`சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஸ்டாலினுக்குப் பயம்!’ – சொல்கிறார் அன்புமணி ராமதாஸ்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காவேரி ஆற்றில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வினாடிக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களுக்கு ஓராண்டுக்கு குடிநீராக 15 டி.எ.ம்சி தண்ணீர் தேவைப்படுகிறது.  நீர் மேலாண்மைக்கு, விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காத தற்போதைய தி.மு.க அரசு, வெறும் வார்த்தை ஜாலத்தில் ஆட்சியை நடத்தி வருகிறது.

அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் சுமார் 5 கோடி மக்கள் காவிரி ஆற்றை நம்பியே உள்ளனர்.  இதைப் புரிந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் வரும் காலத்தில் காவேரியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்கூட கஞ்சா போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்தி தங்களின் கல்வியையும் வாழ்கையையும் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?  

காவல்துறைக்குத் தெரியாமல் எந்த ஒரு போதைப்பொருளும் விற்பனை செய்ய முடியாது. காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று சொல்லிக் கொண்டு மக்களை குடிகாரனாக மாற்றி இருப்பது மட்டுமே திராவிட மாடலின் சாதனை. போதைப்பொருள் விற்பனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தயங்குகிறாரா? அல்லது அவரால் முடியவில்லையா? தமிழ்நாட்டில் 69 இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்துள்ளது. தமிழ்நாட்டில் 69 இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முதல்வர் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். 

அன்புமணி ராமதாஸ்

உச்ச நீதிமன்றம் இரண்டு முறை சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்திட  ’தரவுகளைச் சேகரியுங்கள்’ என்று கூறியும் வேண்டுமென்றே கணக்கெடுப்பு நடத்தவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால், சாதி வாரியாக சீட் கேட்பார்கள் என்று கணக்கெடுக்க பயப்படுகிறார். உண்மையிலேயே சமூகநீதி மீது அக்கறை இருந்தால் சாதிவாரி கணக்கெடுப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திட எங்களுக்கு அதிகாரம் இல்லை என சட்டமன்றத்தில்  அவர் பொய் பேசுகிறார்.

இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?  அருந்ததியர்களுக்கு பரிந்துரை செய்த ஜனார்த்தனன் குழு, வன்னியர்களுக்கும் பரிந்துரை செய்துள்ளது. மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதே போல தமிழக அரசு தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், அடுத்த 18 மாதங்களில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது. அப்போது நாங்கள் யார் என காண்பிக்கக்கூடிய காலம் வரும். 

அன்புமணி ராமதாஸ்

தமிழக மின்சாரத்துறையில் ஊழல், லஞ்சம், நிர்வாகச் சீர்கேடு மலிந்துவிட்டது. கடந்த 23 மாதங்களில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்திய அரசுதான் இந்த திராவிட மாடல் அரசு. இதுவரை 33.7 சதவிகிதம், அதாவது மூன்றில் ஒரு பங்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஒரு யூனிட் மின் உற்பத்தி செய்ய 3.40 ரூபாய்தான். ஆனால், தனியாரிடம்  ஒரு யூனிட் மின்சாரத்தை 12 முதல் 15 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். இதுதான் திராவிட மாடலா?” என்றார்.