இந்தியாவில் ஷேக் ஹசீனா… அடுத்தகட்ட திட்டம் என்ன?!

வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவுக்கு வந்திருக்கிறார் ஷேக் ஹசீனா. தற்போது, தலைநகர் டெல்லியில் ரகசியமான ஓர் இடத்தில் பலத்த பாதுகாப்புடன் அவர் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்.

ஷேக் ஹசீனா

இந்தியாவில் ஷேக் ஹசீனாவுக்கு நிரந்தரமாக தஞ்சம் அளிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

அப்போது, ‘ஷேக் ஹசீனா அதிர்ச்சியில் இருக்கிறார். அவர் இயல்பு நிலைக்கு வந்த பிறகு, அவரது எதிர்காலத் திட்டங்கள் உள்பட எல்லா பிரச்னைகள் குறித்தும் அவரிடம் பேசலாம்’ என்று ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.

ஷேக் ஹசீனா

மேலும், ‘இந்திய வெளியுறவுத் துறை, வங்கதேச ராணுவத்துடன் தொடர்பில் இருக்கிறது. வங்கதேசத்தில் படிக்கும் 10,000 இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்று வங்கதேச ராணுவத்தை இந்தியா வலியுறுத்தியிருக்கிறது. வங்கதேசத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. மத்திய அரசு வங்கதேச நிலைமைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது’ என்றும் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.

லண்டனில் தஞ்சமடைய ஷேக் ஹசீனா திட்டமிட்டிருந்த நிலையில், அதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. லண்டனில் அவர் தஞ்சமடையவோ, தற்காலிகமாக அங்கு தங்குவதற்கோ அந்த நாட்டின் குடியேற்ற விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என்று பிரிட்டன் அரசு கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ஷேக் ஹசீனா வேறு நாட்டில் அடைக்கலம் தேடுவது தொடர்பாக இறுதி முடிவை எடுக்கும் வரையில், அவர் இந்தியாவில் தங்கியிருக்கலாம் என்று மத்திய அரசு அவரிடம் தெரிவித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

லண்டன் செல்வதற்கு வாய்ப்பு இல்லை என்பதால், வேறு நாட்டில் தஞ்சம் கோருவது குறித்து ஷேக் ஹசீனா ஆலோசித்துவருகிறார். ஃபின்லாந்தில் அவரது உறவினர்கள் இருப்பதால், அங்கு செல்வது குறித்தும் அவர் யோசித்துவருகிறார். ஐக்கிய அரசு அமீரகம், பெலாரஸ், கத்தார், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு செல்வது பற்றியும் அவர் பரிசீலித்துவருகிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அவர் தஞ்சம் கோருவதாக எந்த செய்தியும் இல்லை. போராட்டம் தீவிரமடைந்து வன்முறை அதிகரித்ததால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அண்டை நாடான இந்தியாவுக்கு ஹெலிகாப்டரில் தப்பிவந்திருக்கிறார். இந்தியாவில் அவர் தங்கியிருப்பது தற்காலிகம்தான். ஷேக் ஹசீனாவின் மகள் டெல்லியில் வசிக்கிறார் என்றாலும், ஐரோப்பா, அமீரம் போன்ற தொலைதூர தேசத்தில் தஞ்சமடையவே அவர் விரும்புகிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

வங்கதேசம்

இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், இந்தியாவின் பாதுகாப்பு, நலன் சார்ந்த இந்த விவகாரத்தில் அரசுக்கு முழுமையாக ஆதரவு அளிப்பதாக ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் தஞ்சமடைவது குறித்து ஷேக் ஹசீனா தீவிரமாக பரிசீலித்துவருவதாக செய்திகள் தெரிவித்தாலும், ‘இந்தியாவிலிருந்து அவர் உடனடியாக வெளியேறுவதற்கான திட்டம் இல்லை’ என்று அவருடைய மகன் சஜீப் வஜாத் ஜாய் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88