“கல்யாணம் பண்ணுங்க, குழந்தை பெறுங்க..” கட்டாயப்படுத்தும் சீன அரசு… ஏன் தெரியுமா?

ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் சீனாவை முந்த முடியாமல் உலக நாடுகள் போராடிக் கொண்டுள்ளன. இன்னொரு புறம் தங்கள் சொந்த நாட்டு மக்களின் மனநிலையைச் சமாளிக்க முடியாமல் சீன அரசு உள்ளுக்குள் போராடிக் கொண்டிருக்கிறது.

பிரச்னை இதுதான்…

சீனர்களுக்கு இப்போது திருமணத்தில் நாட்டமில்லை. அப்படியே திருமணமானாலும் குழந்தை பெற்றுக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. இந்தப் புதிய கலாசாரப் பரவலால் சீனாவில் திருமண விகிதம் வீழ்ச்சியடைந்துகொண்டே உள்ளது. குழந்தைப் பிறப்பு அதைக் காட்டிலும் அதல பாதாளத்தில் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த திருமணத்தின் அவசியம் குறித்த பட்டப்படிப்பை கல்லூரிகளில் தொடங்குவதாக அரசு அறிவித்துள்ளது.

சீனா

சீனாவில் உள்ள Civil affairs university மிகவும் பிரபலமானது. தலைநகரான பீஜிங்கில் அமைந்திருக்கும் பல்கலைக்கழகம் என்பதால் இன்னும் கூடுதல் கவனத்துக்குரிய கல்விநிலையமாகவும் உள்ளது. இங்குதான் திருமணம் தொடர்பான இளநிலை (Undergraduate) படிப்பு அறிமுகமாகவுள்ளது. திருமணம் தொடர்பான கலாசாரம் நாட்டுக்கு எவ்வளவு முக்கியமானது என்பது இதில் பாடத்திட்டமாக இருக்கும். வரும் செப்டம்பரில் இதற்கான வகுப்புகள் தொடங்கவுள்ளன. இந்தப் பட்டப்படிப்பின் மூலம் திருமண விகிதம், குழந்தைப் பிறப்பு விகிதம் இரண்டையும் அதிகரிக்க முடியும் என்ற முயற்சியில் அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.

உலகளவில் மக்கள் தொகையில் முதல் இடம் என்ற பெயரைப் பெற்றிருந்தது சீனா. (கடந்த 2022-ம் ஆண்டு இந்தியா சீனாவை முந்தியது). இதனால் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் வகையில் One-child policy என்கிற ஒரே ஒரு குழந்தை திட்டத்தை 1980-ம் ஆண்டு அரசு கொண்டு வந்தது. அதன் விளைவுகள் விபரீதமாகி குழந்தை பிறப்பு வேகமாகக் குறைந்ததால், விழித்துக் கொண்ட அரசாங்கம் 2016-ம் ஆண்டு அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றது. தம்பதியர் 2 குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், மக்கள் தொகை உயர்ந்தபாடில்லை என்பதால் 2021-ம் ஆண்டு, வீட்டுக்கு 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டது. ஆனாலும், அரசு மகிழ்ச்சியடையுமளவு எதுவும் நடக்கவில்லை.

சீனாவில் திருமணம்

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு திருமண விகிதம் 2022-ம் ஆண்டு இன்னும் அதிகமாக வீழ்ச்சியடைந்தது. 2016-ம் ஆண்டில் இருந்த குழந்தைப் பிறப்பு விகிதம், கடந்த 2023-ம் ஆண்டில் பாதியாகவும் குறைந்துள்ளது. ஏற்கெனவே கொரோனாவால் நிறைய மனித வள இழப்பினைச் சந்தித்திருக்கும் சீனாவுக்கு, இது இன்னும் கூடுதல் இழப்பாகியுள்ளது. இதனால்தான் ‘திருமணம், குழந்தைப்பேறு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உண்டாக்க வேண்டியது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்‘ என்று கடந்த ஆண்டு அதிபர் ஜின்பிங் கூறியிருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், குழந்தை பெற்றுக் கொள்கிறவர்களுக்காக பல்வேறு சலுகைகளையும் ஜின் பிங் அரசு அறிவித்தது.

‘பெற்றோருக்கான விடுமுறை திட்டம், தனியார் நிறுவன ஊழியர்களின் குழந்தை வளர்ப்பு தொடர்பாக அந்நிறுவனங்களுக்கு சில உதவிகளைச் செய்வது, மகப்பேறு கால விடுமுறையை பெண்களுக்கு அதிகரிப்பது, வரி விலக்கு சலுகைகள், குடும்பங்களுக்கு மானியம் வழங்குவது என பலவித நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

இந்த முயற்சியின் ஒருகட்டமாகவே திருமணம் தொடர்பான பாடத்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் நேர்மறையான திருமணங்கள் (LGBTQவினருக்கு சலுகைகள் கிடையாது), குடும்ப கலாசாரத்தை மாணவர்களிடம் இந்தப் பட்டப்படிப்பு கற்றுக் கொடுக்கும். மாணவர்களின் வழியே பொதுமக்களுக்கு இந்தக் கருத்துகள் பிரசாரமாகக் கொண்டு செல்லப்படும். குடும்ப நல ஆலோசனை, உயர்தரமான திட்டமிடல், திருமணம் தொடர்பான பொருள்கள் மற்றும் சந்தையை விரிவுபடுத்துதல் இதில் முக்கிய திட்டங்களாக உள்ளன. அரசின் இந்த நடவடிக்கைகள் கேலிப்பேச்சுக்கும் ஆளாகியுள்ளன. ‘திருமணம் தொடர்பாக பட்டப்படிப்பு படிக்கிறவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன வேலை வாய்ப்பு கிடைக்கும்‘ என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் சிலரோ, ‘அரசே கல்யாண தரகர் வேலையைப் பார்க்கப் போகிறதா‘ என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, கொஞ்சம் நுட்பமாக கவனித்தால் இது சீனாவின் பிரச்னை மட்டுமே அல்ல என்பது புரியும். சர்வதேச அளவிலேயே திருமண விகிதங்கள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. திருமண வாழ்க்கை என்றாலே அலர்ஜியும், குழந்தைப்பிறப்பு என்றாலே பயமும் இன்றைய இளம் தலைமுறையினரிடம் உருவாகி வருகிறது.

சீனா

வேலை வாய்ப்பின்மை, உத்தரவாதமற்ற பணிச்சூழல், வாழ்க்கை நடத்துவதற்கான செலவுகள் அதிகரிப்பது, கூட்டுக்குடும்பங்கள் ஒழிந்ததால் குழந்தை வளர்ப்பில் இருக்கும் சிரமம், கலவரப்படுத்தும் கல்விக்கட்டணங்கள், சுகாதார செலவுகள் என பல விஷயங்கள் இதைத் தீர்மானிக்கின்றன. முன்பைக் காட்டிலும் அதிகரிக்கும் விவாகரத்துகளும், பார்ட்னர் மீதான அதீத எதிர்பார்ப்புகளும் திருமணம் மீதான நம்பிக்கையை இளைஞர்களிடத்தில் சீர்குலைக்கின்றன. LGBTQ போன்ற நவீன கால கலாசாரங்களும் இதில் பெரிய தாக்கத்தை உண்டாக்குகின்றன.

உதாரணத்துக்கு, 1970 -களோடு ஒப்பிடும்போது அமெரிக்காவில் தற்போது 60 சதவிகிதமளவு திருமணவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்கிறார்கள். மில்லினியல் இளைஞர்களின் திருமண வெறுப்பு மனோபாவத்தை New Normal என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் சீனாவைப் போல எல்லா நாடுகளிலும் இது போன்ற ‘வாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்‘ என்கிற பட்டப்படிப்பு ஆரம்பித்தாலும் ஆச்சர்யமில்லை!