Doctor Murder: `போலீஸால் முடியாவிட்டால் CBI-யிடம் ஒப்படைப்போம்’- பெண் மருத்துவர் கொலை வழக்கில் மம்தா

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவரும், மருத்துவம் முதுகலை இரண்டாமாண்டு மாணவியுமான ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று சடலமாக மீட்கப்பட்டார். இதில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை – கொல்கத்தா

கொல்கத்தா போலீஸ் கமிஷனர் இந்த விவரத்தைக் கூறியதையடுத்து, கடந்த மூன்று நாள்களாக மேற்கு வங்கம், டெல்லி என பல இடங்களில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் நீதிவேண்டியும், குற்றவாளியைத் தூக்கிலிடவேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மறுபக்கம், பா.ஜ.க-வை சேர்ந்த மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்திவந்தார்.

பாலியல் வன்கொடுமை

இன்னொருபக்கம், ஆர்.ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரும் இன்று பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், குற்றவாளி நிச்சயம் கண்டுபிடிக்கப்பட்டு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என்று கூறி போலீஸ் குழு ஒன்றை விசாரணைக்கு அமைத்த முதல்வர் மம்தா பானர்ஜி, போலீஸால் முடியாவிட்டால் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைப்பதாக இன்று தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய மம்தா பானர்ஜி, “இந்த சம்பவம் குறித்து கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் கேட்டறிந்த அன்றே, இதுவொரு சோகமான சம்பவம், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினேன். சம்பவத்தின்போது, மருத்துவமனையில் செவிலியர்களும், பாதுகாவலர்களும் இருந்தனர். அப்படியிருந்தும் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதை என்னால் இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை. மருத்துவமனை உள்ளே யாரோ இருந்ததாக போலீஸார் என்னிடம் தெரிவித்திருக்கின்றனர்.

சூழல் இவ்வாறிருக்க கல்லூரியின் முதல்வர் இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதேசமயம், காவல்துறை, மோப்ப நாய், தடயவியல் துறை மற்றும் பல குழுக்கள் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றன. குற்றவாளிகளைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களை விரைவில் கைதுசெய்ய போலீஸார் மும்முரம் காட்டிவருகின்றனர். எனவே, ஞாயிற்றுக் கிழமைக்குள் போலீஸார் இந்த வழக்கைத் தீர்க்காவிட்டால், அதன்பிறகும் இதை நாங்கள் வைத்திருக்க மாட்டோம். வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைப்போம்” என்று தெரிவித்தார்.