லட்சங்களில் இந்தியர்கள் `குடியுரிமை’ துறப்பதன் தாக்கம் என்ன?!

இந்திய குடிமக்களில் லட்சக்கணக்கானோர் தங்கள் குடியுரிமையைத் துறந்துவிட்டு வெளிநாட்டு குடியரிமையைப் பெற்றுவருகிறார்கள். இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் வியப்பை அளிக்கிறது.

பாஸ்போர்ட்… பறபற… பரபர!

இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையைக் கைவிட்டு சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகமாகக் குடியேறுகிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் ஆண்டுதோறும், சராசரியாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியக் குடியுரிமையைத் துறந்து, வெளிநாட்டில் குடியேறுவதாக இந்திய அரசு புள்ளிவிவரங்களை வெளியிட்டுவந்தது. ஆனால், 2023-ம் ஆண்டில் 2.16 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்திருக்கிறார்கள் என்ற மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

குடியுரிமை

குடியுரிமையைத் துறந்த இந்திய குடிமக்கள் குறித்த கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலமாக நாடாளுமன்றத்தில் பதிலளித்தார். அதில், ‘2023-ம் ஆண்டில் 2.16 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்திருக்கிறார்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்துவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள் என்ற விவகாரம் சமூகத்தில் பெரிய விவாதப்பொருளாக மாறவில்லை. மேலும், கவனத்துக்குரிய செய்தியாகவும் அது பார்க்கப்படுவதில்லை.

பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களில் ஒரு பகுதியினர்தான் இவ்வாறு குடியுரிமையைத் துறந்துவிட்டு வேறு நாடுகளில் குடியேறுகிறார்கள். இதனால், இந்தியாவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்பதை பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காண்பிக்கிறார்கள். இந்த விவகாரத்தால், அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் வரி வருவாய் தளம் பாதிப்பை சந்திக்கும் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

நாடாளுமன்றம்

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான ஜெய்ராம் ரமேஷ், ‘குடியுரிமையைத் துறந்த இந்தியர்களில் பலர் மிகவும் திறமையானவர்கள், படித்தவர்கள், திறமையான தொழிலாளர்கள். அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவது நமது பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும் கோடீஸ்வரர்கள் 17,000 பேர் இந்தியாவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள்’ என்கிறார்.

இந்தியாவைக் காட்டிலும் பல அம்சங்களில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களின் பொருளாதாரத்துக்கும், வணிகத்துக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் வசதியானதாக இருப்பதாக அவர்கள் பார்க்கிறார்கள். உதாரணமாக, ‘இந்திய பாஸ்போர்ட் மூலமாக விசா இல்லாமல் ஆசியா, ஆப்ரிக்காவின் 57 நாடுகளுக்கு மட்டுமே செல்ல முடியும். ஆனால், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் மூலமாக 150 நாடுகளுக்கு செல்ல முடியும்.

இந்திய குடியுரிமை

மேலும், இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை கிடையாது. ஆகையால், பலர் இந்திய குடியுரிமையைத் துறந்துவிட்டு, அவர்களின் விரும்பும் நாடுகளின் குடியுரிமையைப் பெறுகிறார்கள். எனவே, இந்தியா இரட்டைக் குடியுரிமையை வழங்க வேண்டும் என்ற கருத்தை சிலர் முன்வைக்கிறார்கள்’ என்று சொல்லப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, இந்திய குடியுரிமையைக் கைவிடுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சத்துக்கு மேல் என்று இருந்தது. உதாரணமாக, 2011 முதல் 2019 வரை சுமார் 1,30,000 என்ற அளவில் சராசரி இருந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு, அந்த எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டுகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குடியுரிமை

உலகமயக் கொள்கை கோலோச்சும் காலத்தில் இந்தப் போக்கு தவிர்க்க முடியாத ஒன்றா, அல்லது, தேசத்தின் நலன் கருதி, இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. எதிர்க்கட்சிகள் எழுப்பும் இது தொடர்பான கேள்விகளுக்கு ஆட்சியாளர்கள் ஆய்வுகள் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88