US Election:`கமலா ஹாரிஸ் இந்தியரா, ஆப்ரிக்க அமெரிக்கரா?’ – ட்ரம்ப் விமர்சனமும் வெள்ளை மாளிகை பதிலும்

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. ஜனநாயகக்கட்சி தரப்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி தரப்பில் டொனால்ட் ட்ரம்பும் அதிபர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கிடையில், கமலா ஹாரிஸுக்கு மக்கள் மத்தியில் சாதகமான சூழல் நிலவுவதாக சில கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. அதை உறுதிப்படுத்தும் விதமாக, கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக பைடன் முன்மொழிந்த முதல் வாரத்தில் மட்டும், தேர்தல் பிரசார நிதியாக 200 மில்லியன் டாலர் திரண்டது பேசுபொருளானது.

கமலா ஹாரிஸ்

இந்த நிலையில், சிகாகோவில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆப்ரிக்க அமெரிக்க பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது அவரிடம் ‘நிறவெறி கருத்துகளை வெளிப்படுத்திய அதிபர் வேட்பாளரை எதன்காரணமாக நாங்கள் ஆதரிக்க வேண்டும்?’ எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப், “கமலா ஹாரிஸ் ஆப்ரிக்க அமெரிக்கர் என அவர் தன்னை வெளிப்படுத்தியதை விட இந்திய வம்சாவளி என்றே அடையாளப்படுத்திக்கொண்டார். பின்பு திடீரென தன்னை ஆப்ரிக்க அமெரிக்கர் எனக் காட்டிக்கொள்கிறார். அவரின் இந்த அடையாள மாற்றத்தை நாம் கவனிக்க வேண்டும். நான் அனைவரையும் மதிக்கிறேன், ஆனால் கமலா ஹாரிஸ் இந்தியரா… ஆப்ரிக்க அமெரிக்கரா… என்பதில் வெளிப்படையானவராக இல்லை” எனக் குறிப்பிட்டார்.

டொனால்ட் ட்ரம்ப் இதற்கு முன்பும் இதே போன்ற கருத்துகளை பேசியிருக்கிறார். அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா இருந்தபோது, ‘பராக் ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை” எனக் குற்றம்ச்சாட்டி பிரசாரம் செய்திருந்தார். தற்போது அதே போன்ற ஒரு கருத்தை கமலா ஹாரிஸ் மீதும் முன்வைத்திருக்கிறார்.

டொனால்ட் ட்ரம்பின் கருத்தை கடுமையாக கண்டித்து மறுத்த வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர், “டொனால்ட் ட்ரம்பின் கருத்து அவமதிப்பதாகும். ஒருவரின் அடையாளம் குறித்து அது சம்பந்தப்பட்டவர் மட்டுமே பேச முடியும்.

டொனால்ட் ட்ரம்ப்

ஒருவரை, அவர்கள் யார், அவர்கள் தங்கள் அடையாளத்தை எப்படி வெளிக்காட்டுகிறார்கள் என்று சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அது அவரவர்களின் சொந்த முடிவு. அவர்களால் மட்டுமே தன் அனுபவத்தை பேச முடியும். தற்போது விமர்சிக்கப்பட்டவர் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி, அவரின் பெயருக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும்” எனக் காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88