ஆம்ஸ்ட்ராங் கொலை: 22-வது நபராக கைதான வழக்கறிஞர்; கட்சியிலிருந்து நீக்கிய இளைஞர் காங்கிரஸ் – பின்னணி?

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் கொலைசெய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கில், சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகள் மூலமாகக் கொலைசெய்த நபர்கள் 11 பேர் முதற்கட்டமாகக் கைதுசெய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, இந்தக் கொலையில் தொடர்புடைய மற்ற நபர்கள் யார் யார் என்பது குறித்துக் கண்டறிய போலீஸ் தரப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை

அதில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆயுதங்கள், பணம், முன்விரோதம் மூலம் தொடர்பு உள்ளிட்ட விவகாரங்கள் அடிப்படையில் யார் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, இந்தக் கொலை வழக்கில் முதற்கட்டமாக கைதானவர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டபோது அடுத்தடுத்துப் பலரும் சிக்கினர். அந்த வகையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்காகப் பணம் கொடுத்தவர், நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்தவர் என 21 பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

அதேசமயம், இதுவரை கைதான நபர்களில் பொன்னை பாலு, அருள், ராமு ஆகியோருக்கு மூன்று நாள்கள், சிவசக்தி, ஹரிதரன் இருவருக்கும் ஐந்து நாள்கள் என எழும்பூர் நீதிமன்றம் விசாரணைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இன்னொரு பக்கம், ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிவாங்கும்விதமாக ஆம்ஸ்ட்ராங் கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்று தகவல் வெளியானாலும், இதில் வேறு ஏதேனும் பின்னணி இருக்கிறதா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள்

அந்த வரிசையில் பிரபல ரெளடிகள் சம்பவம் செந்தில், `சீசிங்’ ராஜா, நாகேந்திரன் ஆகியோருக்கு இதில் தொடர்பிருக்கிறதா எனத் தனிப்படை போலீஸார் விசாரித்துவந்தனர். இவர்களில் சம்பவம் செந்தில், சீசிங் ராஜா இருவரும் தலைமறைவாக இருந்துவரும் நிலையில் ரெளடி நாகேந்திரன் வழக்கு ஒன்றில் சிறையில் இருக்கிறார். இவ்வாறிருக்க, இந்த வழக்கில் கைதாகியிருக்கும் வழக்கறிஞர் அருள் கொடுத்த தகவலில், சிறையிலிருக்கும் ரெளடி நாகேந்திரனின் மகனும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த வழக்கறிஞருமான அஸ்வத்தாமனின் பெயரும் அடிபட்டிருக்கிறது.

அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோழவரம் அருகே மோரை என்னும் பகுதியில் நிலம் தொடர்பான தகராறில், ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி அஸ்வாத்தம்மன் துப்பாக்கியைக் காண்பித்ததாகவும், இதனால் இரு தரப்புக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரமறிந்து பரோலில் வந்த நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங்கை செல்போனில் அழைத்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலத்தகராறு காரணமாக ஆம்ஸ்ட்ராங்கைக் கொலைசெய்ய, சிறையில் சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் எனவும், அவருடைய மகன் அஸ்வத்தாமனுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.

அஸ்வத்தாமன்

பின்னர், இது தொடர்பாக அஸ்வாத்தமனிடமே நேரடியாக நேற்று போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் வழக்கறிஞர் அஸ்வத்தாமனுக்கு இதில் தொடர்பிருப்பது உறுதியானதையடுத்து தற்போது அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

மேலும், நிலம் தொடர்பான தகராறில் ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டியது உண்மையா… இது தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டதா என அஸ்வத்தாமனிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அதோடு, ரெளடி நாகேந்திரன் சிறையிலிருந்து கொலைக்குத் திட்டம் தீட்டிக் கொடுத்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

காங்கிரஸ்

இவ்வாறு சென்றுகொண்டிருக்க, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அஸ்வத்தாமன் நீக்கப்பட்டிருப்பதாக, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஆறாவது வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88