கேரளாவில் பெய்த கனமழையின் காரணமாக வயநாட்டில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் 340-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இன்னும் 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்கிறார்கள். இதற்கு முன்பும் 2019, 2020, 2021-ம் ஆண்டுகளில் பெரு மழையில் சிக்கி கேரளா சின்னாபின்னமானது. அப்போது 200-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். இந்த சூழலில்தான் தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு அங்குக் காடுகள் அளிக்கப்படுவதும் அதில் புதிய கட்டுமானங்கள் கட்டப்படுவதும் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், “கேரளாவில் தேயிலை, காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில்தான் நிலச்சரிவு ஏற்படுகிறது. தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ள வயநாடு பகுதியில் கூட இதே பிரச்னைதான். ஆனால் முந்தைய காலங்களில் ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து கேரளா அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு முந்தைய படிப்பினைகளின் அடிப்படையில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அதைச் செய்திருந்தால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் 40 விழுக்காடு பகுதி கேரளாவில்தான் இருக்கிறது. ஆனால் பல இடங்களில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அது தடுக்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது முறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
குறிப்பாகக் 2013-ம் ஆண்டு ஆய்வாளர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஒரு குழுவை நியமிக்கப்பட்டது. அந்த குழு மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்படும் பேரிடர்களைத் தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என ஆய்வு செய்து அறிக்கையாகச் சமர்ப்பித்தனர். அதில், ‘மேற்குத் தொடர்ச்சி மலையின் 37 விழுக்காடு பகுதியை உணர்திறன் மிக்க சூழலியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும். கிரானைட், அகழ்விடங்கள், சுரங்கங்கள், சிவப்பு வகைப்பாட்டில் வரும் தொழிற்சாலைகளுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்க வேண்டும். புதிதாக அனல் மின் நிலையம் அமைக்க அனுமதிக்கக்கூடாது. 20,000 சதுர மீட்டர் வரையில் மட்டுமே கட்டடங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்’ எனச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இதைக் கேரளா ஏற்றுக்கொள்ளவில்லை. இதையெல்லாம் செய்திருந்தால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது” என்றனர்.
மறுபக்கம் இதே தவற்றைத்தான் தமிழக அரசும் செய்து வருகிறது என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால் தமிழகத்தின் மலை பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, “நீலகிரி உட்பட மாதவ் காட்கில் குழு (WGEEP) அறிக்கையில் சூழல் கூருணர்வு மண்டலங்களாகத் தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட பகுதிகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ள கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள் காலிசெய்யப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும். குறிப்பிட்ட அந்த இடங்களில் புதிதாக எந்தவிதமான கட்டுமானங்கள், குவாரிகள், சுரங்கங்கள் உள்ளிட்டவற்றை அனுமதிக்கக்கூடாது. அயல் படர் தாவரங்களைக் கட்டுப்படுத்தி, அந்த மலைகளுக்கு உரிய இயல் தாவரங்களை மீட்டுருவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டுதோறும் உதகையில் நடைபெறும் மலர்க் கண்காட்சியை மேட்டுப்பாளையம் அல்லது பொள்ளாச்சிக்கு மாற்றவேண்டும். சுமார் 25-30 ஆண்டுகளுக்கு முன்னர், உதகையைச் சுற்றுலாத்தலமாகப் பிரபலப்படுத்த இத்தகைய விழாக்கள் தேவைப்பட்டன. ஆனால் இப்போது குறிப்பிட்ட அந்த ஒரு வாரக் காலத்திற்கு மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் உதகையில் கூடுகிறார்கள், அம்மலைகளுக்கு அது மிகப்பெரிய அழுத்தமாக அமைகிறது. தமிழ்நாட்டில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் நீர்மின் திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்யவோ புதிய நீர்மின் திட்டங்களைத் தொடங்கவோ கூடாது. நீலகிரியில் நிலச்சரிவு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவும், அவற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளிக்கக்கூடிய வகையிலும் ‘மாநில நிலச்சரிவு மேலாண்மை மையம்’ மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்படவேண்டும். அதன் மற்றொரு மையம் வத்தலக்குண்டுவில் அமைக்கப்படவேண்டும்.
இறுதியாகக் கஸ்தூரி ரங்கன் அளித்த பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிய அரசு மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சில பகுதிகளைச் சூழல் கூருணர்வு மிக்க மண்டலமாக அறிவிப்பு செய்வதற்கான வரைவு அறிக்கையை 06.07.2022ல் வெளியிட்டிருந்தது. உடனடியாக இந்த வரைவு அறிவிக்கையைக் கேரளா, கர்நாடகா மாநிலங்களுடன் கலந்தாலோசித்து, இறுதி செய்து அரசிதழில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடங்க வேண்டும். நமக்கு எல்லா வளங்களையும் அளித்து நம்மைப் பாதுகாத்த மண் இப்போது நம்மை காவுவார்கள் ஆரம்பித்திருக்கிறது. இதற்கு இயற்கை காரணமல்ல, நாம் மட்டுமே காரணம். இம்மண்ணின் மீது நாம் நிகழ்த்திய வன்முறைக்கான எதிர்வினையை இப்போது நாம் அனுபவிக்கிறோம். இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தி, நாம் செய்த தவறுகளைச் சரிசெய்வதே இப்போது நம்முன் உள்ள முக்கியமான பணி” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாட்டை உலுக்கிய வயநாடு நிலச்சரிவு குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல பிரிவு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பான விசாரணையில், `வயநாடு சம்பவத்தை தமிழக அரசு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழக மலையூர்களில் குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்ட மலை கிராமங்கள், நகரங்களில், அரசும் உள்ளாட்சி நிர்வாகமும் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதை தீர்ப்பாயம் தெரிந்துகொள்ள விரும்புகிறது. இதுகுறித்து, தமிழக அரசின் தலைமை செயலர், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை செயலர், தமிழக பேரிடர் மேலாண்மை துறை, நீலகிரி, கோவை கலெக்டர்கள் ஆகியோர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.’ என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88