நள்ளிரவில் கீதாரியைத் தாக்கிவிட்டு 150 ஆடுகள் திருட்டு; மர்ம கும்பல் துணிகரம்… போலீஸ் விசாரணை!

ராமநாதபுரம் மாவட்டம், வந்தியேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சேகர், வயது 57. இவரது மனைவி மல்லிகா வயது 50. கீதாரியான சேகர், சுமார் இருபது வருடங்களாக தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதிகளில் ஆடு கிடை போடும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்குச் சொந்தமாக 150 செம்மறி ஆடுகள் இருந்துள்ளன. ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தில் மனைவியுடன் தங்கியிருந்தபடி அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் விளைநிலங்களில் செம்மறி ஆடுகளை கிடை போட்டுள்ளார். இரவு நேரத்தில் மேய்ச்சலுக்கு விடும் அந்த வயலிலேயே பட்டி அமைத்து ஆடுகளை அடைத்துவிட்டு சேகர் தூங்கி விடுவது வழக்கம்.

ஆடுகள் (ஃபைல் படம்)

இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி பின்னையூரில் விவசாயி ஒருவரின் வயலில் பகல் நேரத்தில் கிடை போட்ட சேகர், இரவு பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு அங்கேயே படுத்து உறங்கியுள்ளார். அவருடைய வளர்ப்பு நாய் ஒன்றும் அவருடன் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு மர்ம கும்பல் ஒன்று பட்டிக்கு வந்துள்ளது. அப்போது நாய் சத்தமாக குரைத்திருக்கிறது. அதை கேட்டு விழித்த சேகர், மர்ம கும்பலிடம் `யார் நீங்கள், இங்கு எதற்கு வந்தீர்கள்?’ எனக் கேட்டுள்ளார்.

அப்போது சேகரையும், குரைத்துக்கொண்டிருந்த நாயையும் தாக்கியுள்ளனர். இதில் சேகருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவருக்கு, என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மயக்க நிலைக்கு சென்று விட்டார். இதையடுத்து மர்ம கும்பல் பட்டியில் அடைக்கபட்டிருந்த 150 ஆடுகளை லோடு வேனில் ஏற்றி திருடிச் சென்றது. மறு நாள் விடிந்த பிறகு மற்றொரு இடத்திலிருந்த சேகரின் மனைவி மல்லிகா, சேகருக்கு போன் செய்துள்ளார். பல முறை போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் பதறியபடி பட்டிக்கு ஓடிச் சென்று பார்த்துள்ளார். அங்கே ரத்த வெள்ளத்தில் கணவர் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் 150 ஆடுகளை திருடிச் சென்றனர். அதன் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் என சொல்லப்படுகிறது. இது குறித்து ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தமாக ஆடுகள் திருடப்பட்ட சம்பவம், விவசாயிகள் மற்றும் ஆடு, மாடு வளர்ப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய சிலர், “ஒரத்தநாடு பகுதிகளில் ஆடு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் மொத்தமாக 150 ஆடுகளை திருடிச் சென்றது இதுதான் முதன்முறை. மர்ம கும்பலைச் சேந்தவர்கள் சேகர் ஆடு கிடை போடுவதை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் வந்து தாக்குதல் நடத்தி விட்டு ஆடுகளை வேனில் ஏற்றிச் சென்றுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தின் மூன்று பகுதிகளில் காவல் நிலையங்கள் உள்ளன. ஆனால் போலீஸார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுவதில்லை. இது ஆடு திருடியவர்களுக்குச் சாதகமாக அமைந்ததால், யாரிடமும் சிக்காமல் 150 ஆடுகளையும் திருடிச் சென்றுள்ளனர். மர்ம கும்பலை பிடிக்க எஸ்.பி, சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டுள்ளது. ஆனால் இதுவரை விசாரணையில் ஆடு திருடிய கும்பல் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை” என்றனர்.