`கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக திரண்ட சிவகங்கை கதர்கள்..!’ – திகுதிகு சத்தியமூர்த்தி பவன்

சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தையும் சர்ச்சையும் பிரிக்க முடியாததாகிவிட்டது. அவரின் கருத்துக்கள் கதர்களை மட்டும் அல்லாது உடன்பிறப்புகளையும் உஷ்ணமாக்கி வருகிறது. மோடியின் பிம்பத்தை உடைப்பது கடினம், மோடிக்கு நிகரான தலைவர் வேறு யாருமில்லை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் நம்பிக்கை இருக்கிறது, நீட் தேர்வு நடத்துவதில் தவறு இல்லை எனத் தலைமையின் கருத்துக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைச் சொல்லி வருகிறார், கார்த்தி. இதனால் சத்தியமூர்த்தி பவனில் கருத்து மோதல் நிகழ்வது சாதரணமாகிவிட்டது. இந்த சூழலில்தான் தேர்தல் குறுக்கிடவே சற்று அமைதியாக இருந்தார். தற்போது மீண்டும் தனது ஆட்டத்தை ஆட ஆரம்பித்திருக்கிறார் என்கிறார்கள் உள்விவரம் அறிந்த சிலர்.

சிதம்பரம்

தி.மு.க-வுடன் கூட்டணியிலிருந்து கொண்டே, “என்கவுன்ட்டர் என்பது ஏற்க முடியாத ஒன்று. உண்மைகளை மறைக்க என்கவுன்ட்டர் நடந்ததாகப் பலரும் சந்தேகப்படுகின்றனர்” என அதிரடியாகப் பேட்டி கொடுத்தார். பிறகு கட்சி கூட்டத்தில் மைக் பிடித்தவர், “கூட்டணி தர்மம் என்று கூனிக் குறுகி இருக்கக் கூடாது. 2026-ம் ஆண்டு அமையும் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும்” எனச் சொல்லி சர்ச்சை பட்டாசை கொளுத்திப் போட்டார். இது மீண்டும் கதர்களையும், உடன் பிறப்புகளையும் கடுப்பாகியிருக்கிறது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சிவகங்கை காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர்.

அவர்கள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் அளித்த மனுவில், “கடந்த 20-ம் தேதி முக்கிய நிர்வாகிகளை அழைக்காமல் கார்த்தி சிதம்பரம் செயற்குழு கூட்டத்தை நடத்தியிருக்கிறார். மேலும் அதில் கூட்டணிக் கட்சியான தி.மு.க-வை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். கட்சி வளர்ச்சி குறித்துப் பேசலாம். ஆனால் கூட்டணிக் கட்சியை விமர்சனம் செய்வது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் மட்டும் எம்.பி பதவியில் இருந்தால் போதும் என இவ்வாறு பேசியிருக்கிறார். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைப்பதில் சிக்கல் ஏற்படும். கார்த்தியின் செயல்பாட்டால் சிவகங்கையில் காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. எனவே அகில இந்தியப் பொறுப்பாளரை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு பாரபட்சம் இல்லாத தலைவர்களைப் பொறுப்புக்களில் நியமிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்

இதையடுத்து சிவகங்கை காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், “வரும் 2026-ம் ஆண்டு அமையும் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும் என கார்த்தி பேசியிருக்கிறார். ஆனால் கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடம் பெரும் வாய்ப்பு கிடைத்தது. அன்று சிவகங்கையில் மட்டுமே சுந்தரம், ராமசாமி என இரண்டு எம்.எல்.ஏ-க்கள் இருந்தார்கள். அன்று அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தால் அவர்கள் இருவரும் அமைச்சராகியிருப்பார்கள். ஆனால் அன்று நிபந்தனையற்ற ஆதரவு என அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி அறிவிக்கக் காரணம் பா.சிதம்பரம்தான். அன்று வாய்ப்பு வந்தபோது ஏன் அப்படி முடிவு எடுத்தார்கள்.

அதற்குச் சிதம்பரம், கார்த்தி இருவருக்கும் அவர்களைத் தவிரப் பிறர் அதிகாரத்தில் இருக்க விரும்ப மாட்டார்கள். இன்று திமுக வேண்டாம் எனச் சொல்கிறார்கள். ஆனால் தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு ஒன்றியத்துக்குச் சென்று திமுக செயலாளர்களிடம் மகனை வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனச் சிதம்பரம் கோரிக்கை வைத்தார். திமுக வேண்டாம் என்கிற முடிவை அன்று எடுத்திருக்க வேண்டியதுதானே. கார்த்தியின் இந்த பேச்சால் அடிமட்ட காங்கிரஸ் தொண்டர்களுக்கு தி.மு.க ஒத்துழைப்பு கொடுக்காது. இதனால் அவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் நின்று வெற்றிபெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு கட்சிக்கு விரோதமாகச் செயல்படும் கார்த்தி மீது அகில இந்தியத் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88