கூடங்குளம்: `புது எரிபொருள்; கூடுதலாக 2 அணு உலைகளில் மின் உற்பத்தி..!’ – ரஷ்ய நிறுவனம் இலக்கு

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இந்தியா – ரஷ்யா நாடுகளின் கூட்டு முயற்சியுடன் தலா 1,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.  இதில், கடந்த 22.10.2013-ம் நாளில் முதலாவது அணு உலையிலும், இரண்டாவது அணு உலையில் கடந்த 29.08.2016-ம் நாளிலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்த இரண்டு அணு உலைகளின் மூலம் இதுவரை 10,000 கோடிக்கு யூனிட்டுகளுக்கு மேல் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலை

இந்த 1வது மற்றும் 2வது அணு உலைகளில் ’செறியூட்டப்பட்ட யுரேனியம்’ எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு அணு உலையைப் பொறுத்தவரை 163 எரிகோல்கள் பொருத்தப்படும். இதில், மூன்றில் ஒரு பங்கு எரிகோல்கள், ஆண்டுக்கு ஒருமுறை மாற்றப்படும். இதற்காக மின் உற்பத்தி 2 மாதங்களுக்கு மேல் நிறுத்தப்படும். அப்போது பராமரிப்புப்  பணிகளும் மேற்கொள்ளப்படும்.  இதனால், எரிபொருள் மாற்றப்படும் காலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், இந்தியா – ரஷ்யா நாடுகள் ஏற்கேனவே  செய்து  கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின்படி ரஷ்ய நிறுவனமான ’ரோஸாடாம்’ , கூடங்குளத்திற்கு சப்ளை செய்து வருகிறது. இதற்கு மாற்றாக, புதிய எரிபொருளை உற்பத்தி  செய்யும் பணியை அந்நிறுவனத்தின் ஓர் அங்கமான ‘டி.வி.எல்’ நிறுவனம் தொடங்கியுள்ளது. இது குறித்து ரஷ்ய நிறுன விஞ்ஞானிகளிடம் பேசினோம்.  ”இந்த புதிய எரிபொருள், கூடங்குளத்தில் தற்போது அமைக்கப்பட்டு வரும் தலா 1,000 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட 3வது மற்றும் 4வது அலை உலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

கூடங்குளம் அணு உலை

3வது அணு உலையைப் பொறுத்தவரை  உட்புற அணுஉலை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. நீராவி என்ஜின்கள், அணு உலை குளிர்விப்பான்கள் அமைக்கும்  பணிகள்  நடந்து முடிந்துள்ளது. அணு உலைகளின் அழுத்தக் கலன்கள் அமைக்கும் பணிகள் மட்டும் நிறைவு பெற்றுள்ளன. 4வது அணு உலையைப் பொறுத்த வரையில், உட்புற அணு உலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.  இந்த 3வது மற்றும் 4வது அணு உலைகளுக்கு ரஷ்யாவின் ‘ரோஸாமிடாமின்- டி.வி.இ.எல்’ நிறுவனம் தயாரிக்கும் ‘டி.வி.எஸ்-2எம்’ என்ற புதிய எரிபொருள் சப்ளை செய்யப்பட உள்ளது.

இந்த புதிய எரிபொருள் மூலம் 8 மாதங்களுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு  எரிகோல்களை மாற்றினல் போதுமானது. இதன் மூலம் கூடங்குளம் அணுமின் நிலைய மின் உற்பத்தியில் எந்த தடங்களும் ஏற்படாது. அத்துடன் கூடுதல் காலம் மின்  உற்பத்தி செய்ய முடியும் என நம்புகிறோம். இந்தப் புதிய வகை எரிபொருள் மூலம் எரிபொருள் வாங்கும் செலவு கணிசமாகக் குறைவதுடன் மின் உற்பத்திக்கும் தடை இருக்காது.

கூடங்குளம்

மூன்று ஆண்டுகளுக்கு மூன்று முறை எரிபொருள் மாற்றம் என நடந்து வந்த நிலையில், இனி மூன்று ஆண்டுகளுக்கு இரண்டு முறை என குறையும்  நிலையில், அப்போது ஒரு முறை எரிபொருள் மிச்சப்படும். ‘ரோஸாமிடாமின்’ நிறுவனம், 15 நாடுகளில் 7- அணு உலைகளுக்கு எரிபொருள் சப்ளை செய்கிறது. அதுமட்டுமல்லாமல், 9 உலக நாடுகளுக்கு  ஆராய்ச்சிக்கான  உலைகளிலும், இந்நிறுவனத்தின் எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.” என்றனர்.