விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ராமுதேவன்பட்டியில், மறைந்த அ.தி.மு.க. முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் நினைவு இடத்தில் மரியாதை செலுத்துவதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடும்பத்தினருடன் விருதுநகர் மாவட்டம் வந்திருந்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், “பா.ஜ.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் முருகன் இருப்பது இப்போதுதான் கண்ணுக்கு தெரிகிறதா?. மாநிலத்திற்கு, மாநிலம் அங்குள்ள கடவுளை பா.ஜ.க. பார்க்கிறது.
முருகனுக்கு திருமுருக பெருவிழா எடுத்து கொண்டாடும்போது என்னை திட்டி விமர்சித்து முரசொலியில் கட்டுரையில் எழுதியது தி.மு.க.தான். ஆனால் தற்போது முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது எனக் திமுக கூறுவது அரசியலுக்காக மட்டுந்தான். தமிழகத்தில் ராமர் ஆட்சி நடைபெறுகிறது என தி.மு.க. கூறியபோது பா.ஜ.க.எதுவும் எதிர்த்து பேசவில்லை. அப்படியே பார்த்தால், ராமர் ஆட்சி இவ்வளவு மோசமாகவா இருக்கும்?. தேர்தல் வரும்போது மட்டும் பா.ஜ.க.வுக்கு ராமர் மீதும், தி.மு.க.வுக்கு முருகன் மீதும் பக்தி வரும். கடவுளும் கட்சிகளுக்கான அரசியலாகதான் உள்ளது. மீனவ பிரச்னையில், தமிழக மீனவர்களுக்கும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களுக்கும் இடையே பிரச்னை உள்ளது என பா.ஜ.க. பிம்பம் கட்டமைக்க முயல்கிறது.
ஆட்சியில் இல்லாத நாங்கள், மீனவ பிரச்னைக்காக கோரிக்கை வைப்பது போராடுவதெல்லாம் இயல்பு. ஆனால் அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க.வும், மற்ற கட்சிகளை போல பேசுவது வேடிக்கையாக உள்ளது. சொந்த நாட்டு மீனவர்களை சுட்டுத்தள்ளும் எதிரி நாட்டவருக்கு ராணுவ பயிற்சி அளிக்கும் நாடாகதான் இந்தியா உள்ளது. மீனவர்கள் பிரச்னையை தற்போது அண்ணாமலை கையிலெடுத்திருப்பது தேர்தலுக்கான நாடகம். இது, திரைப்படத்தில் வரும் வசனக்காட்சிபோல் ‘சேம் பிளட், சேம் திரைக்கதை, சேம் வசனம்’ தான். தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில், பேராசிரியர் நியமன முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன் என தற்போதுவரை ஆளுநர் கேட்கவில்லை.
தமிழகத்தில் சிறந்த கட்டமைப்பு இருக்கிறது என இங்குள்ளவர்கள் மார்தட்டும்போது, உலக நாடுகள் அதை கவனிக்கும்பட்சத்தில் முதலீடுகள் தானாகவே இங்கு வரும். அப்படியிருக்க, முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் நீங்கள் போய் கெஞ்சி கூப்பிட வேண்டிய அவசியம் இல்லையே. இங்கிருந்து சென்று அழைப்புவிடுக்கும் அளவுக்குத்தான் நீங்கள் ஆட்சி நடத்துகிறீர்களா?. ஒருகாலத்தில் ஒரு நாட்டுக்கு அடிமையாக இருந்த இந்தியா தற்போது எல்லா நாடுகளுக்கும் அடிமையாக இருக்க துடிக்கிறது. தற்போது வரும் முதலீடுகள், கார்ப்பரேட் பெருநிறுவன முதலாளிகள் கொண்டு வருபவையா? அல்லது இவர்கள் அங்கு பதுக்கி வைத்திருந்த முதலீடுகளா என தெரியவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்களை விசாரிக்க வேண்டுமென்றால் அனைத்து அமைச்சர்களையுமே விசாரிக்க வேண்டும். மாண்புமிகு உயர் நீதிமன்றம் தமிழகத்தின் இரண்டு அமைச்சர்களின் சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என கூறியதை நான் வரவேற்கிறேன். இல்லம் தேடி மருத்துவம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் சம்பளம் வழங்கவில்லை என போராடி வருகின்றனர்.
ஆனால் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு மைதானம் தயார் செய்ய அத்தனை கோடிகள் செலவழிக்கிறார்கள். ஏற்கெனவே இருக்கும் மைதானத்தை விட்டுவிட்டு, பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் கார் ரேஸ் நடத்த திட்டமிடுகிறார்கள். தமிழகத்தில் சதுரங்க போட்டி நடத்திய போது எவ்வளவு கோடி செலவழித்தார்கள், அதன்மூலம் எவ்வளவு முதலீடுகள் தமிழகத்துக்கு வந்தது என சொல்ல முடியுமா?. நீதிபதி மற்றும் பொறியியல், மருத்துவம் என ஒவ்வொன்றுக்கும் தேர்வு வைப்பதை வரவேற்கிறோம். ஆனால், இந்தியாவில் தரமான மருத்துவ மாணவர்களை தேர்வு செய்து தரவேண்டிய அவசியம் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஏன் வருகிறது.
தன் நாட்டிலேயே மருத்துவ மாணவர்களை தேர்வுசெய்ய முடியாத நீங்கள் எப்படி தேர்தலை முறையாக நடத்தியிருப்பீர்கள். படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்துவது போல இந்தியாவில் தலைமை பதவிக்கு வரும் எம்.பி., எம்.எல்.ஏ.களுக்கும் தேர்வு வைத்து தேர்ந்தெடுக்க வேண்டும்” என கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88