சேலம்: குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பட்டதாரி பெண்… 12 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி?!

ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கதுரை- வெண்ணிலா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 5 நாள்களுக்கு முன் சேலம் அரசு மருத்துவமனையில் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் இருந்து குழந்தையின் பாட்டி, குழந்தையை மஞ்சள்காமாலை பரிசோதனைக்காக கீழே எடுத்துச் சென்றுள்ளார். அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், அவருக்கு உதவி செய்வது போன்று குழந்தையை தான் தூக்கி வருவதாகவும், `என்னுடைய உறவினருக்கும் குழந்தை பிறந்துள்ளதால், நானும் இங்கே தான் இருக்கிறேன்’ என குழந்தையின் பாட்டியை நம்ப வைத்துள்ளார். அதனை நம்பி குழந்தையின் பாட்டியும், கையில் வைத்திருந்த குழந்தையை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் வழங்கியுள்ளார்.

பின்னர் அந்த பெண் முன்னே செல்லுங்கள், நான் குழந்தையை தூக்கிக்கொண்டு பொறுமையாக கீழே இறங்கி வருகிறேன் என கூறியுள்ளார். குழந்தைகள் வார்டிலிருந்து வெளியே வரும்வரை குழந்தையின் பாட்டியுடன் வந்த அந்த பெண், திடீரென குழந்தையுடம் மாயமாகியுள்ளார். இதனைக்கண்டு குழந்தையின் பாட்டி பதறி தேடியுள்ளார். பின்னர் குழந்தையின் பெற்றோர்கள், உறவினர்கள் சம்பந்தப்பட்ட பெண்ணை மருத்துவமனை வளாகத்தில் தேடியும் கிடைக்காததால், மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரியிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மாஸ்க் அணிந்த பெண் ஒருவர் குழந்தையை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.

வினோதினி

அதன்மூலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன்குமார் ஆணைக்கிணங்க, துணை ஆணையர் மதிவாணன் உத்தரவின்பேரில், நகர காவல் உதவி ஆணையர் ஹரி சங்கரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தனிப்படையானது சம்பந்தப்பட்ட பெண்னை எப்படி தப்பித்தார் என்கிற கோணத்தில் விசாரணை தொடங்கினர். அதில், அப்பெண் மருத்துவமனைக்கு வெளியில் இருந்த ஆட்டோ ஒன்றில் ஏறிச் சென்ற சிசிடிவி காட்சிகள் கிடைத்து.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபுவிடம் பேசியபோது, “கடத்தலில் சம்பந்தப்பட்ட பெண் வினோதினி, சேலம் காரிப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர். இவர் இன்ஜினியரிங் பட்டதாரி ஆவார். கடந்த ஆண்டு இவருக்கு திருமணமாகியுள்ளது. அதன்முலம் இவர் 2023 நவம்பர் மாதம் கன்சீவ் வாகியுள்ளார். ஆனால் அவருக்கு 2024 மே மாதம் குழந்தை அபார்ஷன் ஆகியுள்ளது. இதனை தனது உறவினர்கள் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இவருக்கு வளைக்காப்பும் நடத்தி முடித்துள்ளனர்.

இதனால் தனக்கு குழந்தை அபார்ஷன் ஆகியிருப்பதை வீட்டில் எப்படி சொல்வது என்று தெரியாமல் இருந்துவந்த வினோதினி சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று குழந்தையை கடத்திவந்து, அது தனது குழந்தை எனக் கூறலாம் என நினைத்துள்ளார். அதன்மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தவர், உறவினர்கள் உள்ளே இருப்பதாக கூறி குழந்தைகள் வார்டில் உள்ளே நுழைந்துள்ளார். அங்கு பிரசவமான பெண்களின் உறவினர்கள் அமரும் இடத்தில் இருந்துக்கொண்டு நோட்டமிட்டுள்ளார். அப்படி, கடத்தப்பட்ட குழந்தையின் பாட்டியிடம் பேசி அறிமுகமாகியுள்ளார்.

பிரவீன் குமார் அபினபு

அப்படி பேசி அறிமுகமாகையில் குழந்தைக்கு மஞ்சள்காமாலை இருப்பதும், அதற்காக குழந்தையை கீழே டெஸ்ட்க்கு தூக்கிச் செல்லவேண்டும் என்பதையும் தெரிந்துக்கொண்டுள்ளார். அதன்மூலம் குழந்தையின் பாட்டிக்கு உதவி செய்வதுபோன்று சென்று குழந்தையை கடத்தி சென்றுள்ளார். வீட்டிற்கு கொண்டுச் சென்று அவருடய அம்மாவிடம் தன்னுடைய குழந்தை என்றுக் கூறியுள்ளார். குழந்தை பாலுக்காக கத்தியதால், தன்னால் பால் கொடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். அதன்மூலம் குழந்தையை தூக்கிக்கொண்டு காரிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பார்த்த செவிலியர்கள் இது இப்போது பிறந்த குழந்தை இல்லை என்று கண்டுப்பிடித்துள்ளனர். மேலும் வினோதினியிடம் குழந்தை பிறந்ததற்கான அறிகுறி இருக்கிறதா என்றும் பரிசோதித்துள்ளனர். அப்படி எதுவும் இல்லாததால் ஏற்கனவே குழந்தை காணவில்லை என்கிற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக குழந்தை குறித்த தகவலை காவல் நிலையத்திற்கு செவிலியர்கள் வழங்கியுள்ளனர்” என்றார்.

மேலும் குழந்தையை மீட்க காவல்துறை செயல்பட்ட விதம் குறித்து மாநகர காவல் துணை ஆணையர் மதிவாணனிடம் பேசியபோது, “குழந்தை காணவில்லை என்று தகவல் வெளியானவுடன், உடனடியாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதில், ஒரு டீம் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துக்கொண்டே சென்றுக்கொண்டிருந்தது. மற்றொரு டீம் ஆட்டோ எண்ணை வைத்து ஃபோலோ செய்து சென்றனர். ஆங்காங்கே வாகன சோதனை, பேருந்து நிலையங்களில் சோதனை என செய்ய தொடங்கினோம். மேலும் காவல் துறை அல்லாத மற்ற துறைகளான மருத்துவத்துறை அதிகாரிகளிடம் பேசி ஆரம்ப சுகாதார நிலையம் என எல்லோரையும் அலார்ட் செய்தோம்.

மதிவாணன்

பின்னர் சமூக வலைத்தளங்களில் குழந்தையை கடத்திய பெண்ணின் அடையாளங்களை பரப்பி அவற்றின் மூலம் தகவல் தெரியப்படுத்தக்கூறி தெரிவித்திருந்தோம். அதன்மூலம் சம்பந்தப்பட்ட பெண் காரிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சென்றபோது பிடிப்பட்டார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88