ஈரோடு மாவட்டம் சாத்தம்பூர் ஸ்ரீ வல்லாள ஈஸ்வரர் திருக்கோயிலில் இயற்கையைப் பூஜிக்கும் இரண்டாம் ஆண்டு காவேரி ஆரத்தி விழா இன்று ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தச் சிறப்பு வழிபாட்டை ஒருங்கிணைக்கும் தமிழ்நாடு காவேரி ஆரத்தி விழாக் குழுவினர் நம்மிடம் பேசினர்.
“குரோதி வருடம் ஆடி மாதம் 19-ம் நாள் அதாவது இன்று ஆகஸ்ட் 4-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் ஸ்ரீ அகத்தியரின் ஜன்ம நட்சத்திரத்தை முன்னிட்டு, ‘நீர் நிலைகள், மண் வளம், நீர் மாசு இல்லாமல் காப்போம் மற்றும் நதி நீரைச் சேமிப்போம்’ என்னும் கொள்கைகளை மையமாக வைத்து ஈரோட்டிலிருந்து கரூர் செல்லும் சாலையில் ஆர்.டி.கல்லூரி பின்புறம் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே அமைந்திருக்கும் ஸ்ரீ வல்லாள ஈஸ்வரர் திருக்கோயிலில் ஆராதனை நடைபெற உள்ளது.
அதைத் தொடர்ந்து கோமாதா பூஜை, அசவு (குதிரை) பூஜை, ஸ்ரீ காவேரி அன்னைக்கு ஆரத்தி, வேல் வழிபாடு மற்றும் சிறப்புப் பூஜை நடைபெற உள்ளன. மாலை 4.50 மணிக்குக் கோமாதா பூஜை, அஸ்வ பூஜை, தொடர்ந்து மாலை 5.25 மணிக்கு சென்னி மலை கயிலாய வாத்தியக் குழு இசை நிகழ்ச்சி, மாலை 5.50 மணிக்குக் காவேரி ஆரத்தி, மாலை 6 மணிக்குக் காங்கேயம் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களின் சலங்கை ஆட்டம், மாலை 6 மணிக்குப் பக்தர்களுக்கு அன்னதானம் ஆகியன நடைபெறவுள்ளன. வாய்ப்பிருக்கும் அன்பர்கள் நிகழ்வில் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம்” என்று அழைப்பு விடுத்தனர்.