ஜக்தீப் தன்கர் Vs ஜெயா பச்சன்: நாடாளுமன்றத்தில் வெடித்த வார்த்தை போர்… வெளியேறிய எதிர்க்கட்சிகள்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில், எதிர்க்கட்சியினர் தன்னுடைய நாற்காலிக்கான உரிய மரியாதையை அளிக்கவில்லையென சபாநாயகர் ஜக்தீப் தன்கர் நேற்று அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில், இன்றைய கூட்டத்தில் இவருக்கும், சமாஜ்வாதி எம்.பி ஜெயா பச்சனுக்கும் வார்த்தைப் போர் வெடித்திருக்கிறது. முன்னதாக ஜூலை 31-ம் தேதி மாநிலங்களவையில் நடைபெற்ற கூட்டத்தில், பா.ஜ.க எம்.பி கன்ஷ்யாம் திவாரி தன்னை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும், அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் ஜக்தீப் தன்கரிடம் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்திருந்தார்.

ஜக்தீப் தன்கர் – மல்லிகர்ஜுன கார்கே

இவ்வாறிருக்க இன்றைய கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், கன்ஷ்யாம் திவாரி – கார்கே விவகாரம் எப்படி கையாளப்பட்டது என்பது குறித்து ஜக்தீப் தன்கரிடம் விளக்கம் கேட்டார். அதற்கு, “இருவரிடமும் பேசினோம், அதில் கார்கேவை கன்ஷ்யாம் திவாரி சமஸ்கிருதத்தில் புகழ்ந்ததை நாங்கள் கண்டறிந்தோம். மாறாக, கார்கேவை அவமதிக்கும் வகையில் எதுவும் இல்லை” என்றார். இதனைக் கேட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள், பாஜக எம்.பி-க்கு ஆதரவாகச் சபாநாயகர் பேசுவதாக அமளியில் ஈடுபட்டனர். மேலும், இந்த விஷயத்தில் பா.ஜ.க எம்.பி மன்னிப்பு கேட்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தவே, இந்தப் பிரச்னை சம்பந்தப்பட்ட இருவரிடமும் பேசித் தீர்க்கப்பட்டதாகக் ஜக்தீப் தன்கர் கூறினார்.

அதையடுத்து, இந்த விவகாரத்தில் பேசும் கடைசி நபராக பேச ஜெயா பச்சனை அழைத்தார். அப்போது எழுந்த ஜெயா பச்சன், “நான் ஒரு கலைஞர். ஒருவரின் உடல்மொழி மற்றும் உணர்வு வெளிப்பாடுகளை நான் புரிந்துகொள்வேன். ஆனால், உங்களின் தொனி சரியானதாக இல்லை. நீங்கள் நாற்காலியில் அமர்ந்திருக்கலாம். ஆனால், நான் பள்ளிக்குச் சென்றது எனக்கு நினைவிருக்கிறது” என்று கூறினார். பின்னர், உடனடியாக ஜெயா ஜி அமருங்கள் என்று ஜக்தீப் தன்கர் கூற, அவையில் எதிர்க்கட்சியினரின் சத்தம் அதிகரித்தது.

ஜக்தீப் தன்கர்

அதைத் தொடர்ந்து, அனைவரையும் அமரச்சொல்லி ஜெயா பச்சனை நோக்கி பேசிய ஜக்தீப் தன்கர் , “ஜெயா ஜி நீங்கள் மிகப்பெரிய நன்மதிப்பைப் பெற்றிருக்கிறீர்கள். அதேசமயம், ஒரு நடிகர் இயக்குநருக்கு உட்பட்டவர் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால், நான் யார் என்பதை எல்லா நாளும் வெளிப்படுத்த நான் விரும்பவில்லை. எல்லா நாளும் பாடம் கற்க நான் விரும்பவில்லை. நீங்கள் என்னுடைய தொனியைப் பற்றி பேசுகிறீர்கள், போதும். நீங்கள் பிரபலமானவராக இருக்கலாம், ஆனால் பேச்சை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து, ஜெயா பச்சன் பிரபலமானவர், அவையில் மூத்த உறுப்பினர் என்று எதிர்க்கட்சி கூற, “இந்த அவையில் நடக்கும் சூழலைக் கவனித்து எதிர்வினையாற்றும் வகையில் நான் இருக்க வேண்டும். எனக்கும் மிக உயர்ந்த மரியாதை இருக்கிறது. என்னுடைய பேச்சு, தொனி, கோபம் என எதுவும் மற்றவர்களின் ஸ்க்ரிப்ட் படி நடப்பதில்லை. நான் நானாகவே நடந்துகொள்கிறேன். வேறு யாராலும் நான் இயக்கப்படவில்லை” என்று ஜக்தீப் தன்கர் கூறினார்.

ஜக்தீப் தன்கர்

அப்போது, காங்கிரஸ் எம்.பி சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்யவே, “நீங்கள் முழு தேசத்தையும் சீர்குலைக்க விரும்புகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் சபையில் குழப்பத்தை ஏற்படுத்தவே கிளம்பினீர்கள். உங்கள் கடமைகளிலிருந்து நீங்கள் விலகிச் செல்கிறீர்கள்” என்றார் ஜக்தீப் தன்கர். இவரைத்தொடர்ந்து பா.ஜ.க அமைச்சர் ஜே.பி.நட்டா, “அரசியலில் அவர்களின் தரம் வீழ்ச்சியடைந்திருக்கிறது என்பது தெளிவாகிறது… ஒரு கட்சி மற்றும் தனிநபரை எதிர்ப்பதிலிருந்து, இப்போது நாட்டை அவர்கள் எதிர்க்கிறார்கள். இந்த அநாகரிகமான நடத்தைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார். இதோடு, அவையும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.