பேரவையில் குட்கா!
கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை பேரவைக்குள் எடுத்துச் சென்றதாக இன்றைய முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்ய சொல்லி திமுக தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. அடிப்படை தவறுகளைச் சுட்டிக்காட்டி ரத்து செய்யவேண்டும் என்ற திமுக தரப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், நோட்டீஸை ரத்து செய்தது. மேலும், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருந்தால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பலாம் என்று கூறியது.
இதனடிப்படையில் ஸ்டாலின் உட்பட அனைவர்க்கும் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மீண்டும் திமுக தரப்பு அந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தை நாடியது. இரண்டாவது நோட்டீஸையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம். இதனை எதிர்த்து சட்டமன்ற செயலாளர் தரப்பில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மீண்டும் விசாரணை!
கடந்த ஜூன் மாதம் வழக்கு விசாரணைக்கு வரும்போது இந்த மேல்முறையீடு வழக்கைத் திரும்பப் பெறுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. அதற்கு, “கடந்த அரசில் தொடரப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறுவது நியாயமற்றது. இதற்கு அனுமதி கொடுத்தால் மக்கள் என்ன நினைப்பார்கள். அவர்களும் இதேபோன்ற கோரிக்கையை முன்வைக்கக் கூடும் என்று சொல்லி அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கவேண்டும்” என்று நீதிபதிகள் கடுமையாகப் பேசியிருந்தனர். மீண்டும் ஜூலை மாதம் நோட்டீஸ் அனுப்பப்படாத மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பச் சொல்லியது. விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “அரசியலமைப்பு சட்டத்தின்படி, பதவிக்காலம் முடிந்தவுடன் சட்டமன்றம் கலைந்துவிடும். நிலுவையில் உள்ள மசோதா முதல் உரிமை மீறல் நடவடிக்கைகள் காலாவதியாகிவிடும் என்று பல்வேறு தீர்ப்புகள் தெரிவிக்கிறது. இந்த விவகாரம் குறித்து தற்போதைய சட்டமன்றம் விசாரிக்க முடியாது” என்றார். மேலும், கடந்த ஆட்சியில் உரிமைக் குழுவின் தலைவராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, “உரிமைக் குழுவின் பதவிக்காலம் முடிந்திருந்தாலும், நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வழங்கவேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்திருந்தார்.
நீதிமன்றத் தீர்ப்பு..!
விசாரணைகளில், “உரிமை மீறல் போன்ற நடவடிக்கைகள் எப்படி காலாவதியாகும்.” என்று பல்வேறு கருத்து தெரிவித்திருந்த நிலையில் கடந்த ஜூலை 31-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்திருந்தனர் நீதிபதிகள். அதில், “உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றது தொடர்பாக உரிமைக் குழு எதிர் மனுதாரர்கள் 18 உறுப்பினர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் மீது விசாரணை நடத்தவேண்டும். மேலும் உறுப்பினர்கள் அனைவரும் உரிமை குழுவினரிடம் உரியப் பதிலளிக்க வேண்டும். சட்டமன்ற விதிகளைப் பின்பற்றி உரிமைக் குழு விசாரணை நடத்தித் தகுந்த முடிவை எடுக்கவேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து சட்டமன்ற அலுவலர்கள் சிலரிடம் பேசினோம். “நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதனை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதும், செல்லாததும் சபாநாயகரின் முடிவு. அது சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இதில் இரண்டு வகையான நடவடிக்கைகளுக்கு வாய்ப்பிருக்கிறது. ஒன்று எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கவும் முடியும். மற்றொன்று, சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை செய்வது. அந்த நபர்களின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் கொடுக்க முடியும். விசாரணை முடிந்து இதில் ஒன்றுமில்லை என்று சொல்லவும் வாய்ப்பிருக்கிறது. அதேசமயத்தில் உரிமைக் குழுவில் அதிமுக உறுப்பினர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். அதனால் விசாரணை சமயத்தில் அதிமுக தரப்பு குடைச்சல் கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. சட்டமன்ற நடவடிக்கை என்பது சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதிமுக அழுத்தம் கொடுத்தாலும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் சபாநாயகரின் கையிலேயே இருக்கிறது” என்றார்கள்.
என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88