கடந்த ஆண்டு அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் அப்போது பெரும் விவாதப் பொருளானது. ஆனால், அந்தக் குற்றசாட்டுகளை முழுவதுமாக மறுத்தது அதானி குழுமம். இந்த நிலையில், சமீபத்தில், ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவருடைய கணவர் ஆகியோர், அதானி நிறுவனத்துக்குத் தொடர்புடைய நிறுவனங்களில் பங்குகள் வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டியிருக்கிறது.
இதை மாதபி பூரி புச்-ம், அவருடைய கணவரும், அதானி குழுமமும் மறுத்திருக்கின்றன. இந்த நிலையில் ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில்,“பங்குச் சந்தையை நிர்வகிக்கும் நிறுவனங்கள், அந்த வணிக நிறுவனங்களுடன் சமரசம் செய்துகொள்வதால், இந்திய பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க ஆபத்து உள்ளது என்பதை, எதிர்க்கட்சித் தலைவராக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது எனது கடமை. அதானி குழுமத்திற்கு எதிரான மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ள நிலையில், அதை விசாரிக்க வேண்டிய நடுவரான செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவரும் அந்த நிறுவனத்துடன் சமரசம் செய்து கொண்டதாக தற்போது செய்திகள் வெளியாகின்றன.
நாடு முழுவதும் உள்ள நேர்மையான முதலீட்டாளர்கள், ‘நடுநிலை இழந்த செபி தலைவர் மாதபி பூரி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?’ என அரசிடம் அழுத்தமான கேள்விகளை வைத்துள்ளனர். முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால், பிரதமர் மோடி… செபி தலைவர்… அதானி… இதில் அதற்கு யார் பொறுப்பேற்பார்? இந்த விவகாரத்தில் கூட்டு நாடாளுமன்றக் குழுவை பிரதமர் மோடி ஏன் எதிர்க்கிறார் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்குமா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் பா.ஜ.க தலைவர் அமித் மாளவியா,“எதிர்க்கட்சித் தலைவர் இப்போது வெளிப்படையாக இந்தியப் பங்குச் சந்தைகளின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகத்தைத் தூண்டி வருகிறார். நமது பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் இந்த அப்பட்டமான முயற்சி, ராகுல் காந்தியின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இது இந்தியாவின் அழிவைத் தவிர வேறில்லை. ஹிண்டன்பர்க் – அதானி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ‘வேண்டுமென்றே எந்த வீதி மீறல்களும் செய்யப்படவில்லை’ என்பதை தெரிவித்த போதிலும், ராகுல் காந்தி சந்தேகத்தை விதைக்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88