வேலூர்: ‘கொலை மிரட்டல்’ – துரை தயாநிதி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்குக் கூடுதல் பாதுகாப்பு!

வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில், கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி காலை ஆம்புலன்ஸ் மூலமாகக் கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டார் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. ஸ்ட்ரெச்சரில்தான் சிகிச்சை பிரிவுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போதில் இருந்து மருத்துவமனையின் ஏ-பிளாக்கில் துரை தயாநிதிக்கு `பிசியோதெரபி’ உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தந்தை அழகிரி உட்பட குடும்பத்தினர் அருகில் இருந்து துரை தயாநிதியை கவனித்துக்கொள்கின்றனர். இந்த சிகிச்சைப் பிரிவுக் கட்டடம், காவல்துறையினரின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

துரை தயாநிதி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் 2 முறை வேலூருக்கு வந்து துரை தயாநிதியை நலம் விசாரித்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், சி.எம்.சி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் `கொலை மிரட்டல்’ விடுத்து இ-மெயில் வந்திருக்கிறது. அந்த இ-மெயில் குறிப்பில், துரை தயாநிதியின் பெயர் குறிப்பிடப்பட்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, துரை தயாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள தளத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. மிரட்டல் வந்த இ-மெயில் குறித்தும் சைபர் க்ரைம் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.