வேலூர்: ராமதாஸ் குறித்து அவதூறு வீடியோ; திமுக பேச்சாளர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!- என்ன நடந்தது?

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்தவர் குமரன். தி.மு.க-வில் பேச்சாளராகவும், கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராகவும் இருந்து வந்த குமரன், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் மூத்த அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் ஆகியோர் குறித்து தகாத வார்த்தைகளால் பேசிய ஆடியோ வெளியானதால், தி.மு.க-வில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டார். கட்சியில் இருந்து ஓரங்கப்பட்ட ஆத்திரத்தில், அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறாக பேசி குறித்து தொடர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு வந்தார் குமரன்.

குடியாத்தம் குமரன்

இதையடுத்து, 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் குறித்து தகாத வார்த்தைகளால் திட்டி ஆடியோ வெளியிட்டதால், குமரன் கைதுசெய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த பிறகும், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பூவை ஜெகன்மூர்த்தி குறித்து அவதூறாக பேசி மீண்டும் காவல் நிலையம் சென்றார். தொடர்ந்து, அ.தி.மு.க பேச்சாளரும், நடிகையுமான விந்தியா குறித்தும் அவதூறாகப் பேசியதால், சென்னை சைபர் க்ரைம் போலீஸார், குமரன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே, அமைச்சர் துரைமுருகனிடம் `மன்னிப்பு’ கேட்டதால், மீண்டும் அவர் தி.மு.க-வில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். சில மாதங்கள் அமைதியாக இருந்த குமரன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் குறித்து கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார். இதையடுத்து, இரண்டாவது முறையாக தி.மு.க-வில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருக்கிறார் குமரன்.

பா.ம.க-வினர் புகார்

இந்த நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், அந்தக் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குறித்து கடந்த சில நாள்களாக தகாத வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டு வருகிறார் குமரன். குறிப்பிட்ட ஒரு யூடியூப் சேனலில் அந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, குமரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ம.க-வின் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கே.எல்.இளவழகன் தலைமையில் அந்தக் கட்சியினர் வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்திருக்கின்றனர். இதேபோல, குடியாத்தம் காவல் நிலையத்திலும் பா.ம.க சார்பில் குமரனை கைது செய்யக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பா.ம.க-வினர் தன்னை அச்சுறுத்துவதாக போலீஸாரிடம் குமரன் தெரிவித்ததையடுத்து, குடியாத்தத்திலுள்ள அவரது வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.