நெல்லை: வங்கியில் ரூ.50 லட்சம் மோசடி; 22 ஆண்டுகள் தலைமறைவு… சிபிஐ-யிடம் முதியவர் சிக்கியது எப்படி?

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் சந்துலால் பரதாரி ஸ்டேட் வங்கியில் கம்யூட்டர் ஆபரேட்டராகப் பணியாற்றியவர் சலபதிராவ். இவர், எலக்ட்ரானிக் நிறுவனங்களின் பெயரில் போலியான சம்பளப் பட்டியல் தயார் செய்து ரூ.50 லட்சம் வரை மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2002-ம் ஆண்டு மே 3-ம் தேதி ஸ்டேட் வங்கியை ஏமாற்றிய குற்றச்சாட்டின்பேரில், சலபதிராவ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

கைது செய்யப்பட்ட சலபதிராவ்

இதில், சலபதிராவ் தனது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்களின் பெயரில் போலியாக சம்பளப் பட்டியல் தயாரித்து பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டு, கடந்த 2004 டிசம்பரில் இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்தது. இந்த நிலையில், சலபதிராவின் மனைவி கடந்த 2004 ஜூலை மாதம் முதல் தனது கணவரைக் காணவில்லை என, காமபுத்திரா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து  தனது கணவர் காணாமல் போன நிலையில், அவரை இறந்துவிட்டதாக அறிவிக்கக் கோரி கோரிக்கை வைத்திருந்தார். கடந்த 2013 ஏப்ரலில் சலபதிராவை குற்றவாளியாக சிபிஐ அறிவித்து தீவிரமாகத் தேடி வந்தது.

மேலும் அவரது சொத்துகளை முடக்க முயற்சி செய்தபோது, நீதிமன்றத்தில் சலபதிராவின் மனைவி தடையாணை பெற்று தடுத்தார். சலபதிராவை கண்டுபிடிக்க சிபிஐ பல்வேறு தகவல்களைத் திரட்டி வந்த நிலையில், நெல்லை மாவட்டம், பேட்டை அருகேயுள்ள நரசிங்கநல்லூர் பகுதியில் ஷேக் மன்சூர் என்ற நண்பரின் வீட்டில் தனது அடையாளங்கள், பெயரை மாற்றி அவர் இருப்பதை கண்டறிந்து அவரை கைது செய்தது சிபிஐ.  அவர் சிக்கியது குறித்து சிபிஐ தரப்பில் விசாரித்தோம், “ஐதராபாத்தில் இருந்து தப்பிய சலபதிராவ், சேலம் பகுதியில் தனது பெயரை வினித்குமார் என மாற்றிக் கொண்டு தங்கியுள்ளார்.

CBI

அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டு புதிதாக ஆதார் அட்டை பெற்றுள்ளார். இருப்பினும் அவரது முதல் மனைவிக்கு பிறந்த மகனுடன் செல்போன் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவறிந்து சேலம் சென்றபோது 2014-ல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர், மத்தியப் பிரதேச மாநிலம், போபாலுக்குச் சென்று அங்கு ஒரு நிறுவனத்தில் கடன் மீட்பு முகவராக பணிபுரிந்து வந்துள்ளார். அங்கிருந்து அவர் உத்ரகாண்ட் மாநிலம், ருத்ராபூருக்குச் சென்று அங்குள்ள ஒரு பள்ளியில் உதவியாளராக பணியாற்றுவதாக கிடைத்த தகவலின்படி அங்கு சென்றபோது 2016-ல் அவர் அங்கிருந்து தப்பிவிட்டதாக தகவல் கிடைத்தது.

அங்கு அவர் பயன்படுத்திய வீட்டின் முகவரி, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வைத்து தீவிர தேடலில் ஈடுபட்டபோது மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் விதித்மானந்த தீர்த்தர் என்ற பெயருடன் தங்கியிருந்துள்ளார். அங்கு அவருக்கு பக்தர்கள் கூட்டம் கூடிய நிலையில், ஆசிரமத்திலேயே ரூ.70 லட்சம் வரை முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் அங்கிருந்து கடந்த 2021-ல் வெளியேறி ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் ஆசிரமத்திற்கும், பின்னர் அங்கிருந்து ஜூலை 8-ம் தேதி நெல்லை மாவட்டம், பேட்டை, நரசிங்கநல்லூர் பகுதியில் வசிக்கும் நண்பரின் வீட்டில் தங்கியிருந்ததும், அங்கிருந்து இலங்கைக்கு தப்ப முயன்றதும் தெரிய வந்தது.

CBI

ராஜஸ்தான் ஆசிரமத்தில் சலபதிராவ் பணிபுரிந்தபோது ஷேக்மன்சூரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதை பயன்படுத்தியே தற்போது அங்கு தங்கியிருந்துள்ளார். இதனையறிந்து இங்கு வந்தோம். தனது முதல் மனைவியின் மகனுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததை கண்காணித்ததில் அவரது செல்போன் உரையாடல், சிக்னலால் பேட்டையில் இருப்பதை உறுதி செய்து கைது செய்துள்ளோம். ஒவ்வொரு முறையும் அவர் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்ததும் செல்போன் உரையாடல்தான்” என்றனர்.