சிக்கலில் ‘SEBI’ தலைவர்… எதிர்க்கட்சிகளின் டார்கெட்டும் மோடி அரசின் நகர்வும்!

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆதாரங்களுடன் வெளியிட்ட அறிக்கை, கடந்த ஆண்டு இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதானி

தொடர்ந்து ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் எழுப்பினர். அப்போது, பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின்போது, தொழிலதிபர் கெளதம் அதானி உடன் சென்றது குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியதால், நாடாளுமன்றத்தில் புயல் வீசியது. மக்களவைத் தேர்தலிலும் அதானி விவகாரம் எதிரொலித்தது.

ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்திய அதானி குழும முறைகேடுகள் குறித்து ‘செபி’ விசாரணை நடத்திவருகிறது. இந்த நிலையில்தான், ‘அதானி குழும முறைகேடு புகார் தொடர்புடைய நிதி நிறுவனங்களில் ‘செபி’ தலைவராக இருக்கும் மாதவி புச், அவருடைய கணவர் ஆகிய இருவரும் முதலீடு செய்திருக்கிறார்கள். அதனால், அதானி குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி ஆர்வம் காட்டவில்லை’ என்ற அதிர்ச்சித் தகவலை ஹிண்டன்பர்க் தற்போது வெளியிட்டிருக்கிறது.

அதானி – மோடி

இது தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், ‘அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பை உயர்த்தவும், நிதி பரிமாற்றத்துக்காகவும் கெளதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, பெர்முடா மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்களை முறைகேடாகப் பயன்படுத்தினார். அந்த நிறுவனங்களில் முதலீட்டுத் திட்டங்களில் கணக்கில் காட்டாத முதலீடுகளை செபி தலைவர் மாதபி புச், அவருடைய கணவர் ஆகியோர் செய்திருக்கிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தற்போது, ஹிண்டன்பர்க் விவகாரம் மீண்டும் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாகக் கையிலெடுத்திருக்கின்றன. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘அதானி குழுமம் தொடர்பான மெகா ஊழலை விசாரிப்பதில் விசித்திரமான முறையில் செபி தயக்கம் காட்டிவந்தது.

அதானி – ஹிண்டன்பர்க்

செபி தலைவரும், அவருடைய கணவரும், மொரீஷியஸை தலைமையிடமாகக் கொண்ட வெளிநாட்டு நிதிகளில் முதலீடு செய்ததிருப்பதை ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது. மாதபி 2022-ம் ஆண்டு, செபி-யின் தலைவராக ஆனபோது, அவரை இரண்டு முறை அதானி சந்தித்திருக்கிறார். இது சந்தேகத்தை எழுப்புகிறது’ என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் எம்.பி-யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ‘பங்கு முதலீட்டாளர்களின் பணத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு, பங்கு சந்தை ஒழுங்குமுறை அமைப்பான ‘செபி’க்கு இருக்கிறது. செபி தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் அந்த அமைப்பின் நேர்மை கடுமையாக சமரசம் செய்யப்பட்டிருக்கிறது. குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் செபி தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால், அதற்கு பொறுப்பேற்பது யார்? பிரதமர் மோடியா, செபி தலைவரா அல்லது கவுதம் அதானியா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ராகுல் காந்தி

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டை விசாரித்த செபி அமைப்பே தற்போது முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பதால், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையை எதிர்க்கட்சிகள் முன்வைத்திருக்கின்றன.

‘செபி தலைவர் பதவி விலக வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ‘அதானி குழுமத்தின் பங்குச்சந்தை முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கிறது.

ஆளும் பா.ஜ.க-வும், அதானி குழுமம் ஹிண்டன்பார்க் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை மறுத்திருக்கின்றன. ‘இது, வெளிநாட்டு சதி’ என்று கூறியிருக்கும் பா.ஜ.க., ‘இந்திய நிதித்துறையில் நிலையற்ற தன்மையையும், குழப்பதையும் உருவாக்கும் சதியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டிருக்கின்றன’ என்று கூறியிருக்கிறது.

பிரதமர் மோடி

அதானி விவகாரத்தை எழுப்பியதையொட்டித்தான், சூரத் நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம்காட்டி ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல, அதானி விவகாரத்தையொட்டித்தான், திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகளால் குற்றம்சாட்டப்பட்டது. தற்போது, அதானியை மட்டுமின்றி, ‘செபி’யையும் மையமாக வைத்து தற்போது எழுந்திருக்கும் விவகாரத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டோம் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்கின்றன.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.பி ரவிசங்கர் பிரசாத், “இன்று சில பிரச்னைகளை எழுப்ப விரும்புகிறோம். ஹிண்டன்பர்க்கில் யாருடைய முதலீடு இருக்கிறது? இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்யும் இந்த ஜென்டில்மேன் ஜார்ஜ் சோரோஸ் பற்றி உங்களுக்குத் தெரியுமா… அவர்தான் அங்கு முக்கிய முதலீட்டாளர்… காங்கிரஸ் கட்சியின் நரேந்திர மோடிக்கு எதிரான வெறுப்பு, இன்று இந்தியாவின் மீது வெறுப்பாக வளர்ந்து கொண்டது. இந்தியாவின் பங்குச்சந்தை சீர்குலைந்தால், சிறு முதலீட்டாளர்கள் சிரமப்படுவார்களா இல்லையா? இந்த பங்கு சந்தையை சீர்குலைக்க முயல்கிறார்கள்” என்றார்,

வக்ஃப் வாரிய மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் அழுத்தத்துக்கு அரசு ஒப்புக்கொண்டது போலவே, இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்படுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88