`மத்திய அரசு Vs கேரள அரசு’ – வயநாடு நிலச்சரிவும் அரசியலும்!

கேரளா மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியிருக்கின்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “யாருமே எதிர்பார்க்காத துயரமான சம்பவம் வயநாட்டில் ஏற்பட்டிருக்கிறது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள், பாதிப்பில் இருப்பவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் வேலைகள் மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகளும் கொடுக்கப்படுகிறது” என்றார்.

இந்த சூழலில் வயநாடு நிலச்சரிவு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஜெபி மாதர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

Wayanad | வயநாடு நிலச்சரிவு

அப்போது பேசிய ஜெபி மாதர், “முன்கூட்டியே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கத் தவறியதால்தான் வயநாட்டில் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றார். இதற்குப் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மத்திய அரசு கனமழை எச்சரிக்கையைக் கடந்த 23-ம் தேதியே கேரளாவுக்கு வழங்கிவிட்டது. மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 9 பட்டாலியன்கள் அங்கு நிறுத்தப்பட்டன. பின்னர் கூடுதலாக மூன்று குழுக்கள் அனுப்பப்பட்டன. மீண்டும் 24, 25-ம் தேதிகளில் எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டது. தொடர்ந்து 26-ம் தேதி அனுப்பப்பட்ட செய்தியில், ’20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும். நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. சேறும் சகதியுமாக மழைநீர் வரலாம். அதில் புதைந்து மக்கள் உயிரிழக்கக் கூடும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்காது” என்றார்.

நாடாளுமன்றத்தில் அனலைக் கிளப்பிய இந்த விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கேரளா முதல்வர் பினராயி விஜயன், “இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை மட்டுமே விடுத்தது. வயநாட்டில் 500 மி.மீ மேல் மழை பெய்துள்ளது. இது வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மிக அதிகம். செவ்வாய்க்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே வயநாடு மாவட்டத்துக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது” என்றார்.

அமித் ஷா, பினராயி விஜயன்

முன்னதாக இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “இந்திய ராணுவம் மீட்புப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதேநேரத்தில் மீட்புப் பணிகள் மற்றும் இயற்கை பேரிடர் தடுப்பு விவகாரங்களில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். பின்னர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வயநாட்டுக்கு வருகை தந்தனர். நிலச்சரிவால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டதுடன், மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வெற்றிச்செல்வன், “முன்கூட்டியே வானிலை முன்னறிவிப்புகளைச் சரியாக வழங்க வேண்டியது, மத்திய அரசுதான். காரணம் ஐஎம்டிஏ, பேரிடர் மேலாண்மை, எர்த் சயின்ஸ், சயின்ஸ் அண்ட் டெக்னலாஜி, இஸ்ரோ ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. இந்த சூழலில்தான், ‘வயநாட்டுக்கான முன்னெச்சரிக்கை வானிலை அறிவிப்பைக் கொடுத்துவிட்டோம். ஆனால் கேரளா அரசு கவனம் செலுத்தவில்லை’ நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார், அமித் ஷா.

வெற்றிச்செல்வன்

கேரளா அரசும் அதை மறுக்கவில்லை. முதல்வர் பினராயி விஜயன், ‘மத்திய அரசு ஆரஞ்சு அலர்ட்தான் வழங்கியது. ஆனால் ரெட் அலர்ட் வழங்கியிருக்க வேண்டும்’ என சொல்கிறார். அவரது கருத்து சரியானதுதான். அதாவது 20 செ.மீ.க்குள் மழை பெய்வதற்குத்தான் அலர்ட் கொடுக்கப்படும். ஆனால் வயநாட்டில் 29, 30-ம் தேதிகளில் 48 மணி நேரத்தில் 57 செ.மீ மழை பெய்துள்ளது. ஆகவே மத்திய அரசு ரெட் அலர்ட் கொடுத்திருக்க வேண்டும். அப்போதுதான் ரெட் அலர்டுக்கு உரிய நடவடிக்கைகளைக் கேரளா அரசு எடுக்கும்.

மத்திய அரசு ஆரஞ்சு அலர்ட் வழங்கியதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டுமே கேரளா அரசு எடுத்திருந்தது. இதேபோல்தான் மத்திய அரசு சரியான வழிகாட்டுதல்களை வழங்காததால் தமிழகத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே வானிலையைக் கணிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை மத்திய அரசு முதலில் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது இந்தியாவிற்கு என்று பிரத்தியேக வானிலை கண்காணிப்பு மாதிரி மத்திய அரசிடம் இல்லை. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், கனடா வழங்கும் தரவுகளை வைத்துக்கொண்டு, அதனுடன் இஸ்ரோவின் செயற்கைக்கோள் தரும் புகைப்படத்துடன் ஒப்பிட்டு முன்னறிவிப்புகளைக் கொடுக்கிறார்கள்.

Wayanad | வயநாடு நிலச்சரிவு

இதன்மூலம் வெளிநாடுகள் வழங்கும் தரவுகளை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். எனவே இந்தியாவுக்கு எனப் பிரத்தியேக வானிலை முன்னறிவிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். மேக் இன் இந்தியா எனப் பேசிக்கொண்டு இருக்கும் நாம் இந்தியாவுக்கு என்று பிரத்தியேக வானிலை கண்காணிப்பு அமைப்பையே உருவாக்கவில்லை. இதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். மேலும் மெசஸ் ஸ்கேல், மைக்ரோ ஸ்கேல் என்கிற இரண்டு கண்காணிப்பு முறைகள் இருக்கின்றன. இதில் மெசஸ் ஸ்கேல் என்கிற முறையில் ஆய்வு செய்யும் போது பரவலான நிலப்பரப்பில் மழை பெய்யும் என்றுதான் கணிக்க முடியும். ஆனால் மைக்ரோ ஸ்கேல் முறையில் துல்லியமாக இந்த ஊரில் இவ்வளவு மழை பெய்யும் எனக் கண்காணிக்க முடியும். ஆனால் மெசஸ் ஸ்கேல் முறையில்தான் நமது வானிலை கண்காணிப்பு இருக்கிறது. ஆகவே மைக்ரோ ஸ்கேல் முறையில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88