங்கினோம்.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில், அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சூர்யா கல்லூரி அருகே இடம் இருப்பதாகத் தெரிந்தது. அந்த இடம், சென்னை – திருச்சி நெடுஞ்சாலைக்கு அருகிலேயே அமைந்திருப்பதாலும், மழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படுத்தாத மண்ணோடு இருப்பதாலும் அதையே தேர்வு செய்தார் ஆனந்த். தொடக்கத்திலிருந்தே, செப்டம்பரில் மாநாடு நடத்துவதில் ஆனந்துக்கு உடன்பாடே இல்லை. ‘மழைக்காலத்தில் மாநாடெல்லாம் வேண்டாம். தவிர, குறைந்த கால இடைவெளிக்குள் லட்சக்கணக்கானோர் கூடும் மாநாட்டை நடத்துவது சிரமம். அடுத்தாண்டு ஜனவரியில் நடத்திக் கொள்ளலாம்’ என விஜய்யிடம் பேசிப் பார்த்தார் ஆனந்த். ஆனால், செப்டம்பரில் மாநாட்டை நடத்துவதிலிருந்து விஜய் பின்வாங்கவில்லை. வேறுவழியில்லாமல் ஆனந்தும் சம்மதித்தார். செப்டம்பர் மாதம் 22-ம் தேதி மாநாடுக்கான தேதியாகக் குறிக்கப்பட்டிருக்கிறது.

பாண்டிச்சேரி ஆனந்த்

மாநாடுக்கு ஒருநாள் முன்னதாகவே விழுப்புரத்திற்கு வரும் விஜய், அங்கேயே தங்கியிருந்து மாநாடுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை மேற்கொள்கிறார். மாநாட்டை மாலை 3 மணிக்குத் தொடங்கவும், மாலை 6 மணிக்கு விஜய் உரை நிகழ்த்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் நலன் சார்ந்தும், உரிமை சார்ந்தும் 18 தீர்மானங்கள் வரை மாநாட்டில் நிறைவேற்ற ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய அரசைக் கண்டித்தும் சில தீர்மானங்கள் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. இதற்கானப் பணிகளையெல்லாம் ஆனந்த் தான் ஒருங்கிணைக்கிறார்” என்றனர்.

செப்டம்பர் 22-ம் தேதி முருகக் கடவுளுக்கு உகந்த கார்த்திகை விரத நாள் என்பதால், அன்றைய தினமே மாநாட்டை நடத்த பாண்டிச்சேரி ஆனந்த் தான் தனது ஆஸ்தான ஜோதிடர் மூலமாக தேதி குறித்ததாகச் சொல்கிறது த.வெ.க வட்டாரம். இதற்கிடையே, “அன்றைய தினம் தேய்பிறை. கட்சியை யாராவது தேய்பிறையில் தொடங்குவார்களா..?” என்கிற குமுறலும் கட்சிக்குள் கேட்கத் தொடங்கியிருக்கிறது. செப்டம்பர் மாதம் முதல் மாநாட்டை நடத்துவதில் விஜய் உறுதியாக இருப்பதால், அதற்கான பணிகளை இப்போதிருந்தே தொடங்கிவிட்டனர் த.வெ.க கட்சியினர். கட்சிக்குள் அமைக்கப்படவுள்ள 100 மாவட்ட அமைப்புகளிலும், மாவட்டத்திற்கு தலா 5,000 பேரைத் திரட்டிவர தலைமையிலிருந்து உத்தரவு பறந்துள்ளதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். எந்தெந்த தீர்மானங்களை நிறைவேற்றுவது, அதை மேடையில் யார் வாசிப்பது என்கிற பட்டியலும் தயாராகி வருகிறது.