கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாநில சுகாதாரத்துறையின் சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில்தான் நடக்கின்றன. இதில் 59 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. சுகாதாரத்துறையின் சீரிய செயல்பாட்டின் காரணமாக, கடந்த ஓராண்டில் மகப்பேறு சிகிச்சை மற்றும் பிரசவத்தில் உயிரிழப்புகள் இல்லாத மாவட்டமாக விருதுநகர் சுகாதார மாவட்டம் சாதனை படைத்துள்ளது.
ஆகவே, பெண்களின் மகபேறுக்கால சிகிச்சை மற்றும் சுகாதார செயல்பாட்டில், விருதுநகர் மாவட்டத்தைப் பிற மாவட்டங்கள் பின்பற்ற வேண்டும்” எனக்கூறி விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை மருத்துவர்கள், பணியாளர்களுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார். அரசு மருத்துவமனைகளின் சேவை மற்றும் தரத்தின் வெளிப்பாடாக அமைந்த இந்த சாதனையை, தமிழ்நாடு அரசின் சுகாதார செயல்பாட்டின் மைல் கல்லாக மாற்றிய விருதுநகர் மாவட்ட பணியாளர்களுக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மகப்பேறு காலத்தில் தாய்-சேய் நலன் காக்கவும், பிரசவத்தின்போது இறப்புகளைத் தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, கர்ப்பிணிப் பெண்களுக்குப் பேறுகால ஊட்டச்சத்து பெட்டகம், தாய்-சேய் நலப் பெட்டகம், பிரசவக் கால முன்-பின் கவனிப்புகள், கர்ப்பிணிப் பெண்கள் நலன் காக்க உதவித்தொகை, தாய்-சேய் நலப் பிரசவத்தினை நினைவூட்டும் புகைப்படப் பரிசு எனப் பல்வேறு நடவடிக்கைகளைச் சுகாதாரத்துறை மூலமாகத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், ஒரு சில எதிர்பாரா சமயங்களில் பிரசவத்தின்போது நிகழும் தாய் அல்லது சிசு இறப்பு சம்பவங்கள் பாதுகாப்பான பிரசவத்தினைக் கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது. இந்நிலையில் கடந்த ஓராண்டில், விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் மகப்பேறு சிகிச்சையில் இறப்பு எதுவும் இல்லை எனும் சாதனை தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மருத்துவ பணியாளர்களும் மெச்சிக்கொள்ளும் அம்சமாக மாறியிருக்கிறது.
இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களிடம் பேசினோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “தமிழ்நாட்டில் மகப்பேறுவின்போது ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சுகாதாரத்துறை மாவட்ட வாரியாகவும் மகப்பேறு சிகிச்சை கால இறப்பு விகிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்தவகையில், விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு எதுவும் இல்லை என்ற பாதையை உருவாக்கி மருத்துவ பணியாளர்கள் புது சாதனை படைத்துள்ளனர். விருதுநகர் வருவாய் மாவட்டத்தில், சுகாதார அமைப்புகளின் அடிப்படையில் விருதுநகர் சுகாதார மாவட்டம், சிவகாசி சுகாதார மாவட்டம் என இரண்டு சுகாதார மாவட்டங்கள் உள்ளன.
இதில், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் மட்டும் மகப்பேறு கால சிகிச்சையில் 2 தாய்கள் உயிரிழந்துள்ளனர் (கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான அறிக்கைப்படி). விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் மொத்தம் 22 ஆரம்பச் சுகாதார மையங்கள் உள்ளன. இங்குக் கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் 2024 மார்ச் மாதம் வரை மொத்தம் 7,991 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தப் பிரசவ நிகழ்வுகள் அனைத்திலுமே தாய், சேய் நலம் காக்கப்பட்டுள்ளது. இதுவே, கடந்த 2022-2023 ஆண்டு அறிக்கைப்படி, விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் மொத்தம் 8,483 குழந்தைகள் பிறந்ததில், 6 குழந்தைகளின் தாய்கள் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தமுறை, கடந்த ஓராண்டில் மகப்பேறு சிகிச்சையில் இறப்பு இல்லாத முதல் மாவட்டமாக, விருதுநகர் சுகாதார மாவட்டம் உருமாறியிருப்பது பெருமைக்குரிய அம்சமாகும். இந்த சாதனைக்கு வழிகோலிய தமிழ்நாடு அரசு, மாவட்ட ஆட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் ஊக்கப்படுத்திய அனைவருக்குமே நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் கூறினர்.